Published:Updated:

`மகன் இறந்துவிட்டதாகக் கூறினார்!’ -புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் புகைப்படம் எடுத்தவரின் கள அனுபவம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தொழிலாளி ராம்புகார்
தொழிலாளி ராம்புகார் ( Twitter / Atul Yadav )

``ஒருவருக்கு பிஸ்கட் கொடுக்க வேண்டும் என்றாலும், அதைத் தரையில் வைத்துவிட்டு வரவேண்டியதாக இருக்கிறது. பிஸ்கட் பாக்கெட்டை வேண்டியவர் வந்து எடுக்கும்போது மனது உடைகிறது.”

இந்தியாவில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்னை கடந்த சில நாள்களாக அதிக அளவில் விவாதிக்கப்பட்டுவருகிறது. தொழிலாளர்கள் தொடர்பான பிரச்னையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தற்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறுகின்றன. முன்னதாக, தங்களது சொந்த ஊர்களுக்கு நடைபயணம் மேற்கொண்ட பல தொழிலாளர்கள், ரயில் மற்றும் சாலை விபத்துகளிலும் உடல் சோர்வு காரணமாகவும் இறந்த செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

குறிப்பாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்னைகள் விவாதப் பொருளாக மாறுவதற்கு புகைப்படங்கள் அதிக அளவில் பங்காற்றின. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் படும் கடுமையான கஷ்டங்களை வார்த்தைகளால் விளக்க முடியாத துயரங்களை சமூக வலைதளங்களில் வலம்வந்த பல புகைப்படங்கள் விளக்கின.

புகைப்பட கலைஞர் அதுல் யாதவ்
புகைப்பட கலைஞர் அதுல் யாதவ்

அவ்வகையில் சில நாள்களுக்கு முன்பு, சாலையின் ஓரத்தில் அமர்ந்து செல்ஃபோனில் அழுதுகொண்டே பேசும் புலம்பெயர்ந்த தொழிலாளர் ஒருவரின் புகைப்படம் பலரது இதயங்களையும் நொறுக்கியது எனலாம். புகைப்படத்தில் இருக்கும் தொழிலாளரின் பெயர், ராம்புகார். இந்த புகைப்படத்தை எடுத்த பி.டி.ஐ-யின் புகைப்படக் கலைஞர் அதுல் யாதவ், அந்த புகைப்படத்தைப் பதிவு செய்தது பற்றி ஃபர்ஸ்ட் போஸ்ட் ஊடகத்திடம் பேசுகையில், ``அவரது பெயர் ராம்புகார். ஆனால், அவர் அதை என்னிடம் சொல்லவில்லை. சில நாள்கள் கழிந்த பின்னர் செய்தித்தாள் ஒன்றின் வழியாக நான் அதை அறிந்துகொண்டேன். அந்தநேரத்தில் அவரது பெயரைக் கூட என்னால் கேட்க முடியவில்லை. அவர் செல்லவேண்டிய இடத்தின் திசையைக் குறிப்பிட்டு, `அங்கே’ என்று கூறினார். அதிகமாக அவரால் பேசக்கூட முடியவில்லை” என்றார்.

`யாரும் எங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை!’ -தொடரும் அவலநிலையால் கொதிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்

டெல்லியில் உள்ள நிஜாமுதீன் பகுதி வழியாக, கடந்த திங்கள் கிழமை அன்று தனது காரில் சென்றுகொண்டிருந்த யாதவ், ராம்புகாரைப் பார்த்துள்ளார். அப்போது, மிகவும் சங்கடமான சூழலில் செல்ஃபோனைப் பிடிக்க முடியாத நிலையில் கஷ்டப்பட்டு பிடித்து காதில் வைத்தபடி அவர் பேசிக்கொண்டிருப்பதை கவனித்துள்ளார்.

பின்னர், மாலை வேளையில் யமுனா பாலத்திற்கு அருகே சாலையின் ஓரத்தில் ராம்புகார் அமர்ந்திருப்பதைப் பார்த்துள்ளார். உடனே, தனது காரை நிறுத்தி அவரிடம் சென்று பேசும் முன்னர், அவரின் நிலையை புகைப்படமாகப் பதிவுசெய்துள்ளார். ஆழ்ந்த துயரத்தில் அழுகையை வெளிப்படுத்தியிருக்கும் ராம்புகாரின் அந்த புகைப்படம், சமூகத்தில் பலரையும் கலங்கவைத்தது. பின்னர், ராமிடம் சென்று அவருடைய பிரச்னையைக் கேட்டுள்ளார்.

தொழிலாளர் ராம்புகார்
தொழிலாளர் ராம்புகார்
Twitter / Atul Yadav

ராம்புகார் கூறியதைக் குறிப்பிடும் யாதவ், ``அவரது மகன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். ஆனால், அவரால் அவரது மகனைக் காண செல்ல முடியவில்லை. நான் அவரிடம் எங்கு செல்ல வேண்டும் என கேட்டேன். யமுனா பாலத்திலிருந்து பொதுவான திசையைக் குறிப்பிட்டு அங்கு செல்ல வேண்டும் என்று பலமுறை கூறினார். பின்னர், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள குறிப்பிட்ட பகுதியைக் கூறினார் என நினைக்கிறேன்.

