Published:Updated:

துபாயிலிருந்து திரும்பிய 29வது நாளில் இளைஞருக்குக் கொரோனா பாசிட்டிவ்! - அதிர்ச்சியில் கேரளா

கொரோனா
கொரோனா

``எதிர்ப்பு சக்தியின் தன்மையால் நோய்த்தொற்று தாமதமாக வெளியில் தெரிந்து இருக்கக்கூடும். வைரஸ் அனைவரின் உடலிலும் ஒரே மாதிரியாகச் செயல்படும் என்று கூற இயலாது. கேரளாவில் மற்ற சில மாவட்டங்களிலும் இவ்வாறு நடந்துள்ளது”

உலகளவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் ஒரு புது வைரஸ் என்பதால் அதைப் பற்றிய ஆராய்ச்சிகள் அதிகளவில் நடந்த வண்ணம் உள்ளன. வைரஸ் நோய் அரும்பு காலமாக (Incubation period) எடுத்துக்கொள்ளும் நாள்கள் 5 முதல் 14 நாள்கள் என்று கணக்கிடப்பட்டன. அதனால் நோய்த்தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் வெளிநாட்டிற்குப் பயணம் மேற்கொண்டவர்களை 14 நாள்கள் தனிமைப்படுத்தும் நடவடிக்கை நாடு முழுவதும் பின்பற்றப்படுகிறது. ஆனால், கேரள மாநிலம் 28 நாள்கள் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. 28 நாள்கள் அதிகம் என்று தோன்றினாலும், தற்போது 29 ஆவது நாளில் ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், வைரஸின் நோய் அரும்பு காலத்தைக் கணிப்பதும் கேள்விக்குறியாகியுள்ளது .

கொரோனா
கொரோனா

துபாயிலிருந்து கடந்த மார்ச் 19-ம் தேதி வந்த ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருந்து வந்துள்ளார். பயணம் மேற்கொண்டு 28 நாள்கள் தொற்று இல்லாமல் இருந்த அவருக்கு 29 ஆவது நாளில் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரின் சகோதரருக்கு மார்ச் 28-ம் தேதி அன்று தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் இவர் கூடுதல் கண்காணிப்பில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கோழிக்கோடு மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் வி.ஜெயஸ்ரீ பேசுகையில், ``தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்ட நாள்களில் அவருக்குத் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. அவரின் சகோதரரும் பாதிக்கப்பட்டதால் நாங்கள் இவரை கூடுதல் கவனத்தோடு கண்காணித்து வந்தோம். அவரின் எதிர்ப்பு சக்தியின் தன்மையால் நோய்த்தொற்று தாமதமாக வெளியில் தெரிந்து இருக்கக்கூடும். வைரஸ் அனைவரின் உடலிலும் ஒரே மாதிரியாகச் செயல்படும் என்று கூற இயலாது. கேரளாவில் மற்ற சில மாவட்டங்களிலும் இவ்வாறு நடந்துள்ளது. இவர்களுக்குத் தாமதமாக நோய்த்தொற்று வெளியில் தெரிந்ததற்கு அவர்களின் எதிர்ப்பு சக்தியின் தன்மையே காரணமாக இருக்கலாம்" என்றார்.

`அடுத்த மையப்புள்ளி; 3,00,000 பேர் உயிரிழப்பு?’ - ஆப்பிரிக்காவின் கொரோனா நிலையைக் கணித்த ஐ.நா

இந்தச் சம்பவத்தின் மூலம் நோய் அரும்ப 29 நாள்கள் கூட ஆகுமா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் 28 நாள்கள் தனிமைப்படுத்தும் நடவடிக்கை இருந்தாலும், மற்ற மாநிலங்களில் 14 நாள்கள்தான் என்பதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஒருவருக்கு அறிகுறி இல்லாத பொழுதும் அவரால் நோயைப் பரப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா,``கோழிக்கோடில் இந்த மனிதருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு வித்தியாசமானது. மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடம் இதைத் தனி கவனம் செலுத்தி ஆராயக் கூறியுள்ளோம். இது ஒரு புது வைரஸ் என்பதால் இதன் தன்மையைக் கணிப்பது கடினம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்" என்றார். மேலும், இதுகுறித்து யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா

``பத்தனம்திட்டாவைச் சேர்ந்த ஒரு மாணவி டி நிஜாமுதீன் மாநாட்டுக்குச் சென்றவர்களுடன் ரயிலில் பயணிக்க நேர்ந்ததில், அவர் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் பயணம் மேற்கொண்டு 22 நாள்கள் கழித்து அவருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனாலும் அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை" என்று மாவட்ட மருத்துவ அதிகாரி மருத்துவர் என்.ஷீஜா கூறியுள்ளார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தைச் சேர்ந்த நுண்ணுயிரியல் நிபுணர்கள், கொரோனா வைரஸ் நோய் அரும்பு காலம் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா மட்டும் வராமல் இருந்திருந்தால்..! - ஜாலியான ஒரு புத்தாண்டு ராசி பலன்! #MyVikatan
அடுத்த கட்டுரைக்கு