வெளியிடப்பட்ட நேரம்: 20:37 (18/08/2017)

கடைசி தொடர்பு:20:37 (18/08/2017)

விஷால் சிக்கா ராஜினாமா... இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் என்ன நடக்கிறது?

இளைஞர்களின் கனவு உலகமாகத் திகழ்ந்த இன்ஃபோசிஸ் நிறுவனத்தில், இன்று அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதன் மேலாண்மை இயக்குநரும் முதன்மை செயல் அதிகாரியுமான விஷால் சிக்கா, அந்தப் பதவிகளை ராஜினாமா செய்துள்ளார். 

இன்ஃபோசிஸ்

பெரிய நிறுவனங்களில் அதிரடி நியமனங்களும் பதவிப் பறிப்புகளும் இப்போதெல்லாம் சர்வசாதாரணமாக நடந்துகொண்டிருக்கின்றன. கடந்த வருடம், டாடா குழும நிறுவனத்தில் பெரும் பிரளயம் ஏற்பட்டது. அதுவே இன்னும் ஓயாத நிலையில், தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பிரச்னை கிளம்பியிருக்கிறது. விஷால் சிக்கா எதற்காக ராஜினாமா செய்தார், என்னதான் நடக்கிறது இன்ஃபோசிஸ் நிறுவனத்தில்?

உலக அளவில் முன்னணி ஐடி நிறுவனமாகவும், இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமாகவும் இன்ஃபோசிஸ் நிறுவனம் இருந்துவருகிறது. ஆனால், சமீபகாலமாக ஐடி துறை ஒருவிதமான அழுத்தத்துக்குள்ளாகியிருப்பது என்னவோ உண்மைதான். அதற்கு இன்ஃபோசிஸ் நிறுவனமும் விதிவிலக்கல்ல. லாபம் ஈட்டுவதில் இன்ஃபோசிஸ் முன்பிருந்த நிலையில் தற்போது இல்லை. தொழில் வளர்ச்சியிலும் திணறிக்கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில் நிறுவனத்தின் மிக முக்கியமான பொறுப்புகளில் இருக்கும் நபர், அந்தப் பதவிகளிலிருந்து விலகியிருக்கிறார். விஷால் சிக்கா, அந்தப் பதவிகளிலிருந்து விரும்பி விலகியிருக்க வாய்ப்பே இல்லை. 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் சேர்ந்தவர், மூன்றே ஆண்டுகளில் அந்தப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். 

இதுகுறித்து இன்ஃபோசிஸ் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விஷால் சிக்கா, இன்று முதல் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணைச் செயல் தலைவராக நியமிக்கப்படுகிறார். புதிய நிரந்தர மேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரி நியமிக்கப்படும் வரை, அந்தப் பணிகளை அவரே மேற்கொள்வார். தற்போது இன்ஃபோசிஸின் தற்காலிக மேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரியாக பிரவீன் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்’ எனக் கூறியிருக்கிறது. 

விஷால் சிக்கா கூறுகையில், ``இன்ஃபோசிஸ் இயக்குநர் குழுவுடன் நடத்திய பலகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகே என்னுடைய தற்போதைய மேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி பதவியிலிருந்து விலகும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது'' என்றார். மேலும், “தன்னுடைய முடிவுகளுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டைகளும் எதிர்ப்புகளும் இருந்துவந்ததுதான் முக்கியக் காரணம்'' என்றும் தெரிவித்துள்ளார். என்னென்ன முட்டுக்கட்டைகள், எதிர்ப்புகள் என்பதை அவர் கூறவில்லை. 

சமீபத்தில்தான் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைப் பதவியிலிருந்து என்.ஆர்.நாராயணமூர்த்தி விலகினார். ஆனால், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலும், கெளரவத் தலைவராகவும் அவர் இருந்துவந்தார். இன்ஃபோசிஸ் நிறுவனம், அவருடைய ஆலோசனைகளுக்கும் தொடர்ந்து செவிசாய்த்து வந்தது. ஏனெனில், 1981-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இன்ஃபோசிஸ் நிறுவனத்தை, இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாகக் கட்டமைத்ததில் நாராயணமூர்த்தியின் பங்கு மிக அதிகம். அவருடைய அனுபவத்துக்கான மரியாதை நிறுவனத் தரப்பில் காக்கப்பட்டு வந்தது. அமெரிக்காவில் இருந்த விஷால் சிக்காவை, இந்தத் தலைமை பொறுப்புக்குக் கொண்டுவந்தவரும் இவர்தான். நிறுவனத்தின் தலைவராக, அசோக் லேலண்ட் நிறுவன முன்னாள் தலைவர் சேஷசாயி நியமிக்கப்பட்டார். 

விஷால் சிக்கா, இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்குள் வந்த பிறகு, போட்டி நிறுவனங்களின் வளர்ச்சி, ஐடி துறையின் வீழ்ச்சி என நிறுவனத்துக்கு எண்ணிலடங்கா பிரச்னைகள் எழுந்தன. ஐடி துறையில் பொன் முட்டையிடும் வாத்துபோல் இருந்துவந்த இன்ஃபோசிஸ் நிறுவனம், கொஞ்சம் கொஞ்சமாக அதன் பொலிவை இழந்தது; அதன் சொத்துமதிப்பும் குறைந்தது. இதற்கிடையில்தான் தான் முன்பு பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து சக பணியாளர்களை இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்குள் கொண்டுவந்தார் விஷால் சிக்கா. மேலும் தன்னுடைய பதவி உள்பட உயர் பதவிகளில் உள்ளவர்களின் சம்பளத்தை உயர்த்தினார். உயர் பதவியிலிருந்து விலகிச் செல்பவர்களுக்கும் சென்டில்மென்ட் தொகையாகப் பெரும்தொகை வழங்கபட்டது. 

