Published:Updated:

`பயங்கரவாதிகள் தாக்குதலில் இருவர் உயிரிழப்பு!’ - உடல்மீது அமர்ந்து அழுத 3 வயது குழந்தை

பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியான நபர்
பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியான நபர்

``சிஆர்பிஎஃப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவரும் பொதுமக்களில் ஒருவரும் பலத்த காயத்தால் உயிரிழந்துள்ளனர். இரண்டு சிஆர்பிஎஃப் வீரர்களின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.”

ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் உள்ள ஸ்ரீநகரிலிருந்து சுமார் 50 கி.மீ தூரத்தில் பாரமுல்லா என்ற மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தின் சோபூர் எனும் நகரில், சிஆர்பிஎஃப் வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென அங்கு வந்த பயங்கரவாதிகள், வீரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். சிஆர்பிஎஃப் வீரர்களும் பதிலடி கொடுத்தனர். ஆனால், பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பித்தனர். இந்த தாக்குதலில், நான்கு வீரர்கள் படுகாயமடைந்தனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டார்.

பயங்கரவாதிகளால் தாக்குதல் நடைபெற்ற அப்பகுதியில், காரில் இருந்த ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். பலமாகக் காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். அப்போது, அவருடன் மூன்று வயது குழந்தையும் இருந்துள்ளது. துப்பாக்கி தாக்குதலிலிருந்து இந்த மூன்று வயது குழந்தையை வீரர்கள் மீட்டுள்ளனர். இந்தக் குழந்தை, இறந்த தனது உறவினரின் உடல் மீது அமர்ந்து அழும் புகைப்படங்களும், வீரர்கள் குழந்தையை சமாதானப்படுத்த முயலும் புகைப்படங்களும் காரில் அழைத்துச் செல்லும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் கவலையடையச் செய்துள்ளது. தற்போது, அந்தச் சிறுவனை அவரது தாயிடம் ஒப்படைக்க வீரர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.

ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி என்கவுன்டர்! -பயங்கரவாதிகள் இல்லாத மாவட்டமாக தோடா

இந்தச் சம்பவம் தொடர்பாக, ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியின் டிஜிபி தில்பாக் சிங் பேசும்போது, ``சோபூரில் உள்ள பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிஆர்பிஎஃப் வீரர்களும் பொதுமக்களும் இதில் காயமடைந்துள்ளனர். பயங்கரவாதிகளைப் பிடிக்க அப்பகுதியைச் சுற்றி தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடந்துவருகிறது” என்று கூறியுள்ளார். சிஆர்பிஎஃப் தரப்பில் இதுதொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ``சிஆர்பிஎஃப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவரும் பொதுமக்களில் ஒருவரும் பலத்த காயத்தால் உயிரிழந்துள்ளனர். இரண்டு சிஆர்பிஎஃப் வீரர்களின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஒரு வீரருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன” என்று கூறியுள்ளனர்.

குழந்தையை சமாதானப்படுத்தும் வீரர்
குழந்தையை சமாதானப்படுத்தும் வீரர்

கடந்த மாதம் மட்டும், பயங்கரவாதிகளுக்கும் சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கும் இடையே நடந்த தாக்குதலில், சுமார் 48 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த திங்கள்கிழமை மட்டும் ஹிஸ்புல் முஜாஹிதீன் என்கிற பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தளபதி உட்பட, மூன்று பேரை சுட்டுக்கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல, கடந்த ஐந்தரை மாதங்களில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அதில் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, அல் பதர் மற்றும் அன்சார் கஸ்வதுல் ஹிந்த் ஆகிய பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகளும் அடங்குவர் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

4 முதல் 7 முகாம்கள்... 35 பயங்கரவாதிகள் பலி?- பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்
அடுத்த கட்டுரைக்கு