செருப்புக்கடையில் வேலை பார்த்த செல்வந்தர் வீட்டுப்பிள்ளை! - குஜராத்தில் ஒரு 'ரஜினி' | Crorepati turns to labour for a month in gujarat state

வெளியிடப்பட்ட நேரம்: 18:13 (15/08/2017)

கடைசி தொடர்பு:18:13 (15/08/2017)

செருப்புக்கடையில் வேலை பார்த்த செல்வந்தர் வீட்டுப்பிள்ளை! - குஜராத்தில் ஒரு 'ரஜினி'

ஹிதாரி

கோடீஸ்வர வீட்டுப்பிள்ளைகள் ஏதோ ஒரு நிர்ப்பந்தத்தில் தன் சொத்துக்கள் மற்றும் சொந்த பந்தங்களை விட்டு வெளியேறி சாதாரண ஒரு வாழ்க்கை வாழ்வதை சினிமாக்களில் மட்டுமே கண்டிருப்போம்.

'நீதிக்குத் தலைவணங்கு' படத்தில் படோடோபமாக பொறுப்பின்றி வாழும் தன் மகன் எம்.ஜி.ஆரை அவரது தந்தை வீட்டை விட்டு வெளியேற்றிவிடுவார். வெளியே சென்று அவர் இயல்பு வாழ்க்கையை வாழ்ந்து சாதாரண மனிதர்களின் துயரங்களை புரிந்துகொள்வார். 'தம்பிக்கு எந்த ஊரு' படத்திலும் பெரும் பணக்கார வீட்டில் பிறந்த ரஜினி பொறுப்பின்றி சுற்றித்திரிவதைக் கண்டிக்கும் அவரது தந்தை ஒருகட்டத்தில், “சாதாரண ஒரு வாழ்க்கையை வாழ்ந்து காட்டு” என சவாலாகச் சொல்லி வீட்டை விட்டு  மகன் ரஜினியை துரத்திவிடுவார். சமீபத்தில் வெளியான 'பிச்சைக்காரன்' படத்திலும் தன் தாயின் உடல்நோயை தீர்க்க  பரிகாரமாக குறிப்பிட்ட நாட்கள் பிச்சைக்காரனாக வாழ்வார் பணக்கார வீட்டுப்பிள்ளையான விஜய் ஆண்டனி.

இப்படி சினிமாக்களில் நாம் பார்த்து ரசித்த கதை நிஜத்தில் குஜராத்தில் நடந்துள்ளது. கோடீஸ்வர தொழிலதிபரின் மகன் ஒரு மாதம் சாதாரண ஏழ்மை வாழ்க்கையை வாழ்ந்து காட்டியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் பிரபலமான நிறுவனம் ஹரேகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம். இதை நடத்திவருபவர் கணேஷ்ராம் டோலக்கியா.

ஹிதாரி

சுமார் 6000 கோடி ரூபாய் சொத்து மதிப்புகொண்ட இந்த நிறுவனத்துடன் கணேஷ்ராம் வைர வியாபாரமும் செய்து வருகிறார். இதன் மதிப்பு பல்லாயிரம் கோடிக்கு மேல் என சொல்லப்படுகிறது. கணேஷ்ராம் குஜராத்தில் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். தன் உழைப்பினால் படிப்படியாக வாழ்வில் முன்னேறியவர். பெரும் கோடீஸ்வரராக அவர் மாறிய பின்னர் அவருக்கு பிள்ளைகள் பிறந்தார்கள். தன் வாழ்க்கைக்குப் பின்னர் தான் உழைத்து சம்பாதித்த சொத்துக்களை பிள்ளைகள் காப்பாற்றி அதை மேலும் மேலும் பெருக்கவேண்டும் என கணேஷ்ராம் விரும்பினார்.  பணத்தின் மதிப்பு தெரியாமல் போனால் அவர்கள் தன் சொத்துக்களை அழித்துவிடக்கூடும் என அஞ்சினார். தனி மனித வாழ்வில் உள்ள கஷ்டங்களை அவர்கள் புரிந்துகொண்டால் பொறுப்புடன் தொழிலை மேம்படுத்துவார்கள் எனக் கருதினார்.

