Published:Updated:

ஒடிசா: `மோசமான உடல் நிலை; ஆம்புலன்ஸ் ஊழியர்களின் உணவு இடைவேளை!’ - குழந்தைக்கு நேர்ந்த சோகம்

ஆம்புலன்ஸ்
ஆம்புலன்ஸ் ( Pixabay )

``ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 90 நிமிடங்கள் கழித்து வந்தனர். அவர்கள் அதிக நேரம் உணவு இடைவேளை எடுத்துக்கொள்ளாமல் இருந்திருந்தால் என் குழந்தை உயிருடன் இருந்திருக்கும்."

ஒடிசா மாநிலத்தில் பழங்குடி மக்கள் அதிகம் வாழும் மயூர்பாஞ் எனும் மாவட்டம் உள்ளது. இந்தப் பகுதியில் வசித்து வரும் நிரஞ்சன், கீதா ஆகியோருக்கு 1 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்தக் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பாரிபடா பகுதியில் உள்ள பி.ஆர்.எம் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இங்கு சிகிச்சையளித்த பின்னும் உடல்நிலை சரியாகாத காரணத்தால் மருத்துவர்கள் குழந்தையை கட்டக் பகுதியில் உள்ள எஸ்.சி.பி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, குழந்தையை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டுள்ளது.

குழந்தை
குழந்தை
Representational Image

ஆம்புலன்ஸில் மருத்துவமனை நோக்கிச் செல்லும்போது வழியில் உணவு இடைவேளைக்கு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சென்றுள்ளனர். விரைவில் திரும்பி வருவதாகவும் குழந்தையின் பெற்றோர்களுக்கு உறுதியளித்துள்ளனர். ஆனால், அவர்கள் சுமார் 90 நிமிடங்கள் கழிந்த பிறகே, ஆம்புலன்ஸ்க்கு வந்ததாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து, அங்கிருந்து கட்டக் நோக்கி புறப்படும்போது குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாக மாறியுள்ளது. இதனால், பாரிபடா பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீ தூரத்தில் உள்ள கிருஷ்ணாசந்திரபூர் பகுதியில் உள்ள சுகாதார நிலையத்தில் குழந்தையை அனுமதித்துள்ளனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

மருத்துவர்கள்
மருத்துவர்கள்

குழந்தையின் பெற்றோர் இதுதொடர்பாகப் பேசும்போது, ``ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 90 நிமிடங்கள் கழித்து வந்தனர். அவர்கள் அதிக நேரம் உணவு இடைவேளை எடுத்துக்கொள்ளாமல் இருந்திருந்தால் என் குழந்தை உயிருடன் இருந்திருக்கும்" என்று வேதனையுடன் தெரிவித்துள்ளனர். ஆம்புலன்ஸ் ஊழியர்களை அவர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து,அருகில் இருந்த காவல்நிலையத்திலும் அவர்கள் மீது புகார் அளித்துள்ளனர். எனினும், மாவட்ட அதிகாரி ஒருவர் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். அவர்கள் வெறும் 20 நிமிடம் மட்டுமே உணவு இடைவேளைக்குச் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தேனி: `தாமதமான ஆம்புலன்ஸ்!’ - தள்ளுவண்டியில் மூதாட்டி உடலை எடுத்துச் சென்ற அவலம்
அடுத்த கட்டுரைக்கு