வெளியிடப்பட்ட நேரம்: 07:55 (18/08/2017)

கடைசி தொடர்பு:10:57 (18/08/2017)

ராஜீவ் கொலை வழக்கு: கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வெடிகுண்டு குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளாதது ஏன் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கு

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பொதுக் கூட்டத்தில் 1991-ம் ஆண்டு மே மாதம், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். இந்தப் படுகொலை தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் பின்னர், ஜெயின் கமிஷன் வழக்கை விசாரித்தது. இந்த வழக்கை விசாரிப்பதற்காக பன்னோக்கு விசாரணை முகமை (எம்.டி.எம்.ஏ) ஏற்படுத்தப்பட்டது. தற்போது வரை எம்.டி.எம்.ஏ விசாரணை முடியவில்லை. கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரும், கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடுகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ வெடிகுண்டு வெடிப்புச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு குறித்த முழுமையான விசாரணையை மேற்கொள்ளாதது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இதுதொடர்பான விசாரணையை வருகிற 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.