டியர் மோடி அங்கிள்..! - பிரதமரை மிரளவைத்த 7 வயது சிறுமியின் கடிதம் | 7-year-old girl’s plea to ‘Modi uncle’: Please save our park

வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (18/08/2017)

கடைசி தொடர்பு:11:45 (18/08/2017)

டியர் மோடி அங்கிள்..! - பிரதமரை மிரளவைத்த 7 வயது சிறுமியின் கடிதம்

தனது வீட்டின் அருகில் உள்ள பூங்காவை வணிக வளாகமாக மாற்றும் டெல்லி மாநகராட்சியின் முடிவைத் தடுத்து நிறுத்தக் கோரி
7 வயதான நவ்யா என்ற சிறுமி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். 

பிரதமர் மோடிக்கு சிறுமி நவ்யா எழுதிய கடிதம்


டெல்லி ரோகிணி செக்டார் பகுதியில் உள்ள ஹனுமான் மந்திர் பூங்கா அமைந்துள்ள பகுதியில் வணிக வளாகம் ஒன்றைக் கட்ட டெல்லி மாநகராட்சி முடிவெடுத்தது. இதையடுத்து, அந்தப் பகுதியில் கட்டுமானப் பணிகள் மாநகராட்சி சார்பில் தொடங்கப்பட்டன. மாநகராட்சியின் இந்த முடிவைத் தடுத்து நிறுத்தக் கோரி அந்தப் பகுதியில் வசிக்கும் நவ்யா என்ற இரண்டாம் வகுப்பு மாணவி பிரதமர் மோடிக்கு 2 பக்கங்களில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அன்புள்ள மோடி அங்கிள் என்று தொடங்கும் அந்தக் கடிதத்தில், ’வெறும் கட்டடங்கள் மட்டுமே இங்கு இடம் என்றால், பூங்காக்களுக்கு இடமில்லையா, விளையாடாமல் ஒலிம்பிக்கில் பதக்கம் எப்படி வெல்ல முடியும்? உங்கள் பிறந்தநாளான செப்டம்பர் 17-ல் இந்தப் பரிசை நீங்கள் எனக்கு அளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எங்கள் வீட்டின் அருகில் இருந்த பூங்காவில் நாங்கள் விளையாடி வந்தோம். ஆனால், கடந்த சில மாதங்களாக நானும் எனது நண்பர்களும் அந்தப் பூங்காவில் விளையாட அனுமதிக்கப்படவில்லை’ என்று நவ்யா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன் தந்தையும் வழக்கறிஞருமான திராஜ் சிங்-கின் உதவியுடன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றையும் அவர் தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாகப் பதிலளிக்குமாறு டெல்லி பெருநகர வளர்ச்சிக் குழுமத்துக்கும் டெல்லி மாநகராட்சிக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.