Published:Updated:

கொரோனா: `மருத்துவமனை அறையில் சிறை?!’ - தெலங்கானா மருத்துவருக்கு நேர்ந்த அவலம்

மருத்துவமனை
மருத்துவமனை

``மருத்துவமனையில் ஒருநாளைக்கு 1.15 லட்சம் சிகிச்சைக் கட்டணம் எனக் கூறுகின்றனர். என்னால் அவ்வளவு பணத்தைச் செலுத்த முடியவில்லை.”

கொரோனா வைரஸ் அதிகளவில் பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கிய நாள் முதல் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளின் மீது அதிக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பு சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாக வசூலிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சிகிச்சைக்கான முழு கட்டணத்தை செலுத்தாதவர்களை மருத்துவமனை நிர்வாகம் மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. இந்த நிலையில், தற்போது மருத்துவர் ஒருவரை சிகிச்சைக் கட்டணம் செலுத்தவில்லை என மருத்துவமனை நிர்வாகம் ஒன்று அறையில் வைத்து பூட்டியதாக வெளியான தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வருபவர், மருத்துவர் சுல்தானா. இவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தன்னுடைய வீட்டிலேயே அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதனிடையே, உடல்நிலை மிகவும் மோசமானதால் சந்தர்காட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஜூலை 1-ம் தேதி அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்ப செல்லும்போது முழுமையாகக் கட்டணம் செலுத்தாத காரணத்துக்காக அம்மருத்துவமனை தன்னை டிஸ்சார்ஜ் செய்ய மறுப்பதாகவும் தனக்கு நோய்த்தொற்று தொடர்பாக உரிய மருந்துகள் வழங்கவில்லை என்றும் கூறி வீடியோ ஒன்றை சுல்தானா வெளியிட்டுள்ளார்.

கொரோனா:`பயணிகள் நிழற்குடையில் 3 மணி நேரம் கிடந்த உடல்!’ - கர்நாடகா அவலம்

வீடியோவில் சுல்தானா பேசும்போது, ``நான் கொரோனாவுக்கு எதிராகப் பணியாற்றியுள்ளேன். மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் வந்து சேர்ந்தேன். மருத்துவமனையில் ஒருநாளைக்கு 1.15 லட்சம் சிகிச்சைக் கட்டணம் எனக் கூறுகின்றனர். என்னால் அவ்வளவு பணத்தைச் செலுத்த முடியவில்லை. மருத்துவமனையில் சேரும்போது நான் ரூபாய் 40,000 மற்றும் என்னுடைய சகோதரர் 1.15 லட்சம் என மொத்தமாக 1.19 லட்சம் செலுத்தியுள்ளேன். ஆனால், அவர்கள் என்னை டிஸ்சார்ஜ் செய்ய மறுக்கிறார்கள். எனக்கு இன்சுலின் அளித்தார்கள். ஆனால், சரியாக உணவு அளிக்கவில்லை. என்னுடைய மகள், சகோதரன் மற்றும் சகோதரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளது.

முறையாக மருந்துகளும் எனக்கு வழங்கப்படவில்லை. என்னால் ஒவ்வொரு நாளுக்கும் 1 லட்சம் எனக் கொடுக்க முடியாது. அவ்வளவு பணம் என்னிடம் இல்லை. நான் இங்கிருந்து வெளியே செல்ல வேண்டும். எனக்கு உதவி செய்யுங்கள்” என்று அழுதபடி கூறுகிறார்.


கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

சுல்தானா கண்ணீருடன் பேசும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து சந்தர்காட் பகுதியின் காவல்துறை அதிகாரிகள் அம்மருத்துவனைக்குச் சென்று அவரை மீட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, அம்மருத்துவமனை மருத்துவர்கள் வீடியோ வந்த பிறகே, இச்சம்பவம் குறித்து தெரிந்துகொண்டதாகவும் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைக்குரிய கட்டணம்தான் இது என்று நிர்வாகத்தினர் கூறியதாகவும் கூறப்படுகிறது. எனினும், இந்தச் சம்பவம் தொடர்பான பல்வேறு குழப்பங்களும் நிலவி வருகின்றன.

இதனிடையே, சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து தங்களது கருத்துகளைப் பதிவு செய்ய தொடங்கினர். `கொரோனாவுக்கு எதிராகப் போராடும் மருத்துவர் ஒருவருக்கே இந்த நிலைமையா?’ என்ற தொணியில் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் அம்மாநில அமைச்சரின் கவனத்துக்குச் சென்றதாகவும் அதனைத் தொடர்ந்து அவருக்கு இலவச சிகிச்சை வழங்க உத்தரவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா: `கூட்டமாகக் குளியல்; மீன்பிடி சண்டை!’ - தஞ்சை தென்பெரம்பூர் அணை சர்ச்சை
அடுத்த கட்டுரைக்கு