பெண்ணும்...சுதந்திரமும்...! - ஒரு நிமிடத்தில் எடுத்துச் சொன்ன குறும்படங்களின் விழா

பெண் சுதந்திரம் ஒருநிமிடக் குறும்படம்

ன்னும் இரண்டு நாள்களில் கொண்டாடப்பட இருக்கிறது, நாட்டின் சுதந்திர தினம்! பிரிட்டன்காரர்களிடமிருந்து நாட்டின் முன்னோடித் தலைவர்கள் பெற்றுத் தந்த சுதந்திரம் நமக்கு முழுவதுமாகக் கிடைத்துவிட்டதா? இந்த நாட்டில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் சுதந்திரம் முழுமையாக இருக்கிறதா?. வேகம் மிகுந்த வாழ்க்கையில் நமக்குநாமே சங்கிலி இட்டுக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும்போது சுதந்திரம் பற்றியெல்லாம் யோசிக்க நேரம் இருக்காதுதான்! 

எதைப்பற்றிப் பேசுகிறோமோ இல்லையோ, தற்கால சூழலில் பெண்களுக்கான சுதந்திரத்தைப் பற்றி அதிகம் பேசவேண்டியதும் விவாதிக்க வேண்டியதும் அவசியம். பின்னே!.. சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் கழித்தும் சக பாலினம் பாதுகாப்பற்ற சூழலில்தான் உயிர்வாழ்கிறது என்பது எத்தகையதொரு அவலம்! 

இதனைத் தனது ஒரு நிமிடக் குறும்படத் திரையிடல் வழியாக விவாதத்துக்குக் கொண்டுவந்துள்ளது, எச்.ஆர்.எஃப். அமைப்பு. இந்திய அளவில் மொத்தம் 27 ஒரு நிமிடக் குறும்படங்கள், திரையிடலுக்காகத் தேர்வுசெய்யப்பட்டு இருந்தன. பெண்கள், திருநங்கையர் தொடர்பான  ஒரு நிமிட ஆவணங்களும் இதில் அடக்கம். சென்னை லயோலா கல்லூரி பேராசிரியர் காளீஸ்வரனின் கலைக்குழுவினர், தமிழர் கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம் நிகழ்த்த.. விழா தொடங்கியது.

லயோலா மாணவர்களின் கலைநிகழ்ச்சி

திரையிடப்பட்ட படங்களில், முதல் மூன்று இடங்களில் வந்தவை, ஜெயச்சந்திர ஹஷ்மி இயக்கிய ‘களவு’, ஸ்வேதா இயக்கிய ‘அகம்’,  அங்கித் இயக்கிய ‘இந்தியாஸ் சூப்பர் உமன் (India's Super Woman) ஆகிய படங்கள்.  

‘களவு’, மதத்தின் பெயராலும் அதன் கட்டுப்பாடுகளின் பெயராலும் பெண்கள் ஒடுக்கப்படுவதைப் பேசுகிறது. ‘அகம்’, நெருப்பினால் ஏற்பட்ட விபத்துகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையை ஒரு நிமிட ஆவணமாகக் காண்பித்தது. மற்றொரு சிறப்பு, பாதிக்கப்பட்ட பெண்களே வந்து விருதைப் பெற்றுக்கொண்டது! 

விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய பெண்களில் ஒருவர், “நாங்கள் நெருப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள். சுதந்திரம் என்றால் என்ன என்பதை நன்கு உணர்ந்திருக்கிறோம். எந்தச் சூழலும் எங்களை ஒடுக்கிவிட முடியாது” என்று அரங்கமே அதிரும்படி உணர்ச்சி பொங்கப் பேசினார்.

இந்தியாஸ் சூபர் உமன் (India's Super Woman) படமானது, குழந்தைகள் நடித்தது. திரையிடப்பட்ட படங்களிலேயே சற்று வித்தியாசமானதும்கூட! இன்றளவும் கொண்டாடப்படும் இந்திரா காந்தி, அன்னை தெரசா போன்றவர்களுக்கிடையே, யார் உண்மையான இந்திய சூப்பர் உமன் என்பதுதான் கேள்வி. அதற்கான பதிலை இப்படம் தருகிறது. 

முதல் பரிசு வென்ற களவு குறும்படம்

திரையிடல் முடிந்ததும் ‘களவு’ படத்தின் இயக்குநர் ஹஷ்மி பேசுகையில்,“சுதந்திரம் தருகிறோம் என்பதே ஒரு ஆதிக்கத்தன்மை உடையது. அனைத்து விஷயங்களிலுமே சுயமாக முடிவெடுக்கும் உரிமை பெண்ணுக்கு உண்டு; அது தரப்படவேண்டியது இல்லை; அவர்களால் உணரப்பட வேண்டியது. தற்கால சூழலில் பொதுவாக சினிமா போன்ற காட்சி ஊடகங்கள், காதலை பெண்கள்  நிராகரித்தாலே அவர்களைத் தவறானவர்களாகவும் அவர்களைப் பற்றி இழிவாகப் பாடல்கள் பாடியும்தான் சித்திரிக்கின்றன; இதற்கு ரசிகர்களின் கைதட்டல்கள் வேறு! பெண்கள் சுயமாக முடிவெடுப்பது தவறு என்பதை தற்போதைய திரைப்படங்களும் மறைமுகமாக அங்கீகரிக்கின்றன. இந்தத் தவறான சூழலைப் போக்க, பெண்கள் குறித்தான அவர்களின் சுதந்திரம் பற்றி பேசும் மாற்று திரைப்படங்கள் இன்னும் வரவேண்டும்” என்றார். 

“பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான்

புவி பேணி வளர்த்திடும் ஈசன்

மண்ணுக்குள்ளே சில மூடர்

நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார் ”

                                                                       - பாரதியார்

எழுபது ஆண்டுகள் கடந்தும் பொருத்தமாக இருக்கிறது, இந்தப் பாடல்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!