Published:Updated:

`எங்களால் கற்களை சாப்பிட முடியாது!’ - குழந்தையுடன் 150 கி.மீ நடந்தே சென்ற தொழிலாளி #lockdown

``நாங்கள், கிராமத்தில் ரொட்டி இருந்தாலும் அதனுடன் உப்போ, சட்னியோ வைத்து சாப்பிடுவோம். அமைதியான வாழ்க்கையாக இருக்கும். ஆனால், டெல்லியில் எங்களுக்கு எதுவும் இல்லை."

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகள் பலவற்றிலும் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் 22,000-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலும் கொரோனா தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து கண்காணிப்பிலும் இருந்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

பிரதமர் மோடி அறிவித்த 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவால் மக்களின் அன்றாட வாழ்க்கை சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது. நாடு முழுவதும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் இடையிலான பிற போக்குவரத்து வசதிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், வெளியூர்களில் இருக்கும் பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலைகளும் நிறுத்தப்பட்டு உணவு தேவைகளும் பாதிக்கப்பட்ட நிலையில், தினசரி தொழிலாளிகள் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பண்டி என்பவர் தன் மனைவியுடன் 10 மாதக் குழந்தையை தோளில் சுமந்தபடி டெல்லியிலிருந்து தங்களது கிராமத்திற்கு நடந்தே செல்லத் தொடங்கியுள்ளார். ``நாங்கள் என்ன சாப்பிடுவோம்? கற்களை எங்களால் சாப்பிட முடியாது” என்று அவருடைய மனைவி வேதனையுடன் கூறுகிறார். அவரது தலையில் இருந்த நீலநிறப்பையில் அவர்களுடைய உடைமைகள் அனைத்தையும் வைத்து சுமந்தபடி வெயிலில் நடந்து செல்கின்றனர். அவர்களுக்கு பின்னால் வந்த நபர் ஒருவர் தன் குழந்தையை தோளில் சுமந்தபடியும் அவர் மனைவி மற்றொரு மகளை கையில் பிடித்தபடியும் சாலையில் நடந்து செல்கின்றனர்.

`கொரோனா பெயரில் ஹேக்கிங்!’ - தடுக்கக் கைகோக்கும் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள்

``கிராமத்தில் உதவி செய்பவர்களைப் போல டெல்லியில் யாரும் உதவி செய்ய மாட்டார்கள்” என்று கூறும் பண்டி, ``நாங்கள், கிராமத்தில் ரொட்டி இருந்தாலும் அதனுடன் உப்போ, சட்னியோ வைத்து சாப்பிடுவோம். அமைதியான வாழ்க்கையாக இருக்கும். ஆனால், டெல்லியில் எங்களுக்கு எதுவும் இல்லை. யாரும் உதவி செய்யப்போவதும் இல்லை” என்று வேதனையுடன் கூறியுள்ளார். பண்டியின் கிராமம் டெல்லியிலிருந்து சுமார் 150 கி.மீ தொலைவில் உள்ளது. நடந்தே அவர்களது கிராமத்துக்குச் செல்ல சுமார் 2 நாள்கள் ஆகும் என்று கூறுகிறார். தேவையான பணமோ, உணவோ அவரிடம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து வசதிகள் இல்லாத சூழலில் தனது குடும்பத்துடன் கிராமங்களுக்கு நடந்தே செல்லும் இந்தத் தொழிலாளிகள் பூட்டப்பட்ட எல்லைகளில் இருக்கும் காவல்துறையினரையும் எதிர்கொள்ள தயாராகவே இருந்துள்ளனர். ``21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அதிக நாள்களாகத் தோன்றலாம். ஆனால், மக்களுடைய பாதுகாப்பிற்கு இதுதான் வழி” என பிரதமர் தனது உரையில் தெரிவித்திருந்தார். ஆனால், பண்டியைப் போன்ற அன்றாடம் வேலை செய்து தங்களது வாழ்க்கையை ஓட்டுபவர்களுக்கு இந்த நாள்கள் மிகப்பெரிய சவாலாகவே இருக்கும் எனலாம்.

கொரோனா
கொரோனா

பிரதமர் மோடி வாரணாசி பகுதியிலுள்ள மக்களுடன் உரையாடும்போது, ``உதவி செய்ய முடிந்தவர்கள் வறுமையில் இருக்கும் குடும்பங்களுக்கு 21 நாள்கள் உதவி செய்யுங்கள்” என்று பரிந்துரை செய்தார். கிராமங்களில் மக்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்கின்றனர் என்பதை ஏற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ``நகரங்களில் உதவிகள் குறித்த கேள்வி எழுகிறது. குடிமக்கள் ஏழைகளுக்கு உதவ வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

Credits : NDTV

`வாழு, வாழ விடு' அன்றே சொன்ன அஜித்தும் ஒரு இலுமினாட்டியா?! - `கொரோனா' கலாய்பீடியா
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு