Published:Updated:

`கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்... பிரதமர் மோடியின் செல்வாக்கு உயர்வு!’- அமெரிக்க ஊடகம் புகழாரம்

``மோடி மக்களை ஒன்று திரட்டுபவராகப் பார்க்கப்படுகிறார். வீட்டு வாசல்களில் நின்று மக்கள் விளக்கு ஏற்ற வேண்டும், கைகளைத் தட்ட வேண்டும் என்று அவர் கூறினார். மக்களும் அதனைப் பின்பற்றினர்”

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த வைரஸைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் தொற்று நோய்ப் பரவல் கட்டுப்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. எனினும், மருத்துவப் பொருள்கள் தட்டுப்பாடு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலைமை, பொருளாதாரம், நிவாரணம் தொடர்பான விஷயங்கள் என அதிக பிரச்னைகள் நிலவி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக மத்திய அரசின் மீது பல துறைகளைச் சேர்ந்தவர்களும் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் `தி நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம், கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளால் பிரதமர் மோடியின் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது என்றும் அவரது செல்வாக்கை உயர்த்தியுள்ளதாகவும் கூறியுள்ளது.

டெல்லி வன்முறை
டெல்லி வன்முறை

தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள கட்டுரையில், ``இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்பு பிரதமர் மோடி கடுமையான சவால்களை எதிர்கொண்டார். அரசுக்கு எதிரான பல போராட்டங்கள் நாட்டை உலுக்கின. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவுக்கு வருகை தந்தபோது இந்து மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடையே வன்முறை அதிகமாக நடந்தது. லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டது. பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சி அடைந்தது. இந்நிலையில்தான், கொரோனா வைரஸானது உலகின் பல நாடுகளுக்கும் பரவியது. அனைத்து நாடுகளிலும் பொருளாதாரம் பாதிப்படைந்தது. இந்தியாவில் பொருளாதாரம் மிக மோசமான நிலையை அடைந்தது. ஆனால், இந்தியா பிரதமர் மோடி பின்னால் திரண்டது” என்று கூறப்பட்டுள்ளது.

முறுக்கிய முதல்வர்கள்... முடங்கிய நிதித்துறை - 20 லட்சம் கோடி மோடி மேஜிக் பலிக்குமா?

சமீபத்தில் நடந்த கருத்துக்கணிப்பு ஒன்றில், கடந்த சில மாதங்களாக புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி 80 முதல் 90 சதவிகிதம் அளவுக்கு விரைவாக ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஆகியோருடன் ஒப்பிடும்போது, இந்தக் கொரோனா நெருக்கடியை மோடி திறம்படக் கையாள்வதாகவும் நியூயார்க் டைம்ஸ் புகழ்ந்துள்ளது. இதைப்போலவே கொரோனா விஷயத்தில் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வந்தால் கட்சியின் கொள்கைகள் சார்ந்த சர்ச்சைகளைத் தாண்டி இன்னும் வலுவான தலைவராக அவர் உருவெடுப்பார் என ஆய்வாளர்கள் சிலர் கூறுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தேர்தலில் பாகிஸ்தான் தொடர்பான விஷயங்கள் அவருக்கு வலுவைத் தந்தன. அதேபோல, இந்த வைரஸ் தொடர்பான நடவடிக்கைகள் பல இந்தியர்களை, அவரது கொள்கைகள் குறித்த பிரச்னைகளைக் கடந்து அவரது பக்கம் கொண்டு வருகிறது என்றும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்
Twitter / Atul Yadav

