Published:Updated:

கொரோனா: கோவா மருத்துவரின் `கட்டிப்பிடி வைத்தியம்’ - என்ன காரணம்?

மருத்துவர் எட்வின் கோம்ஸ்
மருத்துவர் எட்வின் கோம்ஸ்

``கொரோனாவால் பாதிப்படைந்த நபர் ஒருவருக்கு அதிகமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டால், அந்த நபரைக் காப்பாற்றுவது மிகவும் கடினம். மூச்சுத் திணறல் அறிகுறியின் ஆரம்பத்திலேயே அந்த நபர் மருத்துவரை அணுக வேண்டும்.”

கொரோனா வைரஸால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. எனினும், மறுபுறம் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பும் நபர்களை மக்கள் அச்சத்துடன் அணுகுவதாகவும் நிராகரிப்பதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

மத்திய மற்றும் மாநில அரசுகள் இதுதொடர்பாக விழிப்புணர்வுகளை அளித்து வந்தாலும் மக்களிடம் தொடர்ந்து அச்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில், மருத்துவர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வீட்டுக்குச் செல்லும் நபர்களைக் கட்டியணைத்து அன்புடன் அனுப்பி வைக்கும் சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

கொரோனா
கொரோனா

கோவாவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்து வருபவர், மருத்துவர் எட்வின் கோம்ஸ். மார்கோ பகுதியை மையமாகக் கொண்டு செயல்படும் மருத்துவமனை ஒன்றில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் குழுவை தற்போது இவர் வழிநடத்திக்கொண்டிருக்கிறார். கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த மூன்று மாதங்களில் மீண்ட சுமார் 190 நபர்களை மருத்துவர் எட்வின் கட்டியணைத்து அன்புடன் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். மருத்துவமனையில் 98 நாள்கள் தொடர்ந்து பணியாற்றிய பிறகு, தற்போது வீடு திரும்பியுள்ள மருத்துவர் எட்வின் குணமடைபவர்களைக் கட்டியணைப்பதற்கான காரணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

உயர் அதிகாரியின் அழைப்பு: உயிரிழந்த பி.டி.ஓ? - கொரோனா அதிர்ச்சியில் திருவள்ளூர் தி.மு.க

மருத்துவர் எட்வின் இதுதொடர்பாகப் பேசும்போது, ``கொரோனா வைரஸ் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறும் அனைத்து நபர்களையும் நான் கட்டியணைக்கிறேன். அவர்களை மக்கள் நிராகரிக்கக் கூடாது என்ற செய்தியை அனைவரிடமும் எடுத்துரைக்கவே இந்த வழியை நான் பின்பற்றுகிறேன்” என்றார். கொரோனா நோயாளிகளை அவர் `கோவிட் ஏஞ்சல்ஸ்’ என்றும் குறிப்பிடுகிறார். மேலும், ``அவர்களின் பிளாஸ்மா மற்ற கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. குணமடைந்த நபர்கள் தங்களுடைய உடல்நல அனுபவத்தை மற்ற நபர்களுடன் பகிர்ந்துகொள்ள தகுதியானர்வர்கள்” என்றும் கூறியுள்ளார்.

``கொரோனா வைரஸ் பாதித்தால் மூச்சுத் திணறல் அறிகுறி ஏற்படும்" எனத் தொடர்ந்து பேசிய அவர், ``கொரோனாவால் பாதிப்படைந்த நபர் ஒருவருக்கு அதிகமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டால், அந்த நபரைக் காப்பாற்றுவது மிகவும் கடினம். மூச்சுத் திணறல் அறிகுறியின் ஆரம்பத்திலேயே அந்த நபர் மருத்துவரை அணுக வேண்டும். இந்த விஷயங்கள் குணமடைந்த நபர்களுக்கு நன்றாகத் தெரியும்” என்று தெரிவித்தார். பாதிப்பில் இருந்து மீண்டு மற்ற நோயாளிகளுக்கு உதவி செய்து வரும் நபர்களையும் மருத்துவர் எட்வின் குறிப்பிட்டுத் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

கொரோனா
கொரோனா

ஹாட்ஸ்பாட் பகுதியான மங்கூர் ஹில்லில் இருந்து வந்த நோயாளி ஒருவர் குணமடைந்த பின்னர், மருத்துவமனையில் இருந்த கொரோனா நோயாளிகளுக்கு உணவு கொடுக்கவும் படுக்கைகளை சீரமைக்கவும் உதவியதாக மருத்துவர் எட்வின் குறிப்பிட்டார். அவர் ஒரு செவிலியரைப்போல மருத்துவனையில் செயல்பட்டதாகவும் நோயாளிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் ஒருவராகவும் இருந்ததாக நெகிழ்ந்து பேசினார்.

கொரோனா பராமரிப்பு நிலையங்களில் இதுபோன்ற நபர்களை அரசு பணியமர்த்தலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு மனதளவில் சோர்வாக இருக்கும் நபர்களுக்கு மருத்துவர் எட்வினின் `கட்டிப்பிடி வைத்தியம்’ ஆறுதல் தருகிறது எனலாம். தற்போது மருத்துவர் எட்வினின் முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

கொரோனா: தந்தை மரணம்; மருத்துவமனையில் மகன்! - நெகிழவைத்த தன்னார்வலர்கள் உதவி
அடுத்த கட்டுரைக்கு