மின்சாரக் கட்டணம் ரூ.38 ஆயிரம் கோடி!

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ரூ.38 ஆயிரம் கோடிக்கு மின்சாரக் கட்டணத்துக்கான பில் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜாம்ஷெட்பூரில் வசித்து வரும் பி.ஆர். குஹா என்பவர் மின்சாரக் கட்டணம் பாக்கி வைத்துள்ளதாகக் கூறி அவருக்கு மின் கட்டணத்துக்கான பில் ஜார்க்கண்ட் மாநில மின்சார வாரியத்தால் அளிக்கப்பட்டது. மேலும், மின் கட்டணம் பாக்கி வைத்துள்ளதால், அவரது வீட்டு மின் இணைப்பையும் அதிகாரிகள் துண்டித்தனர். இதையடுத்து மின் கட்டண பாக்கி எவ்வளவு என்று பில்லைப் பார்த்த பி.ஆர்.குஹா குடும்பத்தினருக்கு மாரடைப்பு வராத குறைதான். காரணம் அவர்களுக்கு வழங்கப்பட்ட பில்லில், மின் கட்டண பாக்கி என்ற இடத்தில் ரூ.38 ஆயிரம் கோடி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து பேசிய குஹா, மின்சார வாரியம் அளித்த ரசீதில் பாக்கித் தொகை என்ற இடத்தில் இருந்த தொகையைப் பார்த்து குடும்பத்தில் அனைவரும் அதிர்ச்சியடைந்துவிட்டோம். மூன்று அறைகள் கொண்ட வீட்டில் நாங்கள் வசித்து வருகிறோம். எங்களது வீட்டில் 3 மின்விசிறிகள் இருக்கின்றன. அவற்றுடன் மின் விளக்குகள் மற்றும் டி.வி. ஒன்றும் இருக்கிறது. அப்படி இருக்கும்போது இவ்வளவு பெரிய தொகை மின்சாரக் கட்டணமாக வந்தது எப்படி என்று அதிர்ச்சி விலகாமல் அவர் கேள்வி எழுப்புகிறார். இந்த விவகாரம் தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில மின்சார வாரியத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து பேசிய குஹாவின் மகள் ரத்னா பிஸ்வாஸ், என் பெற்றோர்கள் இருவருமே உடல் நலமில்லாதவர்கள். மின்கட்டண ரசீது விவகாரத்தில் அண்டை வீட்டார் உதவி இருந்ததால்தான் புகார் அளிக்க முடிந்தது என்றார் வேதனையுடன்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!