Published:Updated:

கொரோனா:`ஒருநாள்கூட விடுமுறை எடுக்கவில்லை!’ - மருத்துவர் மரணத்தால் கலங்கும் குடும்பம்

மருத்துவர்
மருத்துவர் ( Claudio Furlan/LaPresse )

``எங்களுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும். என் கணவரின் வேலையை எனக்கு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.” - மருத்துவரின் மனைவி

கொரோனா வைரஸ் ஒவ்வொரு நாளும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால், மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் பலரும் கடுமையாகப் பாதிப்படைந்து வருகின்றனர். சில மருத்துவர்கள் மீது சில விஷயங்களில் குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுந்தாலும் பல மருத்துவர்கள் இரவு பகல் பாராது நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர். வைரஸ் பாதிப்பு அச்சத்தை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வெளிப்படுத்தினாலும் தங்களது உயிரையும் பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர். இதுவரை இந்தியாவில் ஏறக்குறைய 100 மருத்துவர்கள் கொரோனா வைரஸுக்குப் பலியாகியுள்ளனர். ஆனால், இவர்களில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிக்கு வந்த மருத்துவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு எந்த உதவியும் வழங்கப்படுவதில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளது மருத்துவ வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவிட் -19 கொரோனா
கோவிட் -19 கொரோனா

டெல்லி அரசு மருத்துவமனையில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிபுரிந்து வந்தவர் 42 வயதான மருத்துவர் ஜாவேத் அலி. கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கிய மார்ச் மாதம் முதல் முன் வரிசையில் நின்று வைரஸை எதிர்த்து போராடி வருகிறார். இரவு பகலாக நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்த இவருக்கு கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். வென்டிலேட்டரில் இருந்தபடி கடந்த 10 நாள்களாக ஜாவேத் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், மருத்துவர் ஜாவேத் அலி சிகிச்சை பலனளிக்காமல் எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார்.

ஒப்பந்த மருத்துவராக இரவு பகலாக அவர் வேலை செய்த போதிலும் எந்தவித உதவியும் அவருக்கு வழங்கப்படவில்லை என அவரது குடும்பம் குற்றச்சாட்டுகளை எழுப்பி தற்போது இழப்பீடு கேட்டும் கோரிக்கை விடுத்துள்ளது. இவருக்கு மனைவியும் 6 வயதில் ஒரு மகனும் 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர். ``நான் என் கணவரை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். கடைசி வரை அவர் தன்னுடைய பணியைச் செய்து வந்தார். அவர் ஒரு தியாகி. கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கிய மார்ச் மாதம் முதல் ஒருநாள்கூட அவர் விடுமுறை எடுக்கவில்லை. பண்டிகை நாள்களிலும் அவர் தனது பணியைத் தொடர்ந்து செய்து வந்தார்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

டெல்லி : `என் மகனை காப்பாற்றுங்கள்!’ - ஜூனியருக்காக ஒன்றிணைந்த  100 மருத்துவர்கள்

மருத்துவர் ஜாவேத் அலியின் மனைவியான மருத்துவர் ஹீனா கவுசர் தொடர்ந்து பேசும்போது, ``என் கணவரை தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக நாங்கள் சேர்த்தோம். சொந்த செலவில் இருந்து கிட்டத்தட்ட ரூபாய் 6 லட்சம் வரை செலவு செய்தோம். எந்தவிதமான உதவிகளும் எங்களுக்கு கிடைக்கவில்லை. சிங்கிள் மதராக நான் எப்படி வாழ்க்கையை நடத்த முடியும்? எங்களுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும். என் கணவரின் வேலையை எனக்கு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சரான சத்யேந்திர ஜெயினுக்கு என்.ஹெச்.எம் மருத்துவர்கள் நலச்சங்கம் கடிதம் ஒன்றையும் எழுதி அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவர்கள்
மருத்துவர்கள்
AP

இந்திய மருத்துவ சங்கமானது கடந்த வாரம் மருத்துவர்களுக்கு `ரெட் அலர்ட்’ ஒன்றை அனுப்பியது. அந்த அறிக்கையில் இதுவரை 99 மருத்துவர்கள் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். சுமார் 1,300-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பாதிப்படைந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ``கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து விடுபடுவது தொடர்பான நாட்டின் நம்பிக்கைக்கு கலங்கரை விளக்கமாக மருத்துவத்துறை இருந்து வருகிறது. இந்த நிலையில், வைரஸ் பாதிப்பால் மருத்துவர்கள் மரணம் அடைவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்” என்றும் தெரிவித்திருந்தது. டெல்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கொரோனா போரில் ஈடுபட்டுள்ள சுகாதாரத்துறை ஊழியர்கள் இறந்தால் அவர்கள் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று கடந்த ஏப்ரல் மாதல் அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

credits : ndtv

கொரோனா: `10 லட்சத்தைக் கடந்த பாதிப்பு!’ - மருத்துவர்களின் நிலை?
அடுத்த கட்டுரைக்கு