நான் அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, சில காவல்துறை அதிகாரிகள் என்ன நடக்கிறது என விசாரிக்க வந்தனர். அப்போது அவர்களிடம் நிலைமையை விளக்கினேன். அவர் மாநில எல்லையைக் கடக்க உதவி செய்வதாகக் கூறினேன். ஆனால், அவரை என்னுடைய காரில் அழைத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், காவலர்கள் அவர் வீட்டிற்குச் செல்ல உதவி செய்வதாகக் கூறினர்” என்று அங்கு நடந்ததை விளக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து பேசிய அவர், ``பீகாரின் பெகுசாரையில் உள்ள பரியார்பூர் எனும் பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்பது பின்னர் தெரியவந்தது. நான் அறிந்த தகவலின்படி, ராம்புகார் டெல்லியில் உள்ள குறிப்பிட்ட பகுதியில் பணிபுரிந்துவருகிறார். தன்னுடைய மகன் இறந்த தகவலைக் கேட்டு வீட்டிற்குச் செல்ல முயன்றுள்ளார். துரதிஷ்டவசமாக, அவர் தனது பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு, உத்தரப்பிரதேச வாயிலில் மூன்று நாள்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்” என்றும் தெரிவித்தார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நிலைமையை விளக்கும் வகையில், யாதவ் பல்வேறு புகைப்படங்களை எடுத்துள்ளார். அவற்றைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்
Twitter / Atul Yadav

மேலும், ``இந்த மாதிரியான புகைப்படங்களை எடுக்க எந்தத் திட்டமும் என்னிடம் இல்லை. கவலைக்குரிய இந்தத் தருணங்களை புகைப்படம் எடுக்கும்போது ஃப்ரேமிங், லைட்டிங் என எதுவும் நினைவுக்கு வருவதில்லை. அந்தத் தொழிலாளியுடன் பேசும்போது என்னுடைய கேமராவைக்கூட என்னால் எடுத்துவர முடியவில்லை. இவரைப்போல சாலையில் நடந்துசெல்லும் கர்ப்பிணிப் பெண் ஒருவரையும் புகைப்படம் எடுத்தேன். மிகவும் அவர் சோர்வடைந்துவிட்டதால் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். ஆனால், அவருடைய இன்னொரு மகன், தன்னைச் தூக்கிச் சுமக்கும்படி கேட்டு அழுதுகொண்டிருந்தான். இரவு நேரம் நெடுஞ்சாலையில் செல்லும்போது, சில தொழிலாளர்கள் வெறுங்காலுடன் நடந்துசென்றுகொண்டிருந்தார்கள். அதையும் புகைப்படம் எடுத்தேன்” என்று கூறினார்.

`சாப்பாட்டுக்கே வழியில்லை; ஊருக்கு அனுப்புங்க!' -திருச்சியில் தொடரும் வடமாநில தொழிலாளர்கள் போராட்டம்

யாதவ், உலகின் பல பகுதிகளுக்கும் சென்று சோகங்களையும் பேரழிவுகளையும் புகைப்படங்களாகப் பதிவுசெய்துள்ளார். அந்தமான் - நிக்கோபர் தீவுகளில் 2004 -ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி, ஜம்மு - காஷ்மீரில் 2005 -ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு என பலவற்றையும் புகைப்படம் எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால், ``தற்போது நடந்துகொண்டிருக்கும் சூழல் போன்று எதையும் நான் பார்த்ததில்லை. இது மிகவும் வித்தியாசமான சவாலாக உள்ளது” என்கிறார். ``கடந்த காலங்களில் நடந்த பேரழிவுகள் மற்றும் துன்பங்கள் சில நாள்களில் முடிந்துவிடும் என மக்கள் அறிந்திருந்தார்கள். அதைப்போலவே அவர்கள் மீண்டு வந்தார்கள். ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு எப்போது முடியும்... இயல்புநிலைக்கு எப்போது திரும்புவார்கள் என யாருக்கும் தெரியாது” என்றும் குறிப்பிட்டார்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்
Twitter / Atul Yadav

இந்த நிலைமை அதிக பயத்தை உருவாக்குவதாகக் குறிப்பிட்ட யாதவ், ``அடுத்தநாள் என்ன நடக்கப்போகிறது என்று யாருக்குமே தெரியாது. மக்கள் மேலும், துன்பப்படுவதைப் பார்க்க வேதனையாக இருக்கிறது. பெரும்பாலான நேரங்களில் அவர்களுக்கு உதவ அனுமதிகூட கிடைப்பதில்லை. ஏனென்றால், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டியதாக இருக்கிறது. ஒருவருக்கு பிஸ்கட் கொடுக்க வேண்டும் என்றாலும், அதைத் தரையில் வைத்துவிட்டு வரவேண்டியதாக இருக்கிறது. பிஸ்கட் பாக்கெட்டை வேண்டியவர் வந்து எடுக்கும்போது மனது உடைகிறது” என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

Credits : First Post

`விசைப்படகிலேயே சமையல்.. அங்கேயே உறக்கம்!' - 48 நாள்களாகத் தவிக்கும் 300 தொழிலாளர்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு