Published:Updated:

`துரோகிகளை சுட்டுத் தள்ளுங்கள்!’ - டெல்லி மெட்ரோவில் எதிரொலித்த வன்முறை கோஷங்கள்

டெல்லி மெட்ரோ
டெல்லி மெட்ரோ ( Twitter )

டெல்லி ராஜீவ் சௌக் மெட்ரோ ரயில் நிலையத்தில் சிலர் வன்முறையைத் தூண்டும் வகையில் கோஷம் எழுப்பியுள்ளனர்.

இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவந்தபோது எதிர்ப்பும் ஆதரவும் சேர்ந்தே கிளம்பின. எதிர்ப்பவர்களும் ஆதரிப்பவர்களும் வீதிகளில் இறங்கினர். எதிர்ப்பவர்கள் போராட்டம் நடத்தினர். ஆதரித்தவர்கள் பிரசாரத்தின் மூலம் ஆதரவை வலுப்படுத்திக்கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் எதிர்ப்பவர்களின் போராட்டங்கள் தீவிரமடைந்தன, ஆதரவளிப்பவர்களுக்கும் எதிர்ப்பவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கற்கள் வீச்சு, வாகனங்கள் எரிப்பு, கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு, தாக்குதல், துப்பாக்கிச்சூடு என அனைத்து கோரச் சம்பவங்களும் நடந்தேறின.

டெல்லி மெட்ரோ
டெல்லி மெட்ரோ
Twitter

கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவின் ஏதாவது ஒரு மூலையில் குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பான போராட்டம் நடைபெறாமல் இருந்திருக்காது. அதிலும், குறிப்பாக டெல்லி ஷாகீன் பாக்கில் இரண்டு மாதங்களுக்கும் மேலாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், வன்முறைகள் எல்லாம் வெறும் வாகன எரிப்பு, கடைகள் நொறுக்கப்படுவதோடு நிற்காமல் மர்மநபர்களின் தோட்டாக்கள் பல அப்பாவி மக்களின் உயிர்களையும் பறித்திருக்கிறது.

`ஒரே இடத்தில் குவிந்த இரு தரப்பினர்; பாடல் மூலம் எதிர்ப்பு!’ - டெல்லியில் நடந்தது என்ன?

சமீபத்தில் வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரத்தில் மட்டும் 40-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் கலவரத்தில் உயிரிழந்தவர்களில் சிலரது உடலில் துப்பாக்கிக் குண்டுகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.

முகமது ஷாருக் என்ற இளைஞர் போலீஸாரையே துப்பாக்கியால் மிரட்டிய வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாகத் துப்பாக்கிக் கலாசாரம் தலைதூக்கத் தொடங்கியுள்ளதை இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டியது. இதே வேளையில் `கோலி மாரோ’ என்ற வாசகமும் அவ்வப்போது டெல்லி சாலைகளில் எதிரொலித்து வருகிறது.

`துரோகிகளைச் சுட்டுத்தள்ளுங்கள்’ என்ற அர்த்தம் கொண்ட வார்த்தையை டெல்லி கலவரத்தில் பலர் பயன்படுத்தியுள்ளனர். தற்போது அங்கு கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் மிகவும் பிஸியாக இயங்கிக்கொண்டிருக்கும் ராஜீவ் சௌக் மெட்ரோ ரயில் நிலையத்தின் உள்ளே சிலர் இந்த வார்த்தையைச் சொல்லி கோஷம் எழுப்பியுள்ளனர். தொடர்ந்து, அவர்கள் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாகவும் இளைஞர்கள் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.

இன்று காலை 11 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாக மெட்ரோ நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். `கோலி மாரோ’ கோஷம் எழுப்பியவர்களைப் பயணிகளின் உதவியுடன் மெட்ரோ பணியாளர்கள் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்துள்ளனர். இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சரியாக மெட்ரோ நிலையத்துக்குள் ரயில் வந்து நின்றதும் இந்தக் கோஷங்கள் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. வடகிழக்கு டெல்லி வன்முறையே இன்னும் முழுமையாக ஓயாத நிலையில் மெட்ரோ ரயில் நிலையத்தில் மீண்டும் வன்முறையைத் தூண்டும் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது டெல்லி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு