Published:Updated:

Har Ghar Tiranga: மூன்று நாள் கொண்டாட்டம் முடிந்தது... தேசியக் கொடியை என்ன செய்வது? ஒரு வழிகாட்டல்!

இந்தியா 75: தேசியக் கொடி

தேசியக் கொடிக்கு அவமரியாதை செய்யும்விதமாக ஏதேனும் செயல்களில் ஈடுபட்டால், கடும் அபராதத்துடன் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் உண்டு.

Har Ghar Tiranga: மூன்று நாள் கொண்டாட்டம் முடிந்தது... தேசியக் கொடியை என்ன செய்வது? ஒரு வழிகாட்டல்!

தேசியக் கொடிக்கு அவமரியாதை செய்யும்விதமாக ஏதேனும் செயல்களில் ஈடுபட்டால், கடும் அபராதத்துடன் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் உண்டு.

Published:Updated:
இந்தியா 75: தேசியக் கொடி

'தாயின் மணிக்கொடி பாரீர்' என்று 75-வது சுதந்திர தினத்துக்கு மூன்று நாள்கள் தொடர்ச்சியாகத் தேசியக் கொடியை வீடுகளில் ஏற்றி வைத்தார்கள் பலர். 'ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்றுவோம்' என்ற முழக்கத்துடன் மத்திய அரசு செய்த 'ஹர் கர் திரங்கா' (Har Ghar Tiranga) பிரசாரத்தின் விளைவாக இந்தியா முழுக்க சுமார் 27 கோடி வீடுகளில் தேசியக் கொடி ஏற்றப்பட்டதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது.

ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15 வரை மூன்று நாள் கொண்டாட்டங்கள் இனிதே முடிந்தன. இப்போது எழுந்திருக்கும் பெரிய கேள்வி... அந்த தேசியக் கொடியை என்ன செய்வது?

தேசியக் கொடியை ஏற்றி வைப்பது தொடர்பாக விதிகள் இருப்பது போலவே, அதை இறக்கிப் பாதுகாக்கவும் சில விதிகள் உள்ளன.

இதுவரை கதரில் கையால் உருவாக்கப்பட்ட துணிக்கொடிகளை மட்டுமே பயன்படுத்தலாம் என்று விதி இருந்தது. இதுதவிர காகிதக் கொடிகளும் பிளாஸ்டிக் கொடிகளும் பயன்படுத்தப்பட்டன. (பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டபோதே, பிளாஸ்டிக் தேசியக் கொடிகள் உருவாக்கவும் தடை விதிக்கப்பட்டது. ஆனால், இந்தத் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கொடிகளை இந்த ஆண்டும் ஏராளமானோர் பயன்படுத்தினார்கள். அவை ஆகஸ்ட் 16-ம் தேதி காலையிலேயே குப்பைக்கு வந்துவிட்டன. அவற்றை என்ன செய்வது என்று தெரியாமல் துப்புரவுப் பணியாளர்கள் தவிக்கிறார்கள்.)

இந்தியா 75: தேசியக் கொடி
இந்தியா 75: தேசியக் கொடி
For Representation Only

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடி விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இதன்படி பாலியஸ்டர் உள்ளிட்ட செயற்கை இழைகளில் செய்யப்பட்ட கொடிகளையும் பயன்படுத்தலாம். மெஷினில் உருவாக்கப்பட்ட தேசியக் கொடிகளையும் மக்கள் வீடுகளில் ஏற்றலாம் என்று திருத்தம் செய்யப்பட்டது.

துணி மற்றும் செயற்கை இழைகளால் உருவாக்கப்பட்ட கொடிகளை இறக்கிப் பாதுகாப்பாக வைத்திருந்து குடியரசு தினத்துக்கும் அடுத்த ஆண்டு சுதந்திர தினத்துக்கும் பயன்படுத்த முடியும். இந்தக் கொடிகளை இறக்கியதும், முறைப்படி மடித்து வைக்க வேண்டும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொடியை மடித்து வைக்கவும் விதிகள் உண்டு. கொடியை நீளவாக்கில் தரையில் பரப்பி வைக்க வேண்டும். முதலில் காவிப் பகுதியை நீளவாக்கில் வெள்ளைக்குக் கீழே மடிக்க வேண்டும். அப்படி மடிக்கும்போது, கொஞ்சம் காவிப்பகுதி தெரிய வேண்டும். அடுத்து பச்சைப் பகுதியை இதேபோல மடிக்க வேண்டும். அதிலும் கொஞ்சம் பச்சை தெரிய வேண்டும். அதன்பின் வெள்ளைப் பகுதியைக் குறுக்காக இரண்டு முனைகளிலும் மடித்துக் கீழே தள்ள வேண்டும். இப்போது மத்தியில் வெள்ளைப் பகுதியுடன் அசோகச் சக்கரமும், மேலே சிறிது காவியும், கீழே சிறிது பச்சையும் தெரியும்.

