வெளியிடப்பட்ட நேரம்: 20:08 (16/08/2017)

கடைசி தொடர்பு:20:08 (16/08/2017)

முருகன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: கேரள அரசு அறிவிப்பு

கேரளாவில், கடந்த வாரம் நடந்த சாலை விபத்தில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த முருகன் என்ற கூலித் தொழிலாளி உயிரிழந்தார். சுமார்  7 மணி நேரம் அவருக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்காததே, அவரின் மரணத்துக்கு காரணமாக அமைந்தது. இதையடுத்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்தச் சம்பவத்துக்கு சட்டமன்றத்தில் கேரள மக்களின் சார்பாக பகிரங்க மன்னிப்புக் கோரினார். 

பினராயி விஜயன்

முருகனுக்கு பாப்பா என்கிற முருகம்மாள் என்ற மனைவியும் இரு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இதைத்தொடர்ந்து முருகனின் குடும்பத்துக்கு, கேரள அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதனிடையே, முருகனின் குழந்தைகள் படிப்புச் செலவை ஏற்றுக் கொள்வதாக கேரள மார்க்சிஸ்ட் கட்சி நேற்று அறிவித்தது. 

இதையடுத்து, கேரள முதல்வர் பினராயி விஜயனை இன்று முருகனின் மனைவி பாப்பா மற்றும் குழந்தைகள் சந்தித்தனர். குழந்தைகளிடத்தில் கேரள முதல்வர் அன்புடன் உரையாடினார். முருகனின் குடும்பத்தினரிடம், 'உங்களுக்கு எந்த சமயத்திலும் கேரள அரசு உதவியாக இருக்கும் ' என ஆறுதல் வார்த்தைகள் கூறினார். 

இந்நிலையில், முருகன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.