'தர்ம யுத்தத்துக்கு வாங்க...': கமல்ஹாசனை அழைக்கும் பன்னீர்செல்வம் அணி!

அ.தி.மு.க-வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்கும், தினகரன் அணிக்கும் இடையேயான வார்த்தைப் போர் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க எடப்பாடி அணியுடன் இணைவது குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். 

மஃபா பாண்டியராஜன்


இந்நிலையில், பன்னீர்செல்வம் இல்லத்தில் இன்று மீண்டும் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் மஃபா பாண்டியராஜன், நத்தம் விஸ்வநாதன், ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தர்மயுத்தத்தின் அடுத்த கூட்டம் வருகின்ற 28-ம் தேதி கடலூரில் நடைபெறும். இணைப்பில் பாதி அளவுக்கு வந்திருக்கிறார்கள். முதல் கோரிக்கையை நிறைவேற்றி இருக்கிறார்கள். கோரிக்கைகள் நிறைவேறும் பட்சத்தில் அணிகள் இணைப்பு நிகழும். எடப்பாடி தரப்பினரின் தற்போதைய நடவடிக்கைகள் நாடகம் போல இல்லை. நடிகர் கமல்ஹாசனின் விமர்சனத்துக்கு தகுந்த நேரத்தில் பதில் அளிப்போம். கமல்ஹாசனும் தர்மயுத்தத்தில் கலந்துகொள்ள வேண்டும். 

தினகரனின் மேலூர் பொதுக்கூட்டத்தை சாதனையாக கருதவில்லை. 1% பெண்கள் கூட அதில் கலந்துகொள்ளவில்லை. தர்மயுத்தம் குறித்து தினகரன் பேசியது கண்டிக்கத்தக்கது. தர்மயுத்தத்தை இழிவுபடுத்தும் உரிமை தினகரனுக்கு கிடையாது. நீட் விலக்குக்கு பன்னீர்செல்வம்தான் காரணம். அது மட்டுமல்ல, தமிழகத்துக்கு கிடைக்கும் அனைத்து நலன்களுக்குமே பன்னீர்செல்வம்தான் காரணம். பிரதமர் மோடியுடனான பன்னீர்செல்வத்தின் நட்பு தமிழகத்துக்கு கிடைத்த வரம்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!