Published:Updated:

`எனக்கு வழங்கப்பட்ட பணியும் முக்கியம்!'- கைக்குழந்தையுடன் முதல்வர் பாதுகாப்புக்கு வந்த பெண் காவலர்

குழந்தையுடன் காவலர்
குழந்தையுடன் காவலர்

``குழந்தையைப் போலவே எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியும் முக்கியமானது. எனவே, நான் குழந்தையை இங்கு அழைத்து வர வேண்டிய சூழல் இருந்தது."

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தன் குழந்தையை சுமந்தபடி பெண் காவலர் ஒருவர் பாதுகாப்பு பணிக்காக நின்றுகொண்டிருந்தது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

யோகி ஆதித்யநாத் இரண்டு நாள் பயணமாக அம்மாநிலத்திலுள்ள கவுதம புத்தா பகுதிக்குச் சென்றுள்ளார். இதனால், பாதுகாப்பு பணிகளுக்காக அப்பகுதிக்கு அதிகமான காவல்துறையினர் நியமிக்கப்பட்டிருந்தனர். சுமார் நூற்றுக்கணக்கான காவல்துறையினருக்கு மத்தியில் கான்ஸ்டபிள் பிரீத்தி ராணியும் ஒருவராக இருந்தார்.

குழந்தை
குழந்தை

கிரேட்டர் நொய்டாவில் உள்ள தாத்ரி காவல் நிலையத்தில் பிரீத்தி ராணி காவலராகப் பணியாற்றி வருகிறார். பிரீத்தியின் கணவருக்கு தேர்வு ஒன்று இருந்ததால் அவரால் குழந்தையைக் கவனிக்க முடியாத நிலை இருந்துள்ளது. இதனால், வேறு வழியின்றி தன் ஒன்றரை வயது மகனை பிரீத்தி ராணி கையில் எடுத்து வந்துள்ளார். திங்களன்று காலை 6 மணி முதல் தன்னுடைய பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ``குழந்தையைப் போலவே எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியும் முக்கியமானது. எனவே, நான் குழந்தையை இங்கு