மேலும், நிறுவனத்துக்குள் இருந்து அதிகாரிகள் வெளியேறுவதும், புதிய நியமனங்கள் நடப்பதுமாகத் தொடர்ந்தது. அதுமட்டுமல்லாமல், நிறுவனத்தின் வளர்ச்சியைப் பெருக்க கையகப்படுத்தல் அவசியம் என்று விஷால் சிக்கா தரப்பு தெரிவித்தது. அதற்கும் இயக்குநர் குழு சம்மதம் தெரிவிக்கவில்லை. இவை எல்லாம் நிறுவனத்துக்குள் சர்ச்சைகளைக் கிளப்பின. 

இந்தச் சர்ச்சைகளை எல்லாம் பார்த்த நாராயணமூர்த்தி, `நிறுவனத்தை சரியாக வழிகாட்ட முடியவில்லையெனில், இன்ஃபோசிஸ் தலைவர் பதவியிலிருந்து சேஷசாயி விலகிக்கொள்ளலாம்' என்று சொல்லி அதிர்ச்சி கிளப்பினார். அதற்கு சேஷசாயி `நாராயணமூர்த்தியின் ஆலோசனைகள் உடனுக்குடன் கேட்டு பெறப்பட்டு, நிர்வாகக் குழுவுக்கும் மேலாண்மைக் குழுவுக்கும் இடையேயான இடைவெளி குறைக்கப்படும்' என்று சொல்லி, அப்போதைக்கு அந்தப் பிரச்னையைத் தள்ளிப்போட்டார். 

ஒருபக்கம் நாராயணமூர்த்தியின் மகன் ரோகனை நிறுவனத்தின் உயர்பதவிக்குக் கொண்டு வர நாராயணமூர்த்தி விரும்புவதாக ஒரு பேச்சு அடிப்பட்டது. ஆனால், அதற்கும் ``அவர் தற்போதுதான் ஹார்ட்வர்டு பல்கலைக்கழகத்திலிருந்து விடுமுறையில் வந்துள்ளார். ரோஹன் விரும்பினால் வரட்டும். ஆனால், அதில் தன்னுடைய பங்களிப்பு எதுவும் இல்லை" என்று கூறினார். தொடர்ந்து நாராயணமூர்த்தி, ``நிறுவனத்தில் உயர் பதவிகளிலிருந்து வெளியேற விரும்புபவர்கள் வெளியேறலாம்" என்று கூறிவந்தார். ``இன்ஃபோசிஸ் நிறுவனம் வலுவான தலைவர்களை உருவாக்கதக்க மூன்று அடுக்குச் செயல்திட்டத்தைக் கொண்டிருக்கிறது'' என்றும், ``இதுவரை 600 தலைவர்களை உருவாக்கியிருக்கும் இந்த நிறுவனத்துக்கு, தலைவரை உருவாக்குவது ஒன்றும் பெரிய விஷயமல்ல'' என்றும் கூறினார். 

ஒருவிதமாக டாடா குழும நிறுவனத்தில் நடந்ததுபோலவே இன்ஃபோசிஸிலும் நிறுவனத்தின் நிர்வாகத்துக்குள்ளேயே எழுந்த சர்ச்சைகள் அதன் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியைப் பதவியிழக்கச் செய்துவிட்டது. ஆனால், விஷால் சிக்காவின் இந்த மூன்றாண்டு பதவிக்காலத்தில் அவர் என்ன செய்தார் என்பதும் கேள்விக்குறிதான். அவர் சொல்வதுபடி தன்னுடைய நடவடிக்கைகள் அனைத்துக்கும் முட்டுக்கட்டை போட்டார்கள் என்பதையும் யோசிக்கவேண்டியிருக்கிறது. 

நாராயணமூர்த்தியின் அறிவுறுத்தலின் பேரில் விஷால் சிக்கா பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார் என்ற கருத்துக்கு நாராயணமூருத்தி அளித்த பதில் ``இது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது" என்பதே. இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு விஷால் சிக்கா காரணமா, விஷால் சிக்காவைத் தேர்ந்தெடுத்தவர்கள் காரணமா என்பது இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவுக்கு மட்டுமே தெரியும். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ-வாக யார் நியமிக்கப்பட்டாலும் சரி, இப்போது இந்த நிறுவனத்தின் மீது ஏற்படும் களங்கத்தைத் துடைக்க இன்னும் சில ஆண்டுகள் அந்த நிறுவனத்துக்குத் தேவைப்படும் என்பதில் சந்தேகமே இல்லை. 

டாடா, இன்ஃபோசிஸ் நிறுவனங்களின் நிர்வாகக் குழுவில் நடந்த விவகாரங்கள், பிற நிறுவனங்களுக்குப் பாடமாகியிருக்கின்றன. தலைமைப் பதவியில் தகுதியானவர் நியமிக்கப்படுவதும் நியமிக்கப்பட்டவருக்குச் சுதந்திரம் கொடுப்பதும் மிகவும் அவசியம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்