மோடியின் வெற்றி குறித்து ஆய்வாளர்கள் குறிப்பிடுவதாக அந்தக் கட்டுரையில், ``மோடி மக்களை ஒன்று திரட்டுபவராகப் பார்க்கப்படுகிறார். இதனால்தான், நான்கு மணி நேரத்துக்கு முன்பாக ஊரடங்கு தொடர்பான அறிவிப்புகளை அவர் வெளியிட்டபோதும் மக்கள் அதற்குக் கீழ்ப்படிந்தனர். வீட்டு வாசல்களில் நின்று மக்கள் விளக்கு ஏற்ற வேண்டும், கைகளைத் தட்ட வேண்டும் என்று அவர் கூறினார். மக்களும் அதனைப் பின்பற்றினர்” என்று கூறியுள்ளது. எனினும், இந்த ஊரடங்கால் ஏற்பட்ட வேலை இழப்பு காரணமாகப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதில் ஏற்பட்ட கஷ்டங்களையும் உத்தரப்பிரதேசத்தில் நடந்த விபத்துகளையும் நியூயார்க் டைம்ஸ் சுட்டிகாட்டியுள்ளது.

அமெரிக்காவைப் போல பாகுபாடுகளைக் காட்டாமல் தனது சித்தாந்தத்தைப் பொருட்படுத்தாமல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள அதிகாரிகளும் இணைந்து சிறப்பாக மோடி பணியாற்றி வருவதாகவும் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர். ஜிண்டால் ஸ்கூல் ஆஃப் இன்டநேஷனல் அஃப்ஃபர்ஸின் டீன் ஸ்ரீராம் சவுலியா, ``இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக இருந்தபோதே அவர் ஊரடங்கை அமல்படுத்தினார். இந்த விஷயத்தில் பல நாட்டுத் தலைவர்களை விடவும் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். `நீங்கள் உயிருடன் இருந்தால் மட்டுமே உலகம் இயங்கும்’ என்ற வகையில் அவர் பேசியது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது” என்று கூறியுள்ளார். ஆனால், இனி இந்தியாவுக்குக் கடினமான நாள்கள் வர இருப்பதாகவும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

`ட்ரம்ப்பே... நீ அமெரிக்காவுக்குதான் மாஸ்... ஆனா, மோடி முன்னாடி தூஸ்!' - அனல் கோலிவுட் பிரஸ் மீட்ஸ் #Parody

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சுமார் 130 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் 80,000-க்கும் அதிகமானவர்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், 2,700-க்கும் அதிகமானவர்கள் இந்த வைரஸூக்குப் பலியாகியுள்ளனர். அமெரிக்கா, இத்தாலி, ரஷ்யா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு என்றும் குறைவான அளவில் பரிசோதனைகளை அரசு மேற்கொண்டிருந்தாலும், உண்மையான தகவல்களை மோடி அரசு மறைப்பதாக வல்லுநர்கள் யாரும் நம்பவில்லை என்றும் நியூயார்க் டைம்ஸ் குறிப்பிடுகிறது. மேலும், பெரும்பாலான இந்தியர்கள் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அப்பத்திரிகை கூறுகிறது.

கொரோனா
கொரோனா

ஆன்லைன் வழியாக கருத்துக் கணிப்புகளைச் செய்யும் அமெரிக்க நிறுவனமான மார்னிங் கன்செல்ட், மற்ற தலைவர்களைவிட மோடி மிகச்சிறப்பாகச் செயல்படுவதாகச் சொல்கிறது நியூயார்க் டைம்ஸ். அதிபர்கள் ட்ரம்ப், புதின், ஜெர்மனியின் ஏஞ்சலோ மேர்கெல், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பல அதிபர்களைவிடவும் அவர் பிரபலமானவராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியா கருத்துக் கணிப்பின்படி 93.4 சதவிகிதம் பேர் பிரதமர் மோடி, இந்த நெருக்கடியைச் சிறப்பாகக் கையாள்வதாகக் கூறியுள்ளனர். இந்த ஆய்வுகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட ஊரடங்கால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்கள் பலரும் பங்கெடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், மோடியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இந்தக் கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Credits : NYT

வாஜ்பாய் - அத்வானி முதல் மோடி - அமித் ஷா வரை... இது பி.ஜே.பி-யின் கதை! #BJPat40
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு