Published:Updated:

`விபத்தில் இறந்த தாய்.. அழுத குழந்தை.. குழம்பிய தொழிலாளி!’ - புலம்பெயர்ந்தவர்களைத் தொடரும் சோகம்

குழந்தையுடன் புலம்பெயர்ந்த தொழிலாளர்
குழந்தையுடன் புலம்பெயர்ந்த தொழிலாளர் ( Ndtv )

``விபத்து நடந்த சில நிமிடங்களுக்குப் பிறகு அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த ஒருவரின் கைகளில் ஒரு குழந்தை அழுதபடி இருந்தது. விபத்தில் இறந்த மூன்று பெண்களில் அந்தக் குழந்தையின் தாயும் ஒருவர்”

இந்தியாவில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள்களிலிருந்தே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடுமையான துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். வேலை பார்த்து வந்த மாநிலங்களில் ஊரடங்கு காரணமாக வேலை இழப்பு ஏற்பட்டதால் சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப தொழிலாளர்கள் முடிவு செய்தனர். ஆனால், பொதுப் போக்குவரத்துகள் முடக்கப்பட்டதால், தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்தனர். அனைத்து மாநிலங்களிலும் தொழிலாளர்கள் தங்குவதற்கு முகாம்களை அரசுகள் ஏற்பாடு செய்த போதிலும் அங்குள்ள பிரச்னைகளை சுட்டிக்காட்டி சொந்த ஊர்களுக்கு அனுப்ப வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்
Twitter / Atul Yadav

இதனிடையே, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு நடந்தும் கிடைத்த வாகனங்களில் ஏறியும் பயணிக்கத் தொடங்கினர். இதனால், ஏற்பட்ட விபத்துகளைக் கருத்தில்கொண்டு மாநில மற்றும் மத்திய அரசுகள் ரயில் சேவைகளைத் தொடங்கின. எனினும் முன்பதிவு, பயணச்சீட்டு விலை எனப் பல பிரச்னைகளால் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகினர். இதனால், தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு நடப்பது, கிடைக்கும் வாகனங்களில் பயணிப்பது போன்ற அவலநிலை தொடர்கிறது. இந்நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற டிரக் ஒன்று, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சி - மிர்சாபூர் நெடுஞ்சாலையில் மஹோபா பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

`எந்தத் தந்தையாவது மகனின் இறுதிச் சடங்குக்குப் போகாமல் இருக்க முடியுமா?’ - வேதனை பகிரும் ராம்புகார்

டெல்லியிலிருந்து உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதிக்குச் சென்றுகொண்டிருந்த மூன்று பெண் தொழிலாளர்கள், இந்த விபத்தில் பலியாகினர். இந்த விபத்து நடந்த சில நிமிடங்களுக்குப் பிறகு அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த ஒருவரின் கைகளில் ஒரு குழந்தை அழுதபடி இருந்தது. விபத்தில் இறந்த மூன்று பெண்களில் அந்தக் குழந்தையின் தாயும் ஒருவர். அந்தக் குழந்தையைத் தூக்கி வைத்திருந்த நபரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்தான். அதனால், அந்தக் குழந்தையை எங்கே விட்டுச் செல்வது எனத் தெரியாமல் யோசித்தபடி நின்றுள்ளார். ``நான் இந்தக் குழந்தையை இங்குள்ள அதிகாரிகளுடன் விட்டுச் செல்ல வேண்டுமா? குழந்தையை எவ்வளவு தூரம் என்னால் கூடவே அழைத்துச் செல்ல முடியும்” என்று அந்தத் தொழிலாளர் கூறியுள்ளார். மேலும், குழந்தையின் தந்தை ஜான்சியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

டிரக்கில் இருந்த பெண் ஒருவர் இந்தக் குழந்தையைச் சரியாக பிடித்துக்கொண்டதால் குழந்தை அதிஷ்டவசமாக உயிர் தப்பியதாக தெரிவித்துள்ளனர். தனது தாயின் முகத்தைக் காணாமல், தனக்கு பரிச்சயம் இல்லாத முகங்களைப் பார்த்ததால் அந்தக் குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளது. குழந்தைக்குப் பால் கொடுத்ததாக, குழந்தையை ஏந்தியிருக்கும் தொழிலாளர் கூறியுள்ளார். தனது சொந்த ஊரை நெருங்கிய அந்த நபர் விபத்து நடந்த இடத்தில் குழந்தையுடன் இருந்துள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது.

தொழிலாளர்கள்
தொழிலாளர்கள்

பீகார் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அந்த டிரக்கில் 17 பேர் பயணம் செய்துள்ளனர். டெல்லியிலிருந்து நடந்து சென்றுகொண்டிருந்த இந்தத் தொழிலாளர்கள் விபத்து நடந்த இடத்திலிருந்து 70 கி.மீ-க்கு முன்பு ஹர்பல்பூரில் டிரக்கில் ஏறியுள்ளனர். டிரக்கின் ஓட்டுநரும் அவர்களை அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளார். தொழிலாளர்களுடன் டிரக் மஹோபா பகுதி அருகே வரும்போது டயர் வெடித்து இந்த விபத்து நடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், 12 பேருக்கும் அதிகமான நபர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் கடந்த சில நாள்களில் மட்டும் இதேபோல பல்வேறு விபத்துகள் நடந்துள்ளன. இந்த விபத்துகளில் புலம்பெயர்ந்த சுமார் 50 தொழிலாளர்கள் இறந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று மட்டும் பீகார், மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் விபத்துகள் இடந்துள்ளன. இதில், 16 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்துள்ளனர். தொடர்ச்சியாக இதுமாதிரியான சம்பவங்கள் நடைபெற்று வருவது கவலைக்குரிய ஒன்று எனவும் மீண்டும் விபத்துகள் நடக்காமல் இருக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Credits : NDTV

`இறந்த உடல்களுடன் திறந்த ட்ரக்கில் பயணித்த தொழிலாளர்கள்’ - அதிர்ச்சி கொடுத்த உ.பி சம்பவம்
அடுத்த கட்டுரைக்கு