மத்திய அரசு சமீபத்தில் யு.பி.எஸ்.சி தேர்வு முடிவுகளை வெளியிட்டது. அதில் அகில இந்திய அளவில் முதல் மூன்று இடங்களைப் பெண்கள் பிடித்திருந்தனர். மேலும், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டு விவாகரத்துக் கோரி கணவருடன் போராடிய நிலையில், இத்தேர்வில் 177-வது ரேங்க் பெற்று சாதித்திருப்பது, பலரது பாராட்டுகளையும் பெற்றுத் தந்துள்ளது.

ஹபூர் மாவட்டத்தில் உள்ள பில்குவா என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஷிவாங்கி கோயல். 7 வயதுப் பெண் குழந்தைக்குத் தாயான இவர், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டு இப்போது தன் குழந்தையுடன் தன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். கணவருடனான விவாகரத்து வழக்கு நடந்துகொண்டிருக்கிறது.
பெற்றோர் வீட்டுக்கு வந்த ஷிவாங்கி, தன் இளம் வயது கனவான யு.பி.எஸ்.சி தேர்வு எழுத முடிவு செய்தார். திருமணத்துக்கு முன்பு இரண்டு முறை தேர்வு எழுதி தோல்வி அடைந்துவிட்ட நிலையில் மீண்டும் முயற்சியைத் தொடர்ந்தார். தேர்வில் ஷிவாங்கி தற்போது அகில இந்திய அளவில் 177-வது இடம் பெற்று சாதித்து இருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இது குறித்து ஷிவாங்கி `இண்டியா டுடே’வுக்கு அளித்துள்ள பேட்டியில், `திருமணமான பெண்களுக்கு ஒரு செய்தியை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பெண்களுக்கு, திருமணமாகிச் செல்லும் வீட்டில் ஏதாவது கஷ்டம் ஏற்படும்போது அதை நினைத்து பயப்படக் கூடாது. உங்கள் சொந்தக்காலில் நிற்க முடியும் என்று நிரூபியுங்கள். பெண்கள் விரும்பும் எதையும் செய்ய முடியும். நீங்கள் கஷ்டப்பட்டு படித்தால், கடினமாக உழைத்தால் உங்களால் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகவும் ஆக முடியும்.

நான் திருமணத்துக்கு முன்பே ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்று விரும்பினேன். அதற்காக இரண்டு முறை தேர்வு எழுதி தோல்வியடைந்தேன். திருமணத்துக்குப் பிறகு, கணவர் வீட்டில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டேன். இதனால் குழந்தையோடு என் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறேன். நான் விரும்புவதை செய்யச் சொல்லி என் தந்தை என்னிடம் கூறிவிட்டார். ஏன் மீண்டும் யு.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகக் கூடாது என்று நினைத்தேன். என் கனவு, இப்போது நனவாகி இருக்கிறது. எனது வெற்றிக்கு என் பெற்றோர்தான் காரணம்’ என தன்னம்பிக்கை மிளிரத் தெரிவித்திருக்கிறார்.