81 லட்சம் ஆதார் கார்டுகள் முடக்கம்!

நாடு முழுவதும் 81 லட்சம் ஆதார் கார்டுகளை முடக்கிவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

ஆதார் அட்டை


அரசின் பெரும்பாலான நலத்திட்ட உதவிகளைப் பெற ஆதார் அட்டை அவசியம் என்ற சூழல் நிலவுகிறது. வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வது, ஓட்டுநர் உரிமம் பெறுவது உள்ளிட்ட பல்வேறு அரசு சார்ந்த சேவைகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், 81 லட்சம் ஆதார் அட்டைகளை முடக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான கேள்விக்கு மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக பதிலளித்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் பி.பி.சவுத்ரி, ’உரிய விவரங்கள் தரப்படாதது, ஒரே பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆதார் கார்டுகள் இருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் தோராயமாக 81 லட்சம் ஆதார் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். தேசிய தனிநபர் அடையாள ஆணையத்தின் பதிவுகளின்படி இந்த தகவல் வெளியானது. அங்கீகரிக்கப்படாத பயோமெட்ரிக் தகவல்கள், ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட காரணங்கள் கண்டறியப்பட்டால், அந்த ஆதார் அட்டையை முடக்கும் அதிகாரம் அந்தப் பகுதியில் இருக்கும் தேசிய தனிநபர் அடையாள ஆணைய அதிகாரிக்கு உண்டு. அதேபோல், ஆதார் அட்டை பெற்றுள்ள ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், தங்களது பயோமெட்ரிக் தரவுகளை ஐந்து வயதான பின்னரும், பதினைந்து வயதான பின்னரும் பதிவு செய்ய வேண்டியது அவசியம். இதுபோன்று தகவல்களை அப்டேட் செய்யவில்லை என்றால் ஆதார் அட்டைகள் முடக்கப்பட வாய்ப்புகள் இருக்கிறது.

உங்கள் ஆதார் அட்டையின் நிலை குறித்து தேசிய தனிநபர் அடையாள ஆணையத்தின் https://uidai.gov.in/ என்ற இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம். அந்த இணையதளத்தின் முகப்புப் பகுதியில் ’Verify Aadhaar Number' என்ற டேப்பை கிளிக் செய்யுங்கள். அது உங்களை மற்றொரு பக்கத்துக்கு அழைத்து செல்லும், அந்த பக்கத்தில் உங்கள் ஆதார் எண் மற்றும் உங்கள் மொபைலுக்கு வரும் ரகசிய எண்ணையும் பதிவுசெய்து ஆதார் அட்டையின் நிலையை அறிந்துகொள்ளலாம். ஒருவேளை உங்களது ஆதார் அட்டை முடக்கப்பட்டிருந்தால், பயம் கொள்ளத் தேவையில்லை. உடனடியாக அருகில் உள்ள ஆதார் பதிவு மையத்துக்குச் சென்று உங்களது தகவல்களை அப்டேட் செய்துவிடுங்கள். அதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து, கட்டணமாக ரூ.25 செலுத்தி விடுங்கள். உங்களது பழைய ஆதார் தகவல்கள் அழிக்கப்பட்டு, புதிய ஆதார் தகவல்கள் அப்டேட் செய்யப்படும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!