Published:Updated:

`இளம்பெண்ணின் போன் நம்பரை கேட்ட நபர்!’- ட்விட்டரில் புனே போலீஸ் கொடுத்த வைரல் ரிப்ளை

தொடர்ந்து சில கமெண்டுகளுக்கும் காவல்துறையினர் ஜாலியாக ரிப்ளை செய்து நெட்டிசன்களிடம் புனே காவல்துறையினர் உரையாடி வருகின்றனர்.

புனே
புனே

மகாராஷ்டிரா மாநிலம், புனே பகுதியில் தனோரி எனும் இடத்திலுள்ள காவல் நிலையத்தின் தொலைபேசி எண்ணை ஒரு இளம்பெண் ட்விட்டரில் புனே சிட்டி போலீஸ் பக்கத்தில் டேக் செய்து கேட்டுள்ளார். அதற்கு இளைஞர் ஒருவர் கமெண்ட் செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ட்விட்டரில் அந்த இளம்பெண், ``புனே சிட்டி போலீஸ், தனோரி காவல் நிலையத்தின் தொலைபேசி எண் எனக்கு கிடைக்குமா. அவசரமாகத் தேவைப்படுகிறது” என்று பதிவிட்டிருந்தார். அதற்கு புனே காவல்துறையும், தனோரி காவல்நிலையத்தின் தொலைபேசி எண்ணை பதிவிட்டுருந்தது.

இந்த ட்வீட் செய்த பெண்ணுக்கு பலரும் தங்களுக்கு தெரிந்த தொடர்பு எண்களையும் ஆறுதல்களையும் கமெண்டாக பதிவு செய்திருந்தனர். அந்த கமெண்டுகளில் ஒருவர் புனே சிட்டி போலீஸை டேக் செய்து, ``எனக்கு அந்தப் பெண்ணினுடைய தொடர்பு எண் கிடைக்குமா?” என கேட்டிருந்தார்.

இந்த கமெண்டை பகிர்ந்த புனே போலீஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``சார், அந்தப் பெண்ணினுடைய தொடர்பு எண்ணைப் பெறுவதல் உங்களுக்கு ஏன் இவ்வளவு ஆர்வம் என்பதை தெரிந்துகொள்ள, உங்களுடைய தொடர்பு எண்ணைப் பெறுவதில் தற்போது ஆர்வமாக இருக்கிறோம். நீங்கள் எங்களுக்கு குறுஞ்செய்தியை அனுப்பலாம். நாங்கள் ஒருவரின் ரகசியங்களை மதிக்கிறோம்” என்று பதிவு செய்திருந்தனர்.

புனே காவல்துறையினரின் இந்தப் பதிவு ட்விட்டரில் வைரலானது. இந்தப் பதிவுக்கு பிறகு, புனே காவல் துறையினருக்கு அதிக பாராட்டுகள் கிடைத்த வண்ணம் உள்ளன. தொடர்ந்து சில கமெண்டுகளுக்கும் காவல்துறையினர் ஜாலியாக ரிப்ளை செய்து நெட்டிசன்களிடம் உரையாடி வருகின்றனர்.

`காவல் நிலையத்தில் நடந்த வளைகாப்பு!’ - சேலம் பெண் காவலரை நெகிழ வைத்த சென்னை காவலர்கள்