வெளியிடப்பட்ட நேரம்: 03:57 (13/08/2017)

கடைசி தொடர்பு:03:57 (13/08/2017)

63 குழந்தைகள் பலி... என்ன சொல்கிறார் யோகி ஆதித்யநாத்?

உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. அந்த மருத்துவமனையில் கடந்த இரு தினங்களாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 63 குழந்தைகள் உயிரிழந்தனர். ஆக்ஸிஜன் வழங்கியதை நிறுத்தியதால்தான் குழந்தைகள் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஆதித்யநாத்


குறிப்பாக, இந்த சம்பவம் நடந்த மருத்துவமனையில் கடந்த சில நாள்களுக்கு முன்புதான் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆய்வு செய்திருந்தார். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து அவர் செய்தியாளர்களிடம், "ஆக்ஸிஜன் குறைபாட்டால் இந்த சம்பவம் நடைபெறவில்லை.


ஆக்ஸிஜன் ஒப்பந்தம் கடந்த ஆட்சியில் வழங்கப்பட்டது. இது தொடர்பாக அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும், மருத்துவமனையிலும் இரண்டு அமைச்சர்களை விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். அப்படியிருக்கையில், ஆக்ஸிஜன் குறைபாடு என்று செய்தி வருவது வருத்தமளிக்கிறது. 


இந்த சம்பவத்தில், ஆக்ஸிஜன் சப்ளை செய்தவர்களின் பங்கு என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். ஆக்ஸிஜன் சப்ளை செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, இந்த சம்பவம் தொடர்பாக என்னிடம் பேசியுள்ளார். அவர், 'மாநில அரசுக்கு மத்திய அரசு இதில் உறுதுணையாக இருக்கும்' என்று உறுதியளித்துள்ளார். அந்த மருத்துவமனையின் கல்லூரி முதல்வரை சஸ்பெண்ட் செய்துள்ளோம்" என்றார்.