Published:Updated:

`கொரோனா அச்சம்; தும்மியதால் தாக்கப்பட்ட நபர்!' - வைரலான வீடியோவால் நெட்டிசன்கள் அதிர்ச்சி

தும்மல்
தும்மல் ( Representational image )

மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று பிரதமர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உட்பட பலரும் தெரிவித்து வந்தாலும் அச்சம் அதிகரித்துக்கொண்டுதான் செல்கிறது.

உலகத்தின் பல நாடுகளிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. தும்மல், இருமல் மற்றும் தொடுதல் மூலம் எளிமையாக இந்த வைரஸ் பரவுவதால் இதைக் கட்டுப்படுத்த முடியாமல் உலகமே திணறி வருகிறது. சீனாவைத் தவிர்த்து மற்ற நாடுகளில் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், வைரஸ் தொடர்பான அச்சம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் மீதான இந்த அச்சம் சாலையில் தும்மிய ஒருவரைத் தாக்கும் அளவுக்குக் கொண்டு சென்றுள்ளது என்பது அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா
கொரோனா
pixabay

மகாராஷ்டிராவில் உள்ள கோலக்பூர் எனும் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அப்பகுதியில், சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் தன்னுடைய முகத்தை சரியாக மறைக்காமல் தும்மியுள்ளார். மறுபக்கம், சாலையில் தனது குடும்பத்துடன் பைக்கில் சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் `கொரோனா வைரஸ் பரவும் நேரத்தில் ஏன் கைக்குட்டைகூட இல்லாமல் தும்முகிறீர்கள்?' என்று கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், கோபமடைந்த கேள்வி எழுப்பிய நபர் தும்மிய நபரை தாக்கியுள்ளார். அருகிலிருந்த நபர்கள் சென்று அவர்களைத் தடுத்துள்ளனர்.

கொரோனா... கொஞ்சம் கூலா ஹேண்டில் பண்ணலாமா? - யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு? #MyVikatan

தும்மல் தொடர்பான வாக்குவாதத்தால் ஏற்பட்ட இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல் நிலையத்தில் வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை. ஆனால், சாலையில் இருந்த சிசிடிவில் பதிவான இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சாலையில் இந்தச் சம்பவம் நடந்ததால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. மகாராஷ்டிராவில் இதுவரை 45-க்கும் அதிகமான நபர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா
கொரோனா

கொரோனா வைரஸ் பரவுவதால் தேவைக்கு அதிகமான பொருள்களை வாங்குவது உட்பட பல விஷயங்களிலும் மக்கள் அச்சத்துடன் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று பிரதமர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உட்பட பலரும் தெரிவித்து வந்தாலும், அச்சம் அதிகரித்துக்கொண்டுதான் செல்கிறது. ``மக்களிடையே நிலவுகின்ற அச்சம் மனிதத் தன்மையை இழக்கச் செய்கிறது. பொது இடங்களுக்குச் செல்லும்போது பாதுகாப்பாக இருப்பதுதான் நல்லது. தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். தொடக்கூடாது போன்ற அறிவிப்புகளுக்கிடையே இப்படி அடிக்கலாமா?" போன்ற கமெண்டுகளையும் நெட்டிசன்கள் அந்த வீடியோவுக்கு கீழே பதிவு செய்து வருகின்றனர்.

`கொரோனா கட்டுக்குள் வரும் வரை சத்தான காய்கறி சூப் ஃப்ரீ..!’ -ஜூஸ் கடை இளைஞரின் வாவ் முயற்சி
அடுத்த கட்டுரைக்கு