வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (17/08/2017)

கடைசி தொடர்பு:19:09 (17/08/2017)

பிரதமர் மோடிக்கு எதிராகக் காவல்நிலையத்தில் புகார்!

சுதந்திர தின உரையில் இந்தியாவை ஹிந்துஸ்தான் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று கூறி மும்பை அந்தேரி கிழக்கு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடி


மகாராஷ்டிராவைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம வித்தால்ராவ் காலே என்பவர் அளித்துள்ள புகாரில், ’அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியா மற்றும் பாரதம் என்ற இரண்டு வார்த்தைகளே நாட்டைக் குறிப்பிடும் இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஹிந்துஸ்தான் என்ற பதம் எந்த ஒரு இடத்திலும் பயன்படுத்தப்படவில்லை. ஹிந்துஸ்தான் என்ற பெயர் ஒரு மதத்தைக் குறிப்பிடுவது. சுதந்திர தின உரையில் ஹிந்துஸ்தான் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டது சட்டவிரோதமானது. அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு -1 கூறியுள்ள விதிமுறைகளை மீறும் செயல் இதுவாகும்’ என்று அவர் தெரிவித்துள்ளார். அந்த புகார் மனுவை மகாராஷ்ட்ரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸுக்கும் வழக்கறிஞர் காலே அனுப்பியுள்ளார்.

நாட்டின் 71-வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். இதுவரை அவர் ஆற்றிய சுதந்திர தின உரைகளிலேயே சுருக்கமாக அமைந்த இந்த உரையில், 2022-ம் ஆண்டு புதிய இந்தியாவை உருவாக்க நாட்டு மக்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.