Published:Updated:

`நான் வருகிறேன் என அம்மாவிடம் சொல்லுங்கள்!’ -480 கி.மீ சைக்கிளில் வந்த மகனை வாழ்த்தி, கண்மூடிய தாய்

ஹைதராபாத்
ஹைதராபாத்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த தாயைப் பார்க்க 480 கிலோமீட்டர் சைக்கிளில் சென்றிருக்கிறார் மகன். மகனைப் பார்த்துவிட்ட சந்தோஷத்தில்.. அடுத்த சில நிமிடங்களில் அந்தத் தாயின் உயிர் பிரிந்தது.

யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் நான்கு பிராந்தியங்களில் ஒன்று ஏனாம். ஆந்திர மாநிலத்தின் கிழக்கு கோதாவரி பகுதியையொட்டி இருக்கிறது இந்த பிராந்தியம். இங்கிருக்கும் அய்யனார் நகரைச் சேர்ந்தவர் ரேவு ஸ்ரீனு. 27 வயதான இவர் தனது மனைவி லட்சுமியுடன் தெலங்கானாவின் தலைநகரான ஹைதராபாத்தில் தங்கி பெயின்ட் அடிக்கும் பணியைச் செய்துவந்தார்.

ரேவு ஸ்ரீனு தனது மனைவி லட்சுமியுடன்
ரேவு ஸ்ரீனு தனது மனைவி லட்சுமியுடன்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ரேவு ஸ்ரீனுவின் அம்மா மகாலட்சுமி ஏனாமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஹைதராபாத்தில் இருந்த ரேவு ஸ்ரீனு தாயின் சிகிச்சைக்காக அவ்வப்போது தன்னால் முடிந்த பணத்தை அனுப்பி வந்திருக்கிறார்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில நாள்களில் மகாலட்சுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அந்தத் தகவல் ரேவு ஸ்ரீனுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு, ஊரடங்கு முடிந்தவுடன் ஊருக்கு வந்து அம்மாவைப் பார்ப்பதாக உறவினர்களிடம் தெரிவித்திருக்கிறார் ரேவு ஸ்ரீனு.

புதுச்சேரி பிராந்தியம் ஏனாம்
புதுச்சேரி பிராந்தியம் ஏனாம்

ஆனால் அதையடுத்து சில தினங்களில் மகாலட்சுமியின் உடல் மிகவும் மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பேருந்து போக்குவரத்து இல்லாத நிலையில், அம்மாவை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று தவித்த ரேவு ஸ்ரீனு, 480 கிலோமீட்டர் தூரமுள்ள ஏனாமுக்கு சைக்கிளில் செல்வது என்று முடிவெடுத்தார்.

உறவினர்களிடம் தான் வரும் தகவலை அம்மாவிடம் தெரிவித்துவிடும்படி கூறிவிட்டு, பின் இருக்கையில் மனைவியை அமர வைத்து சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தார். மகன் பார்க்க வருவது குறித்து உறவினர்கள் மகாலட்சுமியிடம் தெரிவித்திருக்கிறார்கள். ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இடத்தில் போலீஸார் அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். அவர்கள் அனைவரிடமும் ரேவு ஸ்ரீனு விவரத்தைக் கூறியதால், உணவு, தண்ணீர் பாட்டில்களை வாங்கிக் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள்.

‘தாயை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்த மகன்!’ - ஒரு ட்வீட் மூலம் லைக்ஸ்களை அள்ளும் ரயில்வே

நல்கோண்டா, மிர்யலாகுடா, விஜயவாடா, எல்லூரு, பீமாவரம் வழியாக ஏனாம் சென்றடைந்தனர். வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் என்பதால் ரேவு ஸ்ரீனுவையும், அவரது மனைவியையும் தனிமைப்படுத்தியது காவல்துறை.

அதையடுத்து அங்கிருந்த காவலர்களிடமும், சுகாதாரத்துறை ஊழியர்களிடமும் தனது தாயின் உடல்நிலை குறித்து கண்ணீருடன் கூறியதுடன், அவரைப் பார்க்க அனுமதி கேட்டிருக்கிறார். அதில் மனமிரங்கிய அதிகாரிகள் உரிய பாதுகாப்புடன் அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தனர். வீட்டுக்குச் சென்று அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார் ரேவு ஸ்ரீனு.

`நான் வருகிறேன் என அம்மாவிடம் சொல்லுங்கள்!’ -480 கி.மீ சைக்கிளில் வந்த மகனை வாழ்த்தி, கண்மூடிய தாய்

சுமார் 1 மணி நேரம் தனது மகனையே பார்த்துக்கொண்டிருந்த மகாலட்சுமி, கண்களில் நீர் வழிய ”நு பாக உண்டுவு” (நல்லாருப்பா) என்று மெல்லிய குரலில் கூறிதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அதையடுத்த சில நிமிடங்களில் உயிரிழந்திருக்கிறார். உடைந்துபோய் கதறி அழுத ரேவு ஸ்ரீனுவை உறவினர்கள் தேற்றியிருக்கிறார்கள். அதையடுத்து தாயின் இறுதிச்சடங்கை முடித்துவிட்டு, அரசின் கொரோனா முகாமுக்குச் சென்று தனது மனைவியுடன் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு