Published:Updated:

`நேரில் பார்த்தால்தான் பணம்.. 100 வயது தாயை கட்டிலில் இழுத்துச் சென்ற பெண்!’ -ஒடிசாவில் நடந்த அவலம்

கட்டிலில் இழுத்துச் செல்லும் காட்சி
கட்டிலில் இழுத்துச் செல்லும் காட்சி

``வங்கி அதிகாரிகள் அவர்களை கஷ்டப்படுத்தியுள்ளனர். அவர்கள் மனித உரிமைக்கு எதிரான அனைத்து சட்டங்களையும் மீறி விட்டனர். இதில் தொடர்புடையவர்களை பணியிலிருந்து நீக்க வேண்டும்”

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஏழை மக்களின் வாழ்வில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலையின்மை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணங்களால் அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்குகூட மக்கள் கஷ்டப்படுவதாக வெளியாகும் தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தும் விதமாக உள்ளன. குறிப்பாக தினசரி வேலைகளை நம்பி வாழும் மக்கள் கடும் பாதிப்பில் இருந்து வருகின்றனர். இந்த மக்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றனர். அந்த உதவிகளைப் பெறவும் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அவ்வகையில், அரசாங்கம் வழங்கும் பணத்தை வங்கியிலிருந்து பெற பெண் ஒருவர் தன் வயதான தாயை கட்டிலில் வைத்து இழுத்துச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

ஒடிசா மாநிலத்தில் உள்ள நுவாபாடா மாவட்டத்தில் அமைந்துள்ள பார்கான் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் 70 வயது பெண்ணான குஞ்சா தேய். இவர், தனது 100 வயது கடந்து நடக்க முடியாத நிலையில் இருக்கும் தாயை கட்டிலில் வைத்தபடி வங்கிக்கு இழுத்துச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் சில நாள்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தேய், தன்னுடைய தாயான லாபே பாகேலின் வங்கிக்கணக்கில் இருக்கும் பணத்தைப் பெற கட்டிலில் இழுத்துச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதான் மந்திரி கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ் கொரோனா வைரஸ் நெருக்கடியால் பாதிப்படைந்த ஏழை மக்களுக்கு உதவும் வகையில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை ஜன் தன் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு மாத உதவியாக ரூபாய் 500 வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, பெண்களுக்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணத்தை பெறுவதற்காகதான் தேய் தன் தாயை கட்டிலுடன் இழுத்துச் சென்றுள்ளார்.

`ஏழை மக்களுக்கு உதவ 65,000 கோடி ரூபாய் தேவை!’ - ரகுராம் ராஜனுடன் ஆலோசித்த ராகுல் காந்தி

பார்கான் கிராமத்தில் உள்ள உட்கல் கிராமீன் வங்கிக் கிளைக்கு தேய் தன் தாயின் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை வாங்க கடந்த ஜூன் 9-ம் தேதி வங்கிக்குச் சென்றுள்ளார். அப்போது அந்த வங்கியின் கிளை மேலாளர் அஜித் பிரதான், அவரின் தாயை அழைத்து வந்தால்தான் பணத்தை தர முடியும் என்று கூறியதாக கூறப்படுகிறது. தன்னுடைய தாய் படுக்கையில் இருப்பதால் கட்டிலோடு வங்கிக்கு இழுத்துச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ளார். பின்னர், இருவரும் வங்கிக்குச் சென்ற பின்னர் வங்கியின் கிளை மேலாளர் மூன்று மாத பணமான ரூபாய் 1,500-ஐ அவர்களிடம் கொடுத்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளானது.

கட்டிலில் இழுத்து செல்லும் காட்சி
கட்டிலில் இழுத்து செல்லும் காட்சி

இதையடுத்து அம்மாவட்ட ஆட்சியர் இதுதொடர்பாக பேசுகையில், ``தனி நபராக வங்கியை நிர்வகித்து வருவதால், வங்கியின் மேலாளர் அந்த நாளில் பெண்ணின் வீட்டுக்குச் செல்வது என்பது கடினமான விஷயம். எனினும், அவர் அடுத்தநாள் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு வருவதாக உறுதியளித்துள்ளார். ஆனால், அவர் செல்வதற்கு முன்பு அந்தப் பெண் தன் தாயை கட்டிலில் வைத்து இழுத்துச் சென்றுள்ளார்” என்று கூறியுள்ளார். அப்பகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ராஜூ தோல்கியா, ``மனிதாபிமானமற்ற இந்தச் செயலை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைகளை உடனடியாக அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

அதேபோல அம்மாவட்டத்தின் மற்றொரு சட்டமன்ற உறுப்பினரான ஆதிராஜ் பனிகிரஹி, ``வங்கி அதிகாரிகள் அவர்களை கஷ்டப்படுத்தியுள்ளனர். அவர்கள் மனித உரிமைக்கு எதிரான அனைத்து சட்டங்களையும் மீறி விட்டனர். இதில் தொடர்புடையவர்களை பணியில் இருந்து நீக்க வேண்டும். ஒடிசாவின் பல பகுதிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன” என்று தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். எனினும், ஊர்மக்கள் எந்தவிதமான உதவியும் செய்யவில்லையா? போன்ற கேள்விகள் எழும்புவது மட்டுமல்லாது நாட்டின் மூத்த குடிமக்களுக்கு உதவிகளை நேரடியாகச் சென்று வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன.

‘காசு இல்லாமகூட கிராமத்துல வாழ்ந்திடுவோம்.. ஆனா இங்கு?!’- புலம்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
அடுத்த கட்டுரைக்கு