அப்படி பணத்தின் மதிப்பை உணர்ந்தால்தான் கோடிக்கணக்கான தனது சொத்துக்களை அவர்கள் எதிர்காலத்தில் கட்டிக்காக்க முடியும் என கருதிய அவர் உறுதியாக ஓர் முடிவெடுத்தார். அது தன் பிள்ளைகள் ஆளுக்கு ஒரு மாதம் தங்கள் சொந்த சம்பாத்தியத்தில் வாழவேண்டும் என்பது. அதன்படி தன் மூத்த மகன் திராவ்யா டோலக்கியாவைக் கடந்த ஆண்டு குஜராத்தில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலைக்கு சேர்த்துவிட்டார். தான் யார் எனச் சொல்லாமல் ஒரு மாதம் சாதாரண வாழ்க்கையை வாழவேண்டும் என்பது கணேஷ்ராமின் கட்டளை. அதன்படி திராவ்யா டோலக்கியா கடையில் கொடுத்த சொற்ப சம்பளத்தில் ஒரு மாதம் வேலைபார்த்தார். சாதாரண குடிசைப்பகுதி மக்கள் வசிக்கும் பகுதியில் சொற்ப வாடகை கொண்ட அறையில் ஒரு மாதம் தங்கி ஏழை மக்களுடன் ஒருவராக பழகி பல்வேறு அனுபவங்களைப் பெற்றார். தந்தை சொல்படி தான் கோடீஸ்வரப் பிள்ளை என்பதை எந்த இடத்திலும் சொல்லிக்கொள்ளவில்லை. அப்போது பல அனுபவங்களுக்கு அவர் ஆளானார்.

இப்போது அதே போல கணேஷ்ராமின் இன்னொரு மகன் ஹிதார் டோலாக்கியாவையும் அடுத்ததாக இந்த பரீட்சைக்கு தயார்படுத்தினார். அதன்படி வெறும் ஒருசட்டை பேன்ட்டுடன் கடந்த மாதம் தன் மாளிகை போன்ற வீட்டிலிருந்து கிளம்பினார் ஹிதார். குஜராத்திலிருந்து ஐதராபாத் வந்து அங்கிருந்து பேருந்து மூலம் செகந்திராபாத்திற்கு ஹிதார் சென்றார். அங்கு ஒரு காலணி கடையில் வேலைபார்த்தார். சொற்ப சம்பளத்தில் 100 ரூபாயில் ஓர் அறையை வாடகைக்கு எடுத்து ஏழை மக்களுடன் வாழ்ந்திருக்கிறார். அதேநேரம் செருப்புக்கடையில் கொடுத்த சம்பளம் போதவில்லை. இதனால் மற்ற செலவுகளை சமாளிக்க அட்டை தயாரிப்பு நிறுவனம்,  ரிக்ஷா தொழிலாளி என பகுதிநேரமாகவும் சில வேலைகள் பார்த்துள்ளார். ஒரு மாதம் முடிந்தபின் குஜராத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார் ஹிதார்.

ஹிதாரி குடும்பம்

ஒரு மாத வனவாசம் முடிந்து தன் வீட்டுக்கு திரும்பிய ஹிதாரை அவரது பெற்றோர் கட்டித்தழுவி வரவேற்றனர். “தந்தையின் சொல்படி நடந்ததால் நாங்கள் சாமான்ய மக்களின் கஷ்டங்களை புரிந்துகொண்டோம். சொத்து சேர்ப்பது பெரிதல்ல. அதை கட்டிக்காப்பதற்கு அனுபவம் அவசியம் தேவை. எங்கள் தந்தையின் இந்த அனுபவப்பாடம் எங்களை இன்னும் பொறுப்புள்ளவர்களாக ஆக்கியுள்ளது. இந்த ஒரு மாதத்தில் நாம் நினைக்கும் வாழ்க்கையும், நடைமுறை பிரச்னைகளும் வெவ்வேறு என புரிந்துகொண்டோம். ஏழை மக்களின் கஷ்டத்தை நேரடியாக பார்த்து தெரிந்துகொண்ட இந்த அனுபவம் எங்களை மேலும் செழுமைப்படுத்தும். இந்த ஒரு மாதத்தில் கிடைத்த அனுபவம் மறக்கமுடியாதது" என நெகிழ்கிறார்கள் சகோதரர்கள் இருவரும்.

கோடீஸ்வரர்கள் நினைத்தால் அடித்தட்டு மக்களின் அனுபவம் கிடைத்துவிடுகிறது. சாமான்யர்களுக்கு மேட்டுக்குடி அனுபவம் கிடைப்பது எப்போது?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்