வெளியிடப்பட்ட நேரம்: 18:19 (15/08/2017)

கடைசி தொடர்பு:18:19 (15/08/2017)

’என் மகன் குற்றவாளி அல்ல’...! - கேரள முதல்வருக்கு திலீப்பின் தாய் கடிதம்

நடிகர் திலீப்.

லையாள நடிகை கடத்தல் விவகாரத்தில் தனது மகன் குற்றவாளி அல்ல, அவருக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கூறி கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நடிகர் திலீப்பின் தாய் சரோஜம் கடிதம் எழுதியுள்ளார். 


பிரபல மலையாள நடிகை கடத்தல் விவகாரத்தில் தொடர்புடையதாக கைதுசெய்யப்பட்ட நடிகர் திலீப், ஆலுவா கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் முதல் குற்றவாளியாக பல்சர் சுனிலும், இரண்டாவது குற்றவாளியாக நடிகர் திலீப்பும் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஜாமீன் கோரி திலீப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக திலீப் மனு செய்துள்ளார். 

இந்நிலையில், நடிகை கடத்தல் விவகாரத்தில் தனது மகன் சிக்கவைக்கப்பட்டுள்ளதாகக் கூறி நடிகர் திலீப்பின் தாயார் சரோஜம், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், இதுபோன்ற குற்றங்களை எனது மகன் செய்திருக்க மாட்டான். எந்தத் தவறும் இழைக்காத அவனைத் திட்டமிட்டு இதில் சிக்கவைத்திருக்கிறார்கள். இந்த வழக்கில் நீதி கிடைக்க நீங்கள் விசாரணையில் தலையிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த கடிதத்தை கேரள காவல்துறை தலைவர் லோக்நாத் பெஹ்ராவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆலுவா கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திலீப்பை, அவரது சகோதரர் அனூப் மற்றும் தாயார் சரோஜம் ஆகியோர் சமீபத்தில் சந்தித்துப் பேசினர். திலீப் ஜாமீன் மனு மீதான விசாரணை கேரள உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், அவரது தாயார் முதலமைச்சர் பினராயி விஜயனுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.