கார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட் நோட்டீஸ் தடைக்குத் தடை!

கார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட் நோட்டீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கார்த்தி சிதம்பரம்

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் சிக்கியுள்ள கார்த்தி சிதம்பரம் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்பிருப்பதாகக் கூறி, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. அவர் உள்ளிட்ட 4 பேர், தேடப்படும் நபராக உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தனர். இதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அரசியல் காரணங்களுக்காக லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக கார்த்தி சிதம்பரம் தரப்பில் வாதிடப்பட்டது.

இம்மாத இறுதியில் வெளிநாடு செல்ல வேண்டி இருப்பதால் லுக் அவுட் நோட்டீஸுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. கார்த்தி சிதம்பரம் தரப்பு வாதத்தை ஏற்ற உயர் நீதிமன்றம், அவர் மீதான லுக் அவுட் நோட்டீஸுக்கு செப்டம்பர் 4-ம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்தநிலையில், சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காகக் கருதி உச்ச நீதிமன்றம் இன்றைய தினமே விசாரித்தது. இந்த விசாரணையின்போது கார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட் நோட்டீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!