Published:Updated:

ஆந்திரா அதிர்ச்சி: மருத்துவமனைக்குள்ளேயே இறந்துகிடந்த நபர்! -தேடி அலைந்த மனைவி

மருத்துவமனை இறப்பு
மருத்துவமனை இறப்பு

``மருத்துவமனைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் பார்த்தோம். அதில், அவர் மருத்துவமனையை விட்டு வெளியேறவில்லை எனத் தெரிகிறது. மருத்துவமனையிலும் காணவில்லை” - காவல்துறை அதிகாரிகள்.

இந்தியா, கொரோனா வைரஸால் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. அதிக அளவில் வைரஸ் பரவத் தொடங்கி, மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்ப ஆரம்பித்த நாள் முதல் நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளிலும் குழப்பங்கள் நிலவி வருகின்றன. நோயாளிகளின் உடல்களை மாற்றிக்கொடுப்பது, சிகிச்சைக்கு வருபவர்களிடம் அலட்சியமாக நடந்துகொள்வது எனப் பல குற்றச்சாட்டுகள் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் மீது தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஆந்திராவில் உள்ள அரசு மருத்துவமனையிலி ருந்து காணாமல்போன, கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நபர், அந்த மருத்துவமனையிலேயே உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று
கொரோனா தொற்று
மாதிரிப் படம்

ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடா பகுதியில், 63 வயதான நபர் ஒருவர் கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென காணாமல் போயுள்ளார். இதுதொடர்பாக அவரது மனைவி தனலட்சுமி சில நாள்களுக்கு முன்பு பேசும்போது, ``மூச்சுத்திணறல், உடல் பலமின்மை மற்றும் விக்கல் போன்ற காரணங்களால், கடந்த ஜூன் 24-ம் தேதி அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றேன். எனது கணவர் பற்றிய விவரங்களைப் பதிவுசெய்வதற்காகக் கொடுத்தேன். எங்களிடம் அப்போது ஆதார் கார்டு இல்லை. எனவே, அடுத்த நாள் கொடுப்பதாகக் கூறினேன். இதனிடையே, இரண்டு பெண்கள் திடீரென வந்து அவரை சக்கர நாற்காலியில் உட்காரவைத்து அழைத்துச்சென்றார்கள். உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், உடனடியாக ஆக்ஸிஜன் கொடுக்க வேண்டும் என்றும் கூறினர்” என்றார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, ``நான் அவர்களுடன் வருவதாகக் கூறினேன். ஆனால், அவர்கள் என்னை அனுமதிக்கவில்லை. வெளியே சில மணிநேரம் காத்திருந்தேன். ஆனால், அவர்கள் எந்தத் தகவலும் என்னிடம் சொல்லவில்லை. மாலை 5 மணியளவில் வந்து, ஆதார் அட்டை எடுத்துவர கூறினார்கள். ஆதார் அட்டை எடுத்துச்செல்லும்போது அவர் அங்கு இல்லை. ஜூன் 25-ம் தேதி இரவு எட்டு மணி வரை மருத்துவமனை முழுவதும் அவரைத் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை” என்றார். அடுத்த நாள் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஷோபாவிடம் தனலட்சுமி இதுதொடர்பாக விசாரித்துள்ளார். அப்போது அவர், `நாங்களும் அவரைத் தேடி வருகிறோம்’ என்று கூறியுள்ளார்.

`5 மருத்துவமனைகள்... உயிருக்குப் போராட்டம்; அனுமதி மறுப்பு’  -அலட்சியத்தால் இறந்த பெண்

காவல்துறைக்கு இந்த விஷயம் சென்றுள்ளது. விஜயவாடா நகர காவல்நிலைய ஆய்வாளர் வெங்கடேஷ்வரலு இதுதொடர்பாகப் பேசும்போது, ``காணாமல் போய்விட்டார் என்ற அடிப்படையில் இந்த வழக்கை நாங்கள் ஜூன் 29-ம் தேதி பதிவுசெய்துள்ளோம். மருத்துவமனைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் பார்த்தோம். அதில், அவர் மருத்துவமனையை விட்டு வெளியேறவில்லை எனத் தெரிகிறது. மருத்துவமனையிலும் எங்கும் காணவில்லை. எனவே, ஊழியர்களிடம் இதுதொடர்பாக விசாரணைகளை நடத்தி வருகிறோம்” என்றார். இந்த நிலையில், வழக்கை விசாரித்துவந்த காவல்துறை அதிகாரிகள், தற்போது காணாமல் போனதாகக் கருதப்பட்ட நபர் அதே மருத்துவமனையில் இறந்துகிடந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை
காவல்துறை

காவல்துறை ஆய்வாளர் வெங்கடேஷ்வரலு இதுதொடர்பாக பேசுகையில், ``வசந்த் ராவ் என்ற நபர், கடந்த ஜூன் 24-ம் தேதி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் மருத்துவர்கள் அவர் பற்றிய விவரங்களை சரியாகப் பதிவுசெய்யாமல் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு அவர் உயிரிழந்துள்ளார். மருத்துவமனை ஊழியர்கள், அவரது உடலை அடையாளம் காணாமல் சவக்கிடங்கிற்கு அனுப்பியுள்ளனர். விவரங்கள் முறையாகப் பதிவு செய்யப்படாததால், அடையாளம் கண்டுபிடிப்பது கடினமாக இருந்துள்ளது. மருத்துவமனை முழுவதும் தேடிய பிறகு, சவக்கிடங்குக்கு சென்று பார்த்ததில் அவர் அடையாளம் காணப்பட்டார்” என்று கூறியுள்ளார்.

மேலும், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என்றும் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டனர்.

`15 அரசு மருத்துவமனைகள்; ரூ.1 கோடி நிதி!' - கொரோனா தடுப்புக்காக உதவிய செந்தில் பாலாஜி
அடுத்த கட்டுரைக்கு