Published:Updated:

`சிறுவனின் வாழ்க்கையை மாற்றிய முகநூல் பதிவு..!' - பிரபலங்களின் உதவியால் நெகிழும் போலீஸ் அதிகாரி

சிறுவன் வினய்
சிறுவன் வினய்

தாய், தந்தையை இழந்ததால் தனிமையில் வாடிய சிறுவன் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துகொண்டே படித்துக்கொண்டிருந்தான். கொரோனா ஊரடங்கு காரணமாக அந்தச் சிறுவனின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கு என்பது பலரது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டிருக்கிறது. தொழிலாளர்கள் பலர் வேலை இழந்ததுடன் அன்றாடத் தேவைகளைக்கூடப் பூர்த்தி செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஆனாலும், ஒரு சிலரின் வாழ்க்கையில் திடீர் திருப்பத்தை கொரோனா ஊரடங்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கொச்சியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வரும் பணத்தில் பள்ளிக் கட்டணத்தைச் செலுத்திப் படித்துவந்த சிறுவன் ஒருவனின் வாழ்க்கை ஊரடங்கு காரணமாக திசையற்ற நிலைக்குப் போயிருந்தது. ஆனால், ஊன்றுகோலாய் உதவிக்கு வந்த காவல்துறை அதிகாரியால் அந்தச் சிறுவனின் வாழ்வில் பிரகாசம் வீசத் தொடங்கியிருக்கிறது.

சோர்வடைவதில் இருந்து தப்பிக்க வழி! - க்வாரன்டீனில் இருப்பவர்களுக்கு புத்தகம் வழங்கும் காவல்துறை

கொச்சி மாவட்டம் நெடும்பசேரி காவல்நிலையத்தில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர், பினு பழயிதாத். கடந்த மே 3-ம் தேதி அவர், முகநூலில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில், `நெடும்பசேரியில் ஒரு சிறுவனை அடிக்கடி பார்த்திருக்கிறேன். ஆனால், அவன் யார் என்று தெரியாது. ஊரடங்கு காலத்தில் சைக்கிளில் வந்த அந்தச் சிறுவனை நிறுத்தி `எங்கே போகிறாய்?’ என்று கேட்டேன்.

காவல்துறை அதிகாரி பினுவுடன் சிறுவன் வினய்
காவல்துறை அதிகாரி பினுவுடன் சிறுவன் வினய்

அவன், `அரசின் சார்பாக கம்யூனிட்டி கிச்சனில் விநியோகிக்கப்படும் உணவு வாங்கச் செல்கிறேன்’ என்றதும் அவனைக் குறித்து விசாரித்தேன். அப்போது அவன் ப்ளஸ் டூ படிப்பதாகவும் தாய், தந்தையற்ற நிலையில் தனியாக வசிப்பதாகவும் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியாக இருந்தது.

தொடர்ந்து அந்தச் சிறுவனிடம் விசாரித்தபோது, `காதலித்துத் திருமணம் செய்ததால் உறவினர்களின் எதிர்ப்புக்கு ஆளான பெற்றோர் சிறுவயதிலேயே இறந்துவிட்டார்கள். அதனால் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்து 8-ம் வகுப்பு வரை படித்தேன். அங்கேயே தொடர்ந்து தங்க முடியாததால் மும்பைக்குச் சென்றேன். ஆனால், படிக்க வேண்டும் என்ற ஆசை காரணமாக மீண்டும் கொச்சி வந்துவிட்டேன். 

லாட்டரி விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தில் ஒரு ரொட்டி வாங்கினால் மூன்று நாள்கள் அதை சாப்பிடுவேன்
சிறுவன் வினய்

தினமும் காலையில் 3 மணிக்கு எழுந்து கொச்சி ஏர்போர்ட் சென்று லாட்டரி விற்பேன். அதில் கிடைக்கும் பணத்தில் வீட்டு வாடகை, படிப்புச் செலவு, சாப்பாடு என அனைத்தையும் பார்த்துக்கொள்வேன். ஒரு ரொட்டியை மூன்று நாள்கள் தண்ணீரில் நனைத்துச் சாப்பிட்டுக் கொள்வேன். ஊரடங்கு காரணமாக லாட்டரி விற்க முடியாததால் கம்யூனிட்டி கிச்சனில் உணவு வாங்கிச் சாப்பிடுகிறேன்’ என்று தெரிவித்தான்.

வாழ்க்கை குறித்து எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் இந்தச் சிறுவனின் நம்பிக்கையை தங்களுக்கான உத்வேகமாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். சிறுவன் வினய், எதிர்காலத்தில் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்றும் தன் உறவினர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் தெரிவித்தபோது அவனது நம்பிக்கை என்னைப் பிரமிக்க வைத்தது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

காவல்துறை அதிகாரி பினு
காவல்துறை அதிகாரி பினு

காவல்துறை அதிகாரியான பினுவின் இந்தப் பதிவு வைரலானது. இதன் தொடர்ச்சியாக, கேரள முதல்வர் பினராய் விஜயனும், இதுபற்றி செய்தியாளர் சந்திப்பின்போது குறிப்பிட்டார். அத்துடன், மலையாள எழுத்தாளர் லீலாவதி, இயக்குநர் பா.ரஞ்சித், பிரபல மேஜிக் நிபுணரான கோபிநாத் முத்துகாட் ஆகியோரும் சிறுவன் வினய்க்கு உதவ முன்வந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் பென்னி பெகனன், சட்டமன்ற உறுப்பினர்கள் அன்வர் சதாத், கே.குன்கிராமன், எர்ணாகுளம் கலெக்டர் எஸ்.சுஹாஸ், தொழிலதிபர்களான அனீஸ் ஆதம், அனில்குமார் உள்ளிட்ட பலரும் வினயின் கல்விக்கும் வாழ்க்கைக்கும் உதவ முன்வந்துள்ளனர்.

நடிகர் மோகன்லால்
நடிகர் மோகன்லால்

இவ்வளவு ஆதரவுக் கரங்களுக்கு மத்தியிலும், தன்னிடம் நடிகர் மோகன்லால் தொலைபேசியில் பேசி உதவியதைப் பெருமையாகக் கருதுகிறார், சிறுவன் வினய்.

``எத்தனையோ பேர் எனக்கு உதவ முன்வந்த போதிலும் மோகன்லால் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது. தற்போது சென்னையில் இருக்கும் அவர் கொச்சி வந்ததும் என்னைச் சந்திப்பதாகச் சொல்லியுள்ளார்” என்று உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு