Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வைரலாகும் புது 50, 200 ரூபாய் நோட்டு... பழைய 50, 100 ரூபாய் இனி செல்லாதா?

‘பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என்ற பணமதிப்பு நீக்க அறிவிப்பைத் தொடர்ந்து, புதிய 500 மற்றும் 2,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது, பழைய ரூ.100 மற்றும் ரூ.50 நோட்டுகளுக்குப் பதிலாக புதிய 200 மற்றும் 50 ரூபாய் நோட்டை வெளியிட்டு, மீண்டும் ஒரு பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு அரசு தயாராகி வருகிறதா என்பது, முக்கியக் கேள்வியாக மக்கள் மனதில் எழுந்துள்ளது. 

ரூபாய்

கடந்த ஆண்டில் பிங்க் வண்ணத்தில் ரூ.2,000 நோட்டும்,  சாம்பல் வண்ணத்தில் ரூ.500 நோட்டும் இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் வெளியிடப்பட்டது. இதையடுத்து புதிய ரூ.200 நோட்டுகளை அச்சடித்துவரும் இந்திய ரிசர்வ் வங்கி, விரைவில் இந்த கரன்சியை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்தது. இதுகுறித்து மத்திய அரசின் முதலீடு மற்றும் கரன்சி துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்...

“200 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. 21 நாள்களில் இந்தப் பணி முடிவடைந்தது. இதனால் விரைவில் 200 ரூபாய் நோட்டுகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். ரூ.200 நோட்டு வெளியீட்டுக்குப் பிறகு கரன்சி தட்டுப்பாடு குறையும்” என்றார் அவர். 

இந்த நிலையில் இப்போது முதல்முறையாக நீல வண்ணத்தில் புதிய 50 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி அச்சிட்டுவருவதாகத் தெரிகிறது. இந்தப் புதிய 50 ரூபாய் நோட்டுகள், சமூக வலைதளத்தில் அதிக அளவில் பகிரப்படுகின்றன. நீல வண்ணத்தில் இருக்கும் இந்தப் புதிய 50 ரூபாய் நோட்டில் கறுப்பு சாம்பல் வண்ணத்தில் மகாத்மா காந்தியின் படம் வரையப்பட்டிருக்கிறது. இந்த நோட்டுகள் விரைவில் புழக்கத்தில் விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூபாய் நோட்டுகள் பல வண்ணத்தில் இருந்தால், அவற்றை ஏழை எளிய மக்கள் எளிதில் வேறுபடுத்திப் பார்க்கலாம்; பயன்படுத்தலாம் என்பதால், கரன்சி வெவ்வேறு வண்ணத்தில் அச்சிடப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். 

ரூபாய்

பழைய ரூ.100 மற்றும் ரூ.50 நோட்டுகளை ஒழித்து, புதிய 200 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படுவதாகத் தகவல்கள் வெளியாகின்றன. அதே நேரத்தில் புதிய 50 ரூபாய் நோட்டை வெளியிட்டாலும், பழைய கரன்சியும் செல்லும் என்றும் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து முழுமையான விவரம் எதுவும் இல்லை. அதே சமயம் புதிய 50 ரூபாய் நோட்டு அறிமுகம் குறித்தும் ஆர்.பி.ஐ மற்றும் மத்திய அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பும் இதுவரை எதுவும் இல்லை. 

கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை எனக் காரணம் சொல்லி, நவம்பர் 8-ம் தேதி இரவு 8 மணிக்குத் தொலைக்காட்சியில் தோன்றி, அதிக மதிப்புகொண்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனப் பிரதமர் மோடி அறிவித்தார். இது, சென்ற ஆண்டில் இந்திய மக்களைப் பெரிதும் பாதித்த பிரச்னைகளில் மிக முக்கியமானது. இந்த நிலையில் `500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என்று அறிவித்த அரசு மீண்டும் ஒரு பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குத் தயாராகி வருகிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement