ரயில்வே துறையின் அலட்சியம்: உத்கல் ரயில் தடம் புரண்டது குறித்து அதிர்ச்சித் தகவல் | Reason for Utkal express train derailed in Uttar Pradesh

வெளியிடப்பட்ட நேரம்: 09:55 (20/08/2017)

கடைசி தொடர்பு:08:50 (21/08/2017)

ரயில்வே துறையின் அலட்சியம்: உத்கல் ரயில் தடம் புரண்டது குறித்து அதிர்ச்சித் தகவல்

உத்தரப்பிரதேசத்தில் பூரி - ஹரித்வார்- கலிங்கா உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று மாலை 5.50 மணி அளவில் முசாபர் நகர் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில், ரயிலின் 13 பெட்டிகள் தடம் புரண்டன. சம்பவ இடத்துக்கு விரைந்த தேசிய பேரிடர் மேலாண்மை வாரியப் படைகள், தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

உத்கல் எக்ஸ்பிரஸ் விபத்து


தற்போதுவரை 23 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விபத்து நடந்த இடத்தில் உத்தரப்பிரதேச மாநில அமைச்சர்கள், ரயில்வே உயரதிகாரிகள் பார்வையிட்டனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், உத்கல் எக்ஸ்பிரஸ் விபத்துக்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. முசாபர் நகர் அருகே தண்டாவளத்தை சீரமைக்கும் பணி நடந்ததை, உத்கல் எக்ஸ்பிரஸ் ஓட்டுநருக்கு ரயில்வே நிர்வாகம் தெரிவிக்காததே விபத்துக்கான காரணம் என்று தெரியவந்துள்ளது. சுமார் 15 மீட்டர் நீளத்துக்கு தண்டவாளத்தை, மாற்றியமைக்கும் பணிகள் நடந்துகொண்டிருந்தது.

இதையடுத்து தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள்,  அங்கு ரயில் வருவதைப் பார்த்து ஓடியுள்ளனர். அகற்றப்பட்ட 15 மீட்டர் நீளம் கொண்ட தண்டவாளத் துண்டு, தடம் புரண்ட A-1 ஏ.சி பெட்டியின் கீழ் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தண்டாவளம் சீரமைக்கும் பணி குறித்து, ரயில் ஓட்டுநருக்கு தகவல் கொடுத்திருந்தால், இந்தப் பெரும் விபத்து நடந்திருக்காது என்று கூறப்படுகிறது.

இதனிடையே, இந்தச் சம்பவத்துக்கு தீவிரவாத சதி காரணமா என்று மத்திய மற்றும் உ.பி மாநில அரசுகள் விசாரித்து வருகின்றன.