Published:Updated:

`டெல்லி வன்முறை வழக்கு!’ - கைதான கர்ப்பிணி மாணவி சஃபூராவுக்கு ஜாமீன்

மாணவி சஃபூரா
மாணவி சஃபூரா ( ட்விட்டர் )

``இந்த வழக்கில் மாணவிக்கு எதிராகவும் அரசாங்கத்துக்கு ஆதரவாகவும் வாதாடிய வழக்கறிஞர் துஷார் மேத்தா, மனிதாபிமானம் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்படலாம் என்று நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.”

இந்தியாவில், கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு வரை குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றன. அமைதியான முறையில் தொடங்கிய இந்தப் போராட்டத்தில்,சில வன்முறை சம்பவங்களும் நடந்தது. இந்த வன்முறைச் சம்பவங்களால் ஏழை மக்கள் பலரும் கடுமையாக பாதிப்படைந்தனர். உயிரிழப்புகளும் பொருள் சேதங்களும் அதிகளவில் ஏற்பட்டது.

ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களும் இந்தப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். அவர்கள் மீதும் தடியடிகள் நடத்தப்பட்டன. இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு நாடு முழுவதும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. தற்காலிகமாக போராட்டங்கள் கைவிடப்பட்டு ஊரடங்கு அமலில் இருந்து வந்த நிலையில், போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்களைக் குறிவைத்து காவலர்கள் கைது செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

டெல்லி வன்முறை
டெல்லி வன்முறை

அவ்வகையில், ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வு மாணவர்களில் ஒருவரான சஃபூரா ஜர்கரும் கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. எனினும், உடனடியாக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் அவர் கைது செய்யப்பட்டார். கலவரத்தை தூண்டிவிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளை போராட்டக்களத்துக்கு அழைத்து வந்ததாக அவர்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. கர்ப்பிணியாக இருந்த அவரை டெல்லி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது.

காவல்துறையினர் மாணவர்கள்மீது பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. சமூக ஊடகங்களில் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக குரல்கள் எழுப்பப்பட்டு வந்தன. இந்த நிலையில், தற்போது சஃபூரா ஜர்கருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

சஃபூரா ஜர்கர், குறைந்தது 15 நாள்களுக்கு ஒரு முறையாவது புலனாய்வுத்துறை அதிகாரியுடன் தொலைபேசி வழியாக தொடர்புகொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் டெல்லியை விட்டு வெளியேறக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

`உ.பா சட்டத்தில் கர்ப்பிணிப் பெண் கைது!’ -ஜாமியா, ஜே.என்.யூ மாணவர்களைக் குறிவைக்கிறதா டெல்லி போலீஸ்?

இந்த வழக்கில் மாணவிக்கு எதிராகவும் அரசாங்கத்துக்கு ஆதரவாகவும் வாதாடிய வழக்கறிஞர் துஷார் மேத்தா, மனிதாபிமானம் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்படலாம் என்று நீதிமன்றத்தில் கூறியுள்ளார். ஆனால், இதை முன்னுதாரணமாக கருதக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ``சஃபூராவை விடுவிப்பதில் மாநிலத்துக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. வெளியில் சென்று வேறு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது” என்றும் குறிப்பிட்டார். ஆனால், அவரது ஜாமீன் மனுவை டெல்லி காவல்துறையினர் கடுமையாக எதிர்த்துள்ளனர். ``கர்ப்பத்தின் காரணமாக குற்றத்தின் தீவிரத்தை அவர் எந்த வகையிலும் குறைக்கவில்லை. தெளிவான வகையில் அவர்மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடுமையான குற்றச்சாட்டுகள் அவர்மீது உள்ளன. அனைத்தையும் அவர் திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளார்” என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஜாமீனில் வெளிவந்த மாணவி சஃபூரா
ஜாமீனில் வெளிவந்த மாணவி சஃபூரா

தொடர்ந்து காவல்துறையினர், அவரை ஒரு தனி சிறையில் அடைப்பதாகவும் இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்று அவருக்கு ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், தங்களுடைய வாதத்தை வலிமையாக்க, கடந்த 10 ஆண்டுகளில் சிறைகளில் 39 பிரசவங்கள் நடைபெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மாணவியின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், அவர் உடல்நிலை மிகவும் சிக்கலாக இருப்பதாகவும் கர்ப்பகாலம் அதிகமாகி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். விசாரணை நீதிமன்றம் சஃபூராவுக்கு ஜாமீன் வழங்க மறுத்ததால், தனது ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றார். உயர்நீதிமன்றம் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் மாணவிக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

சபூராவின் கணவர் சபூர் சிர்வால், ``நீதிமன்றத்துக்கு எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுக்காக வாதாடிய வழக்கறிஞர்களின் முயற்சிக்கும் நன்றி கூறுகிறேன். எங்களுடைய குடும்பத்தினர் அவரைச் சந்திக்க ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

டெல்லி வன்முறை கோபம்... அமித் ஷாவைத் தாண்டி அஜித் தோவலிடம் பொறுப்பை ஒப்படைத்தது ஏன்?
அடுத்த கட்டுரைக்கு