’இது அறிவிக்கப்படாத அவசரநிலை...!’- திரிபுரா முதல்வருக்கே இதுதான் கதி | Doordarshan and AIR refuse to air Tripura CM’s I-Day speech

வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (15/08/2017)

கடைசி தொடர்பு:18:50 (15/08/2017)

’இது அறிவிக்கப்படாத அவசரநிலை...!’- திரிபுரா முதல்வருக்கே இதுதான் கதி

திரிபுரா முதலமைச்சர் மாணிக் சர்க்காரின் சுதந்திர தின உரையை ஒளிபரப்ப அரசுத் தொலைக்காட்சியான தூர்தர்ஷன் மறுப்பு தெரிவித்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார்.


இதுதொடர்பாக ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜி.ராமகிருஷ்ணன், ’திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார், ஊழல் முறைகேடுகளற்ற முதல்வராக நற்பெயர் பெற்றவர். சிறந்த நிர்வாகம் கொண்ட முன்னுதாரண மாநிலமாக திரிபுரா அமைந்துள்ளது. ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டம் விலக்கப்பட்ட வடகிழக்கு மாநிலம் திரிபுரா என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அத்தகைய முதலமைச்சரின் சுதந்திர தின உரையை ஒளிபரப்ப தூர்தர்ஷன் மறுத்துள்ளது. தங்களின் தனியார் சொத்துபோல் அரசு நிறுவனங்களை நடத்துவது அற்ப அரசியல். ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அமைப்புகளின் இந்த எதேச்சதிகார நடவடிக்கை, அறிவிக்கப்படாத அவசரநிலையாகும். வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்வதாக அவர் கூறியுள்ளார். திரிபுரா முதலமைச்சர் மாணிக் சர்க்காரின் சுதந்திர தின உரையை மத்திய அரசு நிர்வகிக்கும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி மற்றும் அகில இந்திய வானொலி ஆகியவை ஒளி மற்றும் ஒலிபரப்ப மறுத்தன. இந்த விவகாரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளது.