Published:Updated:

`வெளியூர் பயணமில்லை; டாக்டருக்குக் கொரோனா!’ -முதல் பாசிட்டிவ் கேஸால் அதிர்ச்சியில் மேகாலயா

கொரோனா
கொரோனா

மேகாலயாவில் கோவிட்-19 'Silent Carrier' மூலமாகத்தான் மருத்துவருக்குப் பரவியிருக்கிறது என அம்மாநிலத்தில் தகவல்கள் வெளிவந்தவாறு உள்ளன.

கொரோனா வைரஸ், இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருகிற நிலையில், வடக்கிழக்கு மாநிலங்களையும் இது பதம் பார்க்கத் தொடங்கியுள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நாகாலாந்தில் ஒரு நபருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மேகாலயாவிலும் ஒருவருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஷில்லாங்கில் உள்ள பெத்தானி மருத்துவமனையில் பணிபுரியும் 69 வயது மருத்துவருக்குக் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா
கொரோனா

பயணக்குறிப்புகள் எதுவும் (ட்ராவல் ஹிஸ்டரி) இல்லாத இந்த மருத்துவருக்கு கோவிட்-19 உறுதிசெய்யப்பட்டது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பெத்தானி மருத்துவமனை மூடப்பட்டு ஷில்லாங்கில் உடனேயே இரண்டு நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மேலும், ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மேகாலய அரசு அறிவித்தது. இதையடுத்து, மாவட்டங்கள், மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துகளைத் தடை செய்தது. கிராமப்புறங்களில் மட்டும் விவசாயத்தைத் தொடர அனுமதி அளித்துள்ள அரசு, மார்ச் 22-க்கு முன் பெத்தானி மருத்துவமனைக்குச் சென்றவர்களைத் தனிமைப்படுத்தும் நோக்கில் தாமாக முன்வருமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

`கொரோனா இவர்களால் பரவுகிறது!’ - ஃபேஸ்புக்கில் வதந்தி பரப்பிய நாமக்கல் எலெக்ட்ரீஷியன்

மேகாலயாவில் கோவிட்-19 'Silent Carrier' மூலமாகத்தான் மருத்துவருக்குப் பரவியிருக்கிறது என அம்மாநிலத்தில் தகவல்கள் வெளிவந்தவாறு உள்ளன. இது மிக ஆச்சர்யமானதாகவும் சவாலானதாகவும் உள்ளதாக மேகாலய முதலமைச்சர் கொன்ராட் சங்மா கூறினார். இதனால், மிகுந்த எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் மக்கள் செயல்பட பல நடவடிக்கைகளை மேகாலய அரசு மேற்கொண்டு வருகிறது. பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக மேகாலயாவில் பல்வேறு இடங்களில் சிக்கித்தவிக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தகுந்த நேரத்தில் முன்னேற்பாடுகளுடன் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டு மாநிலப் போக்குவரத்துத் துறையால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், உத்தரவு வரும் வரை மாநிலத்தின் நகர்ப்புறங்களில் தனியார் போக்குவரத்து இயக்கம் பல கட்டுப்பாடுகளுடன் இயங்கும் என்றும் கூறியுள்ளது.

கொரோனா
கொரோனா

மாநிலத்தில் ‘வாரச் சந்தைகள்’ திறக்கப்படுவது குறித்து துணை முதல்வர் ஏப்ரல் 6-ம் தேதி அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெளிவுபடுத்தினார். அஸ்ஸாமுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் மேகாலயா மாவட்டங்களில் இந்த உள்ளூர் கிராம சந்தைகள் மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய அந்தந்தப் பகுதியின் துணை ஆணையர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இப்போதைய சூழ்நிலையில் இதுமாதிரியான நடவடிக்கைகள் மக்கள் பாதுகாப்புகளுடன் செயல்படப் பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் அரசு கூறியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் சிக்கிம் மட்டுமே கொரோனா வைரஸால் பாதிக்கப்படாத மாநிலமாக எஞ்சியிருப்பது குறிப்பிடத்தக்கது.

"மூச்சுத்திணறல் ஏற்பட்டாலே கொரோனா என்று அர்த்தமில்லை!" - மருத்துவமனையில் 'சரி' (SARI) வார்டுகள் ஏன்?
அடுத்த கட்டுரைக்கு