“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy | "They care about cows... not children?" People are upset

வெளியிடப்பட்ட நேரம்: 14:48 (14/08/2017)

கடைசி தொடர்பு:14:48 (14/08/2017)

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy

சிசுக்கள் மரணம்

த்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கடந்த ஒரு வாரத்தில் அடுத்தடுத்து 70 சிசுக்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பச்சிளம் குழந்தைகளைப் பறிக்கொடுத்த பெற்றோர்களின் அழுகுரலுக்கு, மத்திய மாநில அரசுகள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்ற வாதமும் வலுத்துவருகிறது. இந்நிலையில் பச்சிளம் குழந்தைகளின் உயிரிழப்பு குறித்தும், இனி இதுபோன்ற நிகழ்வு இந்தியாவில் நிகழாமல் இருக்கவும் அரசு செய்ய வேண்டிய விஷயங்களை அழுத்தமாகக் கூறுகிறார், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்.

“பாபா ராகவ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 70 பச்சிளம் குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணம், ஆக்ஸிஜன் விநியோகம் நிறுத்தப்பட்டதுதான். இன்றைய பொருளாதாரச் சூழலில் தனியார்டாக்டர் இரவீந்திரநாத் நிறுவனத்தார், யாருக்கும் நீண்ட கால இலவச சேவையை  வழங்க முடியாது. அப்படித்தான் ஆக்ஸிஜன் விநியோகிக்கும் நிறுவனத்துக்கு அம்மாநில அரசு செலுத்தவேண்டிய ரூ.67 லட்சம் தொகையை செலுத்தாததால், ஆக்ஸிஜன் விநியோகிக்கும் நிறுவனமும் மருத்துவமனைக்கான தன் சேவையை நிறுத்தியுள்ளது. இதுவே ஒருவாரத்துக்குள் 70 பச்சிளம் குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்திருக்கிறது. அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை பிரச்னையை கவனிக்கத் தவறியிருக்கிறார் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர். பசு மாடுகளுக்கு இன்ஸூரன்ஸ், ஆம்புலன்ஸ் வசதியெல்லாம் செய்யும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அரசு மருத்துவமனையில் நடக்கும் தவறுகளைக் கண்டறிந்து உயிரிழப்புகள் நடைபெறாமல் இருக்க வழிசெய்யாமல், அரசின் தவறை மூடி மறைக்கிறார்.

‘ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் இறக்கவில்லை. சில குழந்தைகளைத் தவிர மற்றக் குழந்தைகள் மூளை வீக்கப் பிரச்னையால்தான் உயிரிழந்திருக்கின்றனர்' என உத்தரப் பிரதேச மாநில அரசு சொல்வது தன் தவறை மறைக்கச் சொல்லும் வாதம். மேலும், கிழக்கு உத்தரப்பிரதேசப் பகுதியில் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் பிரச்னை இருப்பதாகக் கூறுகின்றனர். ஒருவேளை மூளைக் காய்ச்சல் பரவினால், அதற்கு உரிய தடுப்பூசியை அளித்து குழந்தைகளைக் காப்பதுதானே அரசின் கடமை. அதைச் செய்யாமல், மூளைக் காய்ச்சல் மற்றும் மூளை வீக்கப் பிரச்னையால்தான் குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக உ.பி அரசு சொல்வது எவ்வளவு மோசமான வாதம். தன் தவறை உணர்ந்து, இனி இதுபோன்ற தவறு நடக்காது என்ற உத்தரவாதத்தை பொதுமக்களுக்கு வழங்காமல், தான் செய்த தவறு அப்பட்டமாகத் தெரிந்திருந்தும் அதை மறைக்கவே அம்மாநில அரசு முயல்கிறது.

