Published:Updated:

`வறுமை...!' #MyVikatan

வறுமை
வறுமை

ஏழ்மையிலிருந்து வேகமாக மீண்டுகொண்டிருந்த இந்தியா, மீண்டும் ஏழைகள் அதிகம் கொண்ட நாடாக மாறுகிறதோ என்ற கவலைதரக்கூடிய புள்ளிவிவரங்கள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மாஞ்சினீஸ் கேக் கடையில் (Monginis Cake Shop) கேக் வாங்க சென்றிருந்தோம். அப்போது யாசகம் கேட்கும் சிறுவன் வாசலில் வந்து நின்றான். அவனைப் பார்த்த என் மகள் அனிச்சம், அவனுக்கு ஒரு கேக் வாங்கிக் கொடுங்கள் என்றார். கடையில் வேலை செய்யும் இளைஞரிடம் ஒரு கேக் கொடுக்கச் சொன்னேன். ஒரு பப்ஸும் (Pups/Patties) கொடுக்கச் சொல்லுங்கள் என்று சொன்னாள் அனிச்சம். அதைக் கேட்ட அந்த இளைஞர், ஒரு பப்ஸை எடுத்து மைக்ரோவேவ் ஓவனில் (Microwave Oven) சூடு செய்து அந்தச் சிறுவனிடம் கொடுத்தார்.

கேக் கடை
கேக் கடை
மாதிரி படம்

யாசகம்தானே என்று நினைக்காமல், அந்த பப்ஸை சூடு செய்து கொடுத்தது ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. இளைஞரிடம் பணம் கொடுத்தேன். வேண்டாம் என்று சொன்னார். எவ்வளவோ வற்புறுத்திய பின், நான் தினமும் இங்கே உள்ள சிறுவர்களுக்கு கேக் அல்லது பப்ஸ் கொடுப்பேன். அதனால், எனக்குப் பணம் வேண்டாம் என்று சொன்னார். இந்தக் கடையில் வேலை செய்பவர்கள் கல்லூரி மாணவர்கள். தங்கள் படிப்பு செலவுக்காக வேலைசெய்பவர்கள். அந்தச் சொற்ப வருமானத்தில் தானம் கொடுக்க மிகப்பெரிய மனது வேண்டும்.

சமீபத்தில் அனிச்சத்தை என் நண்பர் குடும்பம் ஒரு பார்ட்டிக்கு அழைத்துச் சென்றனர். வருகிற வழியில் ஒரு ட்ராஃபிக் விளக்கில் வாகனம் நின்போது ஒரு சிறுவன் யாசகம் கேட்டிருக்கிறான். என் நண்பர் பணத்தை எடுத்துக் கொடுத்திருக்கிறார். ஆனால், அந்தச் சிறுவன் பணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு அக்க்ஷி (அனிச்சத்தின் தோழி) கையில் இருந்த சாக்லேட்டைக் கேட்டிருக்கிறான். அந்தச் சாக்லேட்டை அக்க்ஷி கொடுக்கப்போனபோது, வாகன ஓட்டுநர் கொடுக்க வேண்டாமென்று சொல்லியிருக்கிறார்.

சாக்லேட்
சாக்லேட்

ஏனென்றால், அந்தச் சாக்லேட்டை அக்க்ஷிக்கு வாங்கிக் கொடுத்தது அந்த ஓட்டுநர். நான் உனக்கு அன்போடு வாங்கிக் கொடுத்ததை அவனுக்குக் கொடுக்க வேண்டாம் என்பது ஓட்டுநரின் எண்ணம். இந்த பிரச்னை நடந்து கொண்டிருக்கையில் பச்சை சிக்னல் விழுந்தவுடன், ஓட்டுநர் வாகனத்தை வீட்டை நோக்கி ஓட்ட ஆரம்பித்துவிட்டார். அந்தச் சிறுவனுக்கு சாக்லேட் கொடுக்க முடியவில்லை என்ற காரணத்தால் அனிச்சம் அழுக ஆரம்பித்துவிட்டார். என் நண்பரும் இளகிய மனம் படைத்தவர். வீட்டுக்கு வந்தவுடன், ஓட்டுநரிடம் பணத்தைக் கொடுத்து அந்தச் சிறுவனுக்கு அதே சாக்லேட்டை வாங்கிக் கொடுங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டிருக்கிறார். அவர் சாக்லேட்டை வாங்கி அந்த சிறுவனிடம் கொடுத்து அதை வீடியோ காலில் (Video Call) போட்டு காண்பித்திருக்கிறார். இவையெல்லாம் நெகிழ்ச்சியான சம்பவங்கள்தான்.

இந்த நெகிழ்ச்சியில் நாம் சில முக்கிய பிரச்னைகளைக் கவனிக்கத் தவறுகிறோம். ஐ.நா மன்றம் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டிருக்கிறது. இந்தியா 2006 தொடங்கி 2016-ம் ஆண்டுக்குள் 27 கோடி மக்களை ஏழ்மையிலிருந்து மீட்டிருக்கிறது என்பதுதான் அந்தப் புள்ளிவிவரம். இந்தக் கணக்கெடுப்பில் ஏழ்மையில் இருந்து ஒருவர் விடுபட்டார் என்றால், அவருக்கு சொத்து, சமையல் எரிபொருள், சுகாதாரம், ஊட்டச்சத்து ஆகிய நான்கும் கிடைத்திருக்கின்றன என்று பொருள். இந்த முன்னேற்றம் நிகழ்ந்த 10 ஆண்டுகளில், எட்டு ஆண்டுக்காலம் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார். தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தார்.

வறுமை
வறுமை

ஏழ்மையிலிருந்து வேகமாக மீண்டுகொண்டிருந்த இந்தியா, மீண்டும் ஏழைகள் அதிகம் கொண்ட நாடாக மாறுகிறதோ என்ற கவலை தரக்கூடிய புள்ளிவிவரங்கள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. உலகநாடுகளின் பசி தரவரிசையில் (Hunger Rankings), 2010-ம் ஆண்டு 95-ம் இடத்தில் இருந்த இந்தியா 2019-ம் ஆண்டு 102-ம் இடத்துக்கு சரிந்துவிட்டது. அன்றைக்கு நமக்கு கீழே இருந்த பாகிஸ்தான், இன்றைக்கு நம்மைவிட முன்னேறி 94-ம் இடத்துக்குப் போய்விட்டது. எனவே, யாசகம் கேட்கும் சிறுவர்களுக்கு, அவர்கள் கேட்பதையோ, அதைவிட அதிகமாகவோ தருவது நெகிழ்ச்சியான விஷயம் என்றாலும்கூட, அது கவலைக்கும் வருத்தத்துக்கும் உரிய விஷயம்.

யாசகம் கேட்பவர்கள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். மத, சாதிச் சண்டைகளில் ஈடுபடுவதை விட்டுவிட்டு, வறுமையற்ற தன்னிறைவு பெற்ற நாடாக வளர எல்லோரும் உழைக்க வேண்டும். அதில் அரசாங்கத்தின் பங்கு மிக மிக முக்கியம். கேள்வி கேட்பவர்களின் வாயை அடைப்பதும், கேள்விக்குப் பதிலாக மற்றவர்களைக் கைகாட்டுவதும் முன்னேற்றத்தைக் கொண்டுவராது.

- முனைவர் கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு