Published:Updated:

கொரோனா: ஆம்புலன்ஸில் இறந்த நபர்; வீதியில் இறக்கி வைக்கப்பட்ட உடல்!’ - போபால் அவலம்

கொரோனா சிகிச்சை
கொரோனா சிகிச்சை

``திங்கள்கிழமை காலை அவர் உயிருடன்தான் இருந்தார். ஆம்புலன்ஸில் என்ன நடந்தது என எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவரது உடலை சாலையில் போட்டுவிட்டுத் திரும்பலாமா?”

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களைச் சுகாதாரத்துறை ஊழியர்கள் அலட்சியமாகக் கையாள்வது தொடர்பாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

இந்தநிலையில் தற்போது போபால் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரின் உடலை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மருத்துவமனைக்கு வெளியே உள்ள சாலையிலேயே விட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா
கொரோனா
மாதிரிப் படம்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் பகுதியைச் சேர்ந்த மின்விநியோகத்துறை ஊழியர் ஒருவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜனவரி மாதம் முதல் உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர் கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால், அவர் கொரோனா வைரஸால் பாதிப்படைந்திருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. போபாலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கொரோனா பாதிப்பு காரணமாக சிராயு மருத்துவமனைக்கு மாற்றப்பட இருந்தார்.

கொரோனா:`மகாபாரதப் போரைவிட கடினமாக உள்ளது!’ - மோடியை சீண்டும் சிவசேனா

ஆம்புலன்ஸில் அவரை சிராயு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் இறந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்பின்னர், அவரது உடலை சாலையிலேயே ஊழியர்கள் இறக்கி வைத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக இறந்த நோயாளியின் மகன் பேசுகையில், ``திங்கள்கிழமை காலை அவர் உயிருடன்தான் இருந்தார். ஆம்புலன்ஸில் என்ன நடந்தது என எனக்குத் தெரியவில்லை. ஆனால், மாவட்ட நிர்வாகம் அவரை சிராயுவுக்கு மாற்ற ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்து, பின்னர் அவரது உடலை சாலையில் போட்டுவிட்டு திரும்பலாமா? இந்தச் சம்பவத்தில் இரண்டு மருத்துவமனைகள் மீதும் தவறு உள்ளது. எங்களிடம் எந்தவித தகவலையும் தெரிவிக்கவில்லை” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.


கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

சாலையில் உடலை இறக்கி வைத்தது தொடர்பாக மருத்துவர் உதய் சங்கர் தீட்சித் பேசும்போது, ``சிராயு மருத்துவக் கல்லூரிக்கு இங்கிருந்து ஆம்புலன்ஸ் ஒன்று சென்றது. 40 நிமிடங்களுக்குப் பிறகு, அவர்கள் திரும்பி வருவதாக எங்களிடம் கூறினர். ஆனால், அதற்குள் நாங்கள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு சீல் வைத்து தூய்மைப்படுத்தும் பணியைத் தொடங்கினோம். உடலுடன் காத்திருந்த ஊழியர்கள் ஸ்ட்ரெச்சர் ஒன்றைக் கேட்டனர். ஆனால், ஸ்ட்ரெச்சர் கிடைக்கவில்லை. இதனிடையே, அவர்கள் மருத்துவமனைக்கு வெளியே சாலையில் உடலை வைத்துவிட்டுச் சென்றனர். பின்னர், நாங்கள் அவரது உடலை சோதனை செய்து பார்த்தபோது அவர் மூச்சு நின்றிருந்தது” என்று விளக்கமளித்துள்ளார்.

சிராயு மருத்துவமனையின் இயக்குநர் அஜய் கோயங்கா பேசும்போது, ``மருத்துவர்கள் எங்களை அழைத்து சிறுநீரகம் செயலிழந்த நோயாளி ஒருவர் இருப்பதாகவும் இதயம் தொடர்பான பிரச்னைகளும் அவருக்கு இருப்பதாகவும் கூறினர். எனவே, ஆக்ஸிஜன் உதவியுடன் ஆம்புலன்ஸில் அவரை அனுப்பியுள்ளனர். மருத்துவமனைக்கு வரும் வழியில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாகவும் போக்குவரத்தால் சிராயு மருத்துவமனைக்கு வர தாமதமாகும் என்றும் தெரிவித்தனர். எனவே, பாதி வழியில் திரும்பினர். 20 முதல் 25 நிமிடத்தில் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் சென்றது. ஆனால், அதற்கு முன்பு அவர் உயிரிழந்தார். அவரது உடலை சவக்கிடங்குக்கு எடுத்துச் சென்றோம். இந்தச் சம்பவத்தை ஏன் பிரச்னைக்குரியதாக உருவாக்குகிறார்கள்?” என்று கூறியுள்ளார்.

கொரோனா
கொரோனா

நோயாளியின் உடலை ஆம்புலன்ஸில் இருந்து ஊழியர்கள் இறக்கி வைத்துவிட்டு செல்லும் சிசிடிவி வீடியோ வெளியாகி அதிக சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக போபால் பகுதியின் ஆட்சியர் அவினாஷ் லாவனியா, ``ஒரு நோயாளியின் உடல்நிலை தொடர்பான பிரச்னைகளை உறுதிப்படுத்தாமல் மற்றொரு மருத்துவமனைக்கு ஏன் அழைத்துச் செல்ல வேண்டும்? அந்த நோயாளி கடந்த மாதம் 23-ம் தேதி முதல் அம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே, அவர் கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருக்க என்னென்ன நெறிமுறைகளைப் பின்பற்றினர்? ஒருவாரத்துக்கும் மேலாக மருத்துவமனையில் இருந்த நிலையில் திடீரென எப்படி கொரோனா பாதிப்பு ஏற்படும்?” போன்ற பல கேள்விகளை எழுப்பி மருத்துவமனை நிர்வாகத்திடம் விளக்கம் கோரியுள்ளார்.

Credits : NDTV

கொரோனா தொற்று... வேலைக்குச் செல்வோர் கவனத்துக்கு
அடுத்த கட்டுரைக்கு