Published:Updated:

`நடைபாதையில் வீடு; தெருவிளக்கில் படிப்பு!’ - சாதித்த புலம்பெயர் தொழிலாளி மகள்

தொழிலாளர்கள்
தொழிலாளர்கள் ( மாதிரி புகைப்படம் )

``என் மகள்கள் தங்களது வாழ்க்கையைப் புத்தகங்களில் கண்டுபிடித்துள்ளனர். நான் காலையில் வேலைக்குச் செல்லும்போதும் இரவில் வீட்டுக்கு வரும்போதும் என்னுடைய நான்கு மகள்களும் படித்துக்கொண்டுதான் இருப்பார்கள்.”

கொரோனா வைரஸ் தொடர்பான ஊரடங்கால் கடுமையாகப் பாதிப்படைந்தவர்களின் மிகவும் முக்கியமானவர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். தங்களது வேலைகளை இழந்து சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் அன்றாட வாழ்க்கைக்காக மிகவும் சிரமப்பட்டனர். இதையடுத்து, தங்ளது சொந்த மாநிலங்களை நோக்கி நடந்தே பயணங்களை மேற்கொண்டனர். இந்தப் பயணங்களின்போது விபத்து, உடல் சோர்வு, உணவின்மை போன்ற பல காரணங்களால் பலர் தங்களது உயிர்களையும் இழந்தனர். இந்தச் சம்பவங்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. புலம்பெயர்ந்து வந்து அந்தந்த மாநிலங்களில் தங்கி இருப்பவர்களும் அன்றாட வாழ்க்கையை இழந்து இன்னும் கடுமையாகக் கஷ்டப்பட்டு வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையிலும் புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவரின் மகள் பொதுத்தேர்வில் 80 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தேர்வு
தேர்வு

ஹரியானாவில் ரோஹ்தக் காலனியில் உள்ள நடைபாதையில் இருக்கும் 10x10 அறையில் பூஜா ராணி தன் பெற்றோர்கள் மற்றும் மூன்று சகோதரிகளுடன் வசித்து வருகிறார். பூஜாவின் தந்தை மத்தியப் பிரதேசத்தில் இருந்து இந்தப் பகுதிக்கு வந்தவர். அப்பகுதியில் உள்ள காந்தி பள்ளியில் இருந்து தனது கல்வியை பூஜா தொடங்கியுள்ளார். பின்னர், பெரும்பான்மையான புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகள் தங்களது பாடங்களைப் படிக்கும் தெருவிளக்கின் வெளிச்சத்தில்தான் பூஜாவும் அமர்ந்து படித்துள்ளார். அங்கு அமர்ந்து படித்து தற்போது தன்னுடைய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 80 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

`நடிப்பு வேண்டாம்; படிப்பு மட்டுமே கடைசி வரை உதவும்' வளர்ச்சி குறைப்பாட்டைக் கடந்து சாதித்த சரவணன்

இதுதொடர்பாக பூஜா ராணி பேசும்போது, ``நான் 80 சதவிகிதத்துக்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுள்ளேன் என்று கூறுவதில் பெருமிதம் அடைகிறேன். என்னுடைய பெற்றோர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். குறிப்பாக என்னுடைய அம்மா. எதிர்காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கற்பிக்க விரும்புகிறேன். ரோஹ்தாக் பகுதியில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு காந்திப் பள்ளியானது மிகுந்த நம்பிக்கை அளிக்கும் ஒன்றாக உள்ளது. ஏனெனில், தொழிலாளர்கள் தங்களது குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதன் மூலம் அவர்கள் வாழ்க்கையில் படிப்படியாக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நம்புகிறார்கள்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

பூஜாவின் தந்தை கைலாஷ் குமார் தினசரி கூலித் தொழிலாளியாக உள்ளார். பூஜாவின் அம்மா, வீடுகளில் பகுதிநேரம் சுத்தம் செய்யும் பணிகளைச் செய்து வருகிறார். இருவரும் படிக்கவில்லை. பெரும்பாலான நேரங்களில் அவர்கள் ஒருநாளைக்கு இரண்டு வேளை உணவை ஏற்பாடு செய்யவே போராட வேண்டிய நிலைமையில் உள்ளனர். கைலாஷ் குமார் பேசுகையில், ``என் மகள்கள் தங்களது வாழ்க்கையை புத்தகங்களில் கண்டுபிடித்துள்ளனர். நான் காலையில் வேலைக்குச் செல்லும்போதும் இரவில் வீட்டுக்கு வரும்போதும் என்னுடைய நான்கு மகள்களும் படித்துக்கொண்டுதான் இருப்பார்கள்” என்று பெருமிதம் கொள்கிறார்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பூஜாவின் கதையைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ``புலம்பெயர்ந்த தொழிலாளியின் மகள் பூஜா ராணி, பத்தாம் வகுப்புத் தேர்வில் 80.4 சதவிகிதம் மதிப்பெண் பெற்றுள்ளார். தனது குடும்பத்தினருடன் ஒரு நடைபாதையில் 10x10 அறையில் அவர் வசித்து வருகிறார். எதுவுமே முடியாததில்லை என்பதை அவர் நிரூபித்துள்ளார். பூஜா, நீங்கள் எங்கள் அனைவருக்கும் உத்வேகமாக அளிக்கக்கூடியவராக உள்ளீர்கள்” என்று பதிவிட்டுள்ளார். பிற நெட்டிசன்களும் இந்தப் பதிவுக்கு கீழே தங்களது பாராட்டுக்களை பூஜாவுக்கு தெரிவித்து வருகின்றனர்.

பூஜா ராணி, மிகச்சிறந்த ஆசிரியராக வர நாமும் வாழ்த்துகளை தெரிவிக்கலாமே..!

Credits : TOI

`மகன் இறந்துவிட்டதாகக் கூறினார்!’ -புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் புகைப்படம் எடுத்தவரின் கள அனுபவம்
அடுத்த கட்டுரைக்கு