பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனையின்போது விமான நிலைய அதிகாரிகள் பெண் ஒருவரின் சட்டையைக் கழட்டச் சொல்லி அவரை உள்ளாடையுடன் நிற்கவைத்தாகச் சர்ச்சை கிளம்பியுள்ளது.
இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்தப் பெண், "பெங்களூரு விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனையின்போது என் சட்டையைக் கழட்டச் சொன்னார்கள். பாதுகாப்புச் சோதனைச் சாவடியில் வெறும் கேமிசோலை அணிந்துகொண்டு, ஒரு பெண்ணாக நிற்பது மிகவும் அவமானகரமானது. இப்படி ஒரு பெண்ணின் ஆடையை அகற்றும் அளவுக்குத் தேவை என்ன?" என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் ட்விட்டரில் பயணிகளின் புகார்களுக்குத் தொடர்ந்து பதிலளித்து வரும் பெங்களூரு விமான நிலைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் இந்தச் சம்பவம் குறித்து, "உங்களுக்கு ஏற்பட்ட தொந்தரவிற்காக நாங்கள் வருந்துகிறோம். இதைப் பற்றி நாங்கள் எங்கள் செயல்பாட்டுக் குழுவுக்கு எடுத்துரைத்துள்ளோம். மேலும், CISF பாதுகாப்புக் குழுவிடமும் இது பற்றித் தெரிவித்துள்ளோம்" என்று பதிலளித்துள்ளது.