Published:Updated:

சிசிடிவி ஆஃப்; திடீர் மாயம்; கிணற்றில் உடல்! -கேரளாவை உலுக்கும் பாதிரியார் மரணம்

கிணறு
கிணறு ( மாதிரி படம் )

சிசிடிவி சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததை காவலர்கள் உறுதி செய்தனர். காவலர்கள் தொடர்ந்து பாதிரியாரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவில், கோட்டயம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தேவாலயத்தின் பாதிரியார் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் சென்றுள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில், தற்போது அவரது உடல் தேவாலயம் அருகே இருந்த கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். காவல்துறையினர் இதுதொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

தற்கொலை
தற்கொலை

கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் எட்டுபராயி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து கேரளா வந்துள்ளார். இவருக்கு 57 வயது ஆகிறது. கேரளாவின் கோட்டயத்தில் புன்னத்தூரா எனும் பகுதியில் அமைந்துள்ள செயின்ட் தாமஸ் தேவாலயத்தில் பாதிரியாராக பொறுப்பேற்றுள்ளார்.

தேவாலயப் பணிகளை மேற்கொண்டு வந்த பாதிரியார் ஜார்ஜ் திடீரென கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் சென்றுள்ளார். இதனால், பதற்றமடைந்த தேவாலயத்தைச் சேர்ந்த மக்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இரவு முழுவதும் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்கின்றனர். காவல்துறையினருக்கு அவர்கள் அளித்த புகாரில், பாதிரியாரைச் சந்திக்க அவரது அறைக்கு மக்கள் சென்றதாகவும் ஆனால், அறையில் அவர் இல்லை என்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறியுள்ளனர்.

`தலைக்கேறிய போதை; பாறைக்குழிக்குள் இளைஞரின் சடலம்!' -கரூரை அதிரவைத்த மர்ம மரணம்

தொடர்ந்து அவர்கள் கூறுகையில், ``பாதிரியாரின் மொபைல் அறையில் இருந்ததைக் கவனித்தோம். பலரிடமும் தொடர்ந்து விசாரிக்கும்போது, அவர் அந்த நாளில் மறைமாவட்ட பிஷப்புடன் இடமாற்றம் செய்வது தொடர்பான சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்ததாக நாங்கள் அறிந்தோம். இதையடுத்து, மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர்களிடம் நாங்கள் விசாரித்தோம். ஆனால், அவர் அந்தச் சந்திப்புக்குச் செல்லவில்லை என தகவல் கிடைத்தது” என்றும் குறிப்பிட்டனர்.

சிசிடிவி சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததை காவலர்கள் உறுதி செய்துள்ளனர். காவலர்கள் தொடர்ந்து அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவரது உடல் தேவாலயத்தின் இருந்த கிணற்றில் கிடந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். கயிற்றின் மூலமாக கிணற்றில் இருந்த அவரது உடலை மீட்டுள்ளனர்.

தற்கொலை
தற்கொலை
மாதிரி படம்

பாதிரியார் ஜார்ஜ், திருச்சபையின் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆலப்புழாவில் உள்ள எடத்துவாப் பகுதிதான் இவருடைய சொந்த ஊராகக் கூறப்படுகிறது. தேவாலயத்தில் சில நாள்களுக்கு முன்பு நடந்த தீ விபத்தில் சில ஆவணங்கள் எரிந்துவிட்டதாகவும் இதனால், அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், ஜார்ஜ் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனினும், அவர் இறந்ததற்கான காரணத்தை உறுதிப்படுத்த பிரேதப் பரிசோதனைக்கு அவரது உடல் அனுப்பப்பட்டுள்ளது. அறிக்கையின் முடிவுகளை வைத்தே அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பாதிரியாரின் மர்ம மரணம் அனைவரையும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.

இதேபோல, கேரளாவில் 20 வயதான கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த மாதம் அவரது கான்வென்ட் அருகே உள்ள கிணற்றுக்குள் இறந்து கிடந்ததாக தகவல்கள் வெளியாயின. பத்தனம்திட்டா மாவட்ட நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

கும்பகோணம் அதிர்ச்சி: கொலை வழக்கில் விடுதலையானவர்; பிள்ளைகள் கண்முன்னே வெட்டிக் கொலை!
அடுத்த கட்டுரைக்கு