இப்படி சதுரமாக மடிக்கப்பட்ட கொடியைக் கவனமாக உள்ளங்கையில் ஏந்திச் சென்று ஏதாவது பெட்டியில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

மத்திய அரசு வெளியிட்ட வரைமுறைகள்
மத்திய அரசு வெளியிட்ட வரைமுறைகள்
கிழிந்துவிட்ட அல்லது சிதைந்த கொடிகளையும் காகிதக் கொடிகளையும் என்ன செய்வது? அதற்கும் சில விதிகள் இருக்கின்றன.

அந்தக் கொடியை அதன் கண்ணியம் குலையாமல் நெருப்பில் போட்டு அழித்துவிடலாம். நெருப்பை மூட்டி, அது எரியும்போது, முன்பு சொன்ன முறைப்படி மடித்த கொடியை அதில் போட்டு அழிக்க வேண்டும். இதை வீட்டிலோ, தோட்டத்திலோ தனியாகத்தான் செய்ய வேண்டும். பலர் பார்க்க, பொது இடத்தில் தேசியக் கொடியை எரிப்பது குற்றம்.

எரிப்பதற்குப் பதிலாக, குடியிருப்போர் சங்கத்தினர் அல்லது உள்ளாட்சி அமைப்பினர் எல்லா கொடிகளையும் சேகரிக்கலாம். அவற்றை மொத்தமாக ஒரு மரப்பெட்டியில் போட்டுப் புதைக்கலாம். அப்படிப் புதைக்கும்போது, ஒரு நிமிடம் மௌனமாக நிற்க வேண்டும் என்பது விதி.

ஹர் கர் திரங்கா கொண்டாட்டங்கள் முடிந்தவுடன் தவறுதலாகப் பலர் தேசியக் கொடியைக் குப்பையில் போடலாம் என்பதால், பல நகரங்களின் துப்புரவுப் பணியாளர்களுக்கு விரிவான அறிவுறுத்தல்கள் தரப்பட்டுள்ளன.

தேசியக் கொடிக்கு அவமரியாதை செய்யும்விதமாக ஏதேனும் செயல்களில் ஈடுபட்டால், கடும் அபராதத்துடன் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் உண்டு.

* அரசு மரியாதையுடன் செய்யப்படும் நல்லடக்கங்கள் தவிர வேறு யாருடைய மரணத்திலும் தேசியக் கொடியைப் போர்த்துதல் கூடாது.

* உடைகள் மற்றும் சீருடைகளில் ஒரு பகுதியாகத் தேசியக் கொடியைப் பயன்படுத்தக் கூடாது.

* மார்புக்குக் கீழே தேசியக் கொடியை அணியக்கூடாது.

* கைக்குட்டை, உள்ளாடைகள், திரைச்சீலைகள், துணி விரிப்பான்கள் போன்றவற்றில் தேசியக் கொடியை எம்பிராய்டரி செய்யக்கூடாது.

இந்தியா 75: தேசியக் கொடி
இந்தியா 75: தேசியக் கொடி

* தேசியக் கொடியில் வாசகங்கள், எழுத்துகள் எதையும் சேர்க்கக் கூடாது.

* பொக்கே, பரிசுகள் போன்றவற்றின் மீது தேசியக் கொடியை உறை போலப் பயன்படுத்தக் கூடாது.

* சிலைகள், மேடைகள் போன்றவற்றில் தேசியக் கொடியை வைக்கக் கூடாது.

* தேசியக் கொடியைத் தரையிலோ, தண்ணீரிலோ வீசக் கூடாது.

* வாகனங்களிலும் விமானங்களிலும் மேல் விரிப்பு போலப் போடக்கூடாது.

நம் தேசியக் கொடியை அதற்குரிய மரியாதையுடன் இறக்கிவைத்துப் பாதுகாப்போம்.