'ப்ளூவேல்' கேமின் விபரீதம்: நான்காவது மாடியிலிருந்து குதித்த பள்ளி மாணவன்..?

டெல்லியில், பதின் வயது சிறுவன் ஒருவன் நான்காவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலைக்கு முயற்சிசெய்துள்ளான். அதற்கு, 'ப்ளூவேல் கேம்' காரணமாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

 


டெல்லியைச் சேர்ந்த பள்ளி மாணவன் குஷ் அகர்வால்.  11-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் அவன், வடகிழக்கு டெல்லி பகுதியில் வசித்துவருகிறான்.  கடந்த புதன்கிழமையன்று, அவன் வீட்டின் நான்காவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளான். படுகாயமடைந்த அவன், அருகிலுள்ள கங்கா ராம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், 'ப்ளூவேல் கேம்மில் கொடுக்கப்பட்ட டாஸ்கின் காரணமாக அவன் தற்கொலைக்கு முயற்சிசெய்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து காவல்துறையினர், 'குஷ் அகர்வாலின் போன் லாக் ஆனதால், அதை உறுதிப்படுத்த முடியவில்லை. அந்தச் சிறுவன் மாடியிலிருந்து குதித்த இடத்தில், அவனுடைய செருப்பு, கண்ணாடி மற்றும் மொபைல் போன் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவனது உடம்பில் வெட்டுக் காயங்கள் ஏதும் இல்லை' என்று தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே, கேரளாவில் மனோஜ் என்ற 16 வயது சிறுவன் ப்ளூவேல் கேம்மின் காரணமாக தூக்கிட்டுத் தற்கொலைசெய்துகொண்டான். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது டெல்லியில் அதேபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட ப்ளூவேல் எனும் வீடியோ கேமில் கொடுக்கப்படும் கட்டளைகள், அபாயகரமானதாக இருக்கின்றன. அந்த விளையாட்டை விளையாடுபவர்கள், தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்பதே அதன் கடைசி டாஸ்க். அந்த வீடியோ கேமிற்கு, இந்தியாவில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!