சிசுக்கள் மரணம்

பாபா ராகவ் தாஸ் மருத்துவமனை டீன், ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதை நிச்சயம் அரசின் கவனத்துக்குக் கொண்டுசென்றிருப்பார். ஆனால், பிரச்னை வந்தால் பார்த்துக்கொள்வோம் என அரசு அதிகாரிகளும், அரசு நிர்வாகமும் இருந்திருப்பதே 70 குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணம். குறிப்பாக, அம்மருத்துவமனையின் குழந்தைகள் நலப்பிரிவு நோடல் அலுவலரான மருத்துவர் காஃபீல் கான், தனது நண்பரின் க்ளீனிக்கில் இருந்து மூன்று ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மருத்துவமனைக்கு வரவழைத்தும், வெளியில் இருந்தும் ரூ.10,000 கொடுத்து 9 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கியுள்ளார். இந்த மருத்துவரின் செயலால், பல குழந்தைகளின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கிறது. ஆனால், மருத்துவர் காஃபீல் கானை, நோடல் ஆஃபிஸர் பொறுப்பிலிருந்து அம்மாநில அரசு நீக்கியிருக்கிறது. இப்படி அரசு செய்தால், நல்லது செய்யும் எண்ணமும் பல மருத்துவர்களுக்கு வராமலே போகும்" என்பவர், அரசு செய்யவேண்டிய அடிப்படை விஷயங்களை முன்வைக்கிறார்.

"தேவைக்குக் குறைவான அரசு மருத்துவர்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஏராளமான அரசு மருத்துவமனைகள் இயங்கிவருகின்றன. இதனால் ஒரே டாக்டர் ஏராளமான நோயாளிகளைக் கவனித்து சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. அத்துடன் தங்களுக்கான ஊதியம் குறைவாக இருப்பதால், பெரும்பாலான அரசு மருத்துவர்கள் தனியாக கிளீனிக்குகளை வைத்திருக்கிறார்கள். இதனால் அரசு மருத்துவமனையிலிருக்கும் நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை அளிக்காமல், தங்கள் கிளீனிக்குகளுக்கு வரும் நோயாளிகளின் மீதே கூடுதல் அக்கறை செலுத்துகின்றனர். இப்படி அரசு நிர்வாகமும், அரசு மருத்துவர்கள் பலரும் செய்வது அப்பட்டமான தவறாகும். ஆனால், பாதிக்கப்படுவதோ ஏழை பொதுமக்களும், குழந்தைகளும்தான். குறிப்பாக, இன்னும் வட மாநில கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்த பல ஏழை மக்கள் உடல்நிலை சரியில்லாதவர்களைத் தோல்மீது சுமந்தும், சைக்கிள் மற்றும் பைக்கிலும் வைத்துதான் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்கிறார்கள். அந்த அளவுக்கு இன்னும் நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் முழுமையான மருத்துவச் சேவை சென்றடையாமல் இருக்கிறது. இதற்கெல்லாம் அரசின் மெத்தனம்தான் காரணமாக இருக்கிறது. எனவே, அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, போதுமான நிதியை ஒதுக்கி மருத்துமனைகளின் தரத்தை அதிகப்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கு பொது சுகாதார விழிப்பு உணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பமும் தங்கள் வருமானத்தில் 5 சதவிகிதத்தை மருத்துவச் செலவுகளுக்கு செலவழிக்கின்றனர். இதனால் தங்கள் வருமானத்தில் பெரும்தொகை மருத்துவத்துக்காக செலவழிப்பதால், மற்ற தேவைகளுக்கு உரிய செலவீனங்களை ஒதுக்க முடியாமல் போகிறது. ஆனால், கல்வி, மருத்துவமும் அரசு மக்களுக்கு இலவசமாக வழங்கவேண்டிய சேவை. இதை எத்தனை முறை சொன்னாலும், அரசு செவிசாய்க்காமலேயே இருக்கிறது. உ.பி குழந்தைகள் உயிரிழப்பைப்போலவே, பல வருடங்களுக்கு முன்பு திருச்சியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் சில குழந்தைகள் உயிரிழந்தனர். அதேபோல தர்மபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் போதிய வசதியில்லாததால் அங்கு பல குழந்தைகள் உயிரிழந்தனர். இப்படித் தொடர்ந்து நாடு முழுக்க அரசு மருத்துவமனைகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான நோயாளிகள் உயிரிழப்பது வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது.

பசு மாட்டின் மேல் காட்டும் கரிசனத்தை குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் மீது அரசு செலுத்துவதில்லை. இனியாவது பச்சிளம் குழந்தைகளின் உயிரை வைத்து அரசியல் செய்யாமல், மத்திய, மாநில அரசுகள் மக்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற சம்பவம், இனி நாட்டில் எங்கும் நடக்காமல் இருக்க வேண்டும். நம் நாட்டில் ஏழை மக்கள்தான் அதிகம் வசிக்கின்றனர். அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளைத் தவிர வேறு அடைக்கலம் இல்லை. அதனால், அரசு மருத்துவமனைகளின்மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட அரசு வழிசெய்யவேண்டும்" என்கிறார்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close