Published:Updated:

ஆன்லைன் வகுப்பு: `மொபைல் இல்லை; மன உளைச்சல்’- 10-ம் வகுப்பு மாணவர் தற்கொலை

ஆன்லைன் வகுப்பு
ஆன்லைன் வகுப்பு ( pixabay )

``தனது பள்ளி நடத்தும் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள அவனுக்கு ஸ்மார்ட் போன் தேவைப்பட்டது. ஆனால், அவனது தந்தையால் அதை வாங்கித் தர முடியவில்லை.”

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்கள் திறப்பது தொடர்பான முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை என்றே மத்திய மற்றும் மாநில அரசுகள் தெரிவித்துவருகின்றன. இந்த நிலையில், பள்ளிகள் பலவும் ஆன்லைன் வகுப்புகளை எடுக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, தனியார் பள்ளிகள் தீவிரமாக வகுப்புகளை எடுத்துவருவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. ஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட்போன், மடிக்கணினி மற்றும் இணைய வசதிகள் தேவைப்படுகின்றன.

ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க அடிப்படை வசதிகள் இல்லாத மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள் என்றும், ஆன்லைன் வகுப்புகளை அரசு தடை செய்ய வேண்டும் என்றும் கல்வியாளர்கள் கூறிவந்தனர். அரசு, ஆன்லைன் வகுப்புக்கு பெரிதாக எதிர்ப்புகளைத் தெரிவிக்கவில்லை. இதனால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாமல், கேரளாவில் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது, அஸ்ஸாமில் ஒரு மாணவர் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் வழிக் கல்வி
ஆன்லைன் வழிக் கல்வி

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள சிராங் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது மாணவர்தான், தற்கொலை செய்துகொண்டவர். அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். மாணவர் பயின்றுவந்த பள்ளி நிர்வாகம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தத் தொடங்கியுள்ளது. வகுப்பில் கலந்துகொள்ள தன்னிடம் ஸ்மார்ட்போன் இல்லாததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மாணவர் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் சிங் பேசும்போது, ``மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் இந்த மாணவர். அவரது தாயார், வேலைதேடி பெங்களூருவுக்குச் சென்றுள்ளார். மாணவரின் தந்தைக்கு வேலை எதுவும் இல்லை. தனது பள்ளி நடத்தும் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள அவனுக்கு ஸ்மார்ட்போன் தேவைப்பட்டது. ஆனால், தந்தையால் அதை வாங்கித் தர முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

`டி.வி, மொபைல் இல்லை; ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியவில்லை!’ - விபரீத முடிவெடுத்த கேரள பள்ளி மாணவி

தொடர்ந்து பேசிய சுதாகர் சிங், ``பள்ளியின் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாததால் பதற்றத்துடனும், மன உளைச்சலுடனும் இருந்துள்ளார். பின்னர், தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவுசெய்துள்ளார். சிறுவனுக்கு நெருக்கமான மாணவர்கள் மற்றும் அருகில் இருப்பவர்களின் வழியாக இந்தத் தகவல்களை நாங்கள் பெற்றோம். இதுதொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும்” என்று கூறியுள்ளார்.

சிறுவன் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, தற்கொலைக் குறிப்பு எழுதிவைத்ததாக வெளியான தகவலை காவல்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். பிரேதப் பரிசோதனை முடிவுக்காக அவரது உடல் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கைகள் வெளியான பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் வகுப்புகள்
ஆன்லைன் வகுப்புகள்
Representational Image

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வலஞ்சேரி எனும் பகுதியைச் சேர்ந்த மாணவியும், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார். இவர், அப்பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவந்துள்ளார். அம்மாநிலத்தில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த மாணவியின் வீட்டில் டி.வி இல்லாததால், ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவரிடம் ஸ்மார்ட்போனும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த மாணவி, மதியம் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள காலியான இடத்தில் தீக்குளித்து உயிரை விட்டுள்ளார்.

இந்த நிலையில், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத காரணத்தால் மற்றொரு மாணவனும் உயிரை விட்டுள்ள சம்பவம் `ஆன்லைன் வகுப்புகள் தேவையா?’ என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது. ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கத் தேவையான அடிப்படைகளை வசதிகளையாவது ஏழை மாணவர்களுக்கு அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் தொடர்ந்து எழுந்துவருவது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள முடியாமல் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரிடையேயும் அச்சத்தையும் கவலையையும் அதிகரித்துள்ளது.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு