Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கும்பகோணம் முதல் கோரக்பூர் வரை... ஏன் குழந்தைகளின் உயிரோடு விளையாடுகிறோம்?

னிதர்களுடைய சுயநலமும் அலட்சியமும்... ஆசை ஆசையாகப் பெற்று வளர்க்கும் அன்புக் குழந்தைகளின் உயிரை எவ்வளவு அற்பமாக்குகின்றன என்பதற்கு கும்பகோணம் அன்று உதாரணமாகத் திகழ்ந்தது. ஆனால், இன்று அதற்கு எதிராக, ஓர் அடையாளமாகக் கோரக்பூர் தலைதாழ்ந்து நிற்கிறது. தேசம் தனது 71-வது விடுதலை நாளைக் கோலாகலமாகக் கொண்டாட தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில் நடைபெற்ற துயரச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையே உலுக்கி எடுத்துவிட்டது.

கோரக்பூர் குழந்தைகள்

ஆம்! கடந்த ஒரே வாரத்தில் 72 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம்தான் இந்தத் துயரத்துக்குக் காரணம். மக்கள்தொகையில் முதலிடத்தில் உள்ள மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்தத் தொகுதியான கோரக்பூரின் பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான் இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது.

இந்த மருத்துவமனையில், உயிர்காக்கும் பிராணவாயு தட்டுப்பாடு ஏற்பட்டதால்தான் உயிரிழப்புகள் நிகழ்ந்ததாகச் செய்திகள் வெளிவந்தன. இந்த மருத்துவமனைக்குப் பிராணவாயு உருளைகளை விநியோகிக்கும் நிறுவனம், 66 லட்ச ரூபாய் நிலுவைத் தொகையைக் காரணம் காட்டி அதை நிறுத்திவைத்துவிட்டதாகச் செய்திகளில் விளக்கமும் அளிக்கப்பட்டன. தேசம் தழுவிய விவாதமான இந்த மரணச் சம்பவங்களுக்கு உத்தரப்பிரதேச மாநில அரசுமீது கண்டனக் கணைகள் பாய்ந்தன. விளக்கமளித்த முதல்வர் ஆதித்யநாத், “குழந்தைகள் உயிரிழப்புக்கு மூளைவீக்க நோயே காரணம்” என்று சொன்னதோடு மட்டுமின்றி, அந்த மருத்துவமனை நிர்வாகத்தின்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

“குழந்தைகள் உயிரிழப்புச் சம்பவங்களுக்குப் பிராணவாயு தட்டுப்பாடு காரணமல்ல... மூளைவீக்க நோய்தான் காரணம்” எனக் கூறியுள்ள மருத்துவமனை முதல்வர் டாக்டர் ராஜீவ் மிஸ்ரா தார்கே, அதற்குப் பொறுபேற்று பதவி விலகுவதாக அறிவித்தார். ஆனால், “அவரைப் பதவி நீக்கம் செய்துவிட்டோம்... விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம்” என்கிறார் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சித்தார்நாத் சிங். “பிராணவாயு தட்டுப்பாடு காரணமல்ல” என்றால், அதை விநியோக்கிக்கும் நிறுவனத்தின்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது ஏன் எனக் கேள்வி எழுப்புகிறவர்காள், “மூளைவீக்க நோய்க்கும் குறிப்பாகக் கொசுக்கடியால் ஏற்படும் நோய்களுக்கும் தலைமையிடமாகச் சிகிச்சை அளிக்கும் இம்மருத்துவமனைக்கு, மருந்துகள் வாங்கவும், தீவிர சிகிச்சைப் பிரிவு உபகரணங்கள் வாங்கவும் ரூபாய் 37 கோடி நிதி கேட்டு அரசுக்கு விண்ணப்பித்தும் அரசு இதுவரை வழங்காதது ஏன்” எனக் கேட்கின்றன.

ஆக, பச்சிளம் குழந்தைகளின் உயிரிழப்பு பின்னுக்குத் தள்ளப்பட்டு.... ‘யார் காரணம்’ என்ற வாதப் பிரதி வாதமே முன்னுக்கு வந்துள்ளது. அந்த வாதமும் குழந்தைகளின் மூச்சு அடங்கியதுபோல் கொஞ்ச நாள்களில் அடங்கிவிடும். இது நம் நாட்டின் சாபக்கேடு. இன்று கோரக்பூர்.... நேற்று கும்பகோணம். தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் 13 வருடங்களுக்கு முன் ஒரு ஜூலை மாதத்தின் காலை நேரத்தில் பள்ளிக்கூடத்தின் மேற்கூரை எரிந்து 94 குழந்தைகள் கருகி உயிரிழந்த சம்பவம் அன்று தேசத்தின் தலைப்புச் செய்தியாகி அதிர்ச்சியளித்தது. தாங்கள் பெற்ற பிள்ளைகளை அழகுபடுத்தி ஆசை ஆசையாகப் பள்ளிக்கு அனுப்பிவைத்த பெற்றோர் கரிக்கட்டைகளாக அவர்களைப் பார்த்து அலறிய காட்சி கல்லையும் கறையவைத்தது. வழக்கம்போல், விசாரணைக்கமிஷன்; அதற்கு நான்கு முறை கால நீட்டிப்பு; அரசுக்கு அறிக்கை தாக்கல் என்ற சடங்கு சம்பிரதாயங்களும் வழக்கு, விசாரணை என்ற சட்ட நடவடிக்கைகளும் இழுத்தடிக்கப்பட்டுக் கடைசியில் பள்ளித் தாளாளர் உட்பட சிறையில் இருந்தவர்கள், பிணையில் இருந்தவர்கள் என அனைவரும் மேல்முறையீட்டில் உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் விடுதலை சரியா... தவறா என விவாதிக்கும் நேரமல்ல இது. இத்தகைய உயிரிழப்புகளுக்குக் காரணங்கள் எவை.... அந்தக் காரணங்களைக் கண்டறிந்தபின் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எவை... பிள்ளைகள்மூலம் பள்ளிக்கூடங்கள் விதிமுறைகளின்படி அமைந்துள்ளனவா... விபத்துகள் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா... விபத்துகள் நடந்தால் உயிர்த்தப்ப வழிகள் என்ன என்பது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளதா?

இக்கேள்விகள், 'ஏட்டளவில்' மட்டுமே நிற்கும். பள்ளிகளின் அங்கீகாரத்துக்கும் அதைப் புதுப்பிப்பதற்கும் 'நோட்டளவில்' நடைபெறும் பேரங்களே போதும் என்ற நிலை நீடித்தால்... குழந்தைகளின் உயிர்கள், நினைவுத்தூணில் ஆண்டுதோறும் வைக்கப்பட்டுப் பின் கருகிப்போகும் மலர்கள்போலக் காட்சியளிக்கும் கதைகளாகிவிடும்.

கோரக்பூரில் ஏற்பட்ட குழந்தைகளின் உயிரிழப்பு மூளைவீக்க நோயால் ஏற்பட்டதென்றால், அதற்குக் காரணமான ஜப்பானிய கொசுக்கள் இந்தியாவில் பரவக் காரணம் என்ன? வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களின் பூச்சிக்கொல்லித் தடுப்பு நடவடிக்கைகள் பணம் சம்பாதிக்க மட்டுமே பயன்படுகிறதென்றால், விலைமதிப்பற்ற உயிரிழப்புகள் என்பதும் கும்பகோணத்திலிருந்து கோரக்பூரையும் தாண்டி விரிவடையவே செய்யும்.

அரசு மட்டுமல்ல... மனிதச் சமூகமும் விழிப்படையுமா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement