வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (11/08/2017)

கடைசி தொடர்பு:13:45 (11/08/2017)

விடுமுறைப் பட்டியலிலிருந்து காந்தி ஜெயந்தி நீக்கம்! சர்ச்சையில் ராஜஸ்தான் அரசு

விடுமுறைப் பட்டியலிலிருந்து காந்தி ஜெயந்தியை நீக்கி, புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது ராஜஸ்தான் அரசு. 

ராஜஸ்தான் மாநில பல்கலைக்கழகங்களுக்கு வேந்தர், ஆளுநர் கல்யாண் சிங் கையொப்பத்துடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ விடுமுறை தினப் பட்டியலில், காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர்-2 இடம்பெறவில்லை. அக்டோபர் மாதத்தில் மொஹரம் மற்றும் தீபாவளி ஆகிய பண்டிகைகள் மட்டுமே விடுமுறை தினங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதுதொடர்பாகப் பேசிய ராஜஸ்தான் மாநில ஆளுநர் மாளிகையின் செய்தித்தொடர்பாளர், மாநில அரசின் விடுமுறை தினங்கள் பட்டியலை அடிப்படையாகக்கொண்டே பல்கலைக்கழகங்களுக்கான விடுமுறை தினங்கள் பட்டியலும் தயாரிக்கப்பட்டதாகவும், இதில் ஆளுநர் மாளிகையின் தரப்பில் எதுவும் செய்வதற்கில்லை என்றும் கூறினார். அதேநேரம், ராஜஸ்தான் மாநில பழங்குடியினப் பாடகர் ராம்தேவ், குருநானக், அம்பேத்கர் உள்ளிட்டோர் பிறந்த தினங்கள், விடுமுறை தினங்களாக அந்தப் பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளன. விடுமுறை தினங்கள் பட்டியலில் காந்தி ஜெயந்தி இல்லாததால், அன்றைய தினம் ராஜஸ்தான் மாநில பல்கலைக்கழகங்கள் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

ஜவஹர்லால் நேரு, மகாத்மா காந்தி ஆகியோரை மையமாகக்கொண்ட சர்ச்சைகளில் ராஜஸ்தான் மாநில அரசு சமீபத்தில் சிக்கியது. நாட்டின் முதல் பிரதமர் நேரு குறித்த தகவல்களைப் பள்ளி அளவிலான வரலாற்றுப் புத்தகங்களிலிருந்து நீக்கியது மற்றும் காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே குறித்த தகவல்களை நீக்கியது போன்ற சம்பவங்கள், சர்ச்சையைக் கிளப்பின. இந்த நிலையில், காந்தி ஜெயந்தி விவகாரம் ராஜஸ்தான் மாநிலத்தை ஆளும் பா.ஜ.க அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.