Published:Updated:

பக்கவாதத்தால் முடங்கினார் - பணிப்பெண்ணின் குடும்பத்தைக் காக்க பட்டதாரி தம்பதியின் நெகிழ்ச்சி செயல்!

நன்கு படித்த பட்டதாரி தம்பதி மும்பையின் சாலையோரங்களில் கடை வைத்து உணவு விற்று வருகின்றனர். அவர்களின் சாலையோர கடைக்கான காரணம் நெகிழ்ச்சியடையச் செய்வதாக உள்ளது.

மும்பை தம்பதி
மும்பை தம்பதி ( Facebook )

வறுமையில் உள்ளவர்கள், உடல் நிலை சரியில்லாதவர், முதியவர் போன்ற பலருக்குப் பணம், உணவு போன்ற பொருள்களைக் கொடுத்து உதவுவதை நாம் பார்த்திருக்கிறோம். கேட்டிருக்கிறோம். அவ்வளவு ஏன், நாமே பலருக்கு உதவியும் இருப்போம். ஆனால் பணம், பொருள்களைத் தாண்டி இயலாதவர்களுக்கு இப்படியும் உதவலாம் எனச் செய்து காட்டி வருகின்றனர் மும்பையைச் சேர்ந்த ஒரு தம்பதி.

Help
Help

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கண்டவாலி ரயில் நிலையத்துக்கு வெளியில் சாலையோரத்தில் ஒரு தம்பதி உணவுக் கடை அமைத்து வியாபாரம் செய்துவருகின்றனர். காலை 4 முதல் 9:30 மணி வரை மட்டுமே அவர்களின் கடை செயல்படும். இது அனைவரும் செய்வதுதானே இதில் என்ன சிறப்பு உள்ளது எனப் பலருக்கும் தோன்றலாம். ஆனால், அந்தக் கடை வைத்துள்ள இருவருமே எம்.பி.ஏ பட்டதாரிகள். ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்துவருகின்றனர்.

`நூற்றாண்டைக் கடந்த பொம்மைகள்; 60 ஆண்டுகளாகக் கொலு!' - நெகிழும் மூத்த தம்பதி

ஆனால், இவர்கள் சாலையோரக் கடையில் வேலை செய்யும் காரணம் மிகவும் நெகிழ்ச்சிகரமாக உள்ளது. அஸ்வினி ஷெனோய் ஷா மற்றும் அவரின் கணவர் அன்குஷ் ஆகம் ஷா பற்றி, தீபாளி பாட்டியா என்ற பெண் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது சமூகவலைதளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ``கடந்த அக்டோபர் 2-ம் தேதி காலை நல்ல உணவு தேடி நான் கண்டவாலி ரயில் நிலையத்துக்குப் பின்புறம் உள்ள சாலைகளில் சுற்றித் திரிந்துகொண்டிருந்தேன். அப்போது என் கண்ணில் சாலையோரக் கடை ஒன்று தென்பட்டது. அதை வைத்து நடத்துபவர்களைப் பார்த்தால் படித்தவர்கள் போன்று இருந்ததால் அந்தக் கடை என்னை ஈர்த்தது.

Mumbai couple
Mumbai couple
Facebook

அங்கு இட்லி, போகா, உப்புமா, பரோட்டா போன்ற உணவு வகைகள் இருந்தன. நான் சிற்றுண்டியை வாங்கி சாப்பிட்டுக்கொண்டே ` ஏன் சாலையோரத்தில் கடை வைத்திருக்கிறீர்கள்?’ எனக் கேட்டேன். அவர்கள் கூறிய காரணத்தைக் கேட்டு உண்மையில் அதிர்ந்து போனேன். அவர்களின் கருணையைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். அவர்கள் இருவரும் படித்து ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவர்கள். ஆனால், தங்கள் வீட்டில் வேலை செய்யும் 55 வயது பெண்மணிக்குச் சமீபத்தில் பக்கவாதம் ஏற்பட்டதால் அவரின் உடல்நிலை மோசமாகியுள்ளது. அந்தப் பெண்ணுக்கு உதவுவதற்காகவே இந்தக் கடை அமைத்து அதில் வரும் பணத்தை அந்தப் பெண்ணின் குடும்பத்துக்குத் தருகின்றனர்.

அஸ்வினி வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் கணவர் சமைத்துத் தரும் உணவுகளை இந்தத் தம்பதி அதிகாலை முதல் சாலையில் நின்று விற்றுவருகின்றனர். அதன் பிறகு தங்கள் நிறுவனங்களுக்குச் செல்கின்றனர். இவர்களின் செயலால் அந்தப் பணிப் பெண் தன் குடும்பத்துக்காக ஓட வேண்டிய அவசியமில்லை. இந்தச் சிற்றுண்டியில் வரும் உணவு அவருக்கு உதவும். இந்தத் தம்பதிக்கு என் வணக்கங்கள். நீங்களும் நிஜ ஹீரோக்கள்தான்” எனக் குறிப்பிட்டுள்ளார் தீபாளி பாட்டியா.

In the rushing world of Mumbai where we rarely have time to stop and think here are 2 Super Heros who think more for...

Posted by Deepali Bhatia on Tuesday, October 1, 2019

பணம், பொருள் கொடுத்து உதவ முடியாதவர்கள் தங்களின் நேரத்தை இதுபோன்று செலவு செய்தாலும் ஒரு குடும்பத்துக்கு உதவ முடியும் என்பதை இந்தத் தம்பதி நிரூபித்துக் காட்டியுள்ளது. இவர்களின் செயலுக்கு சமூகவலைதளத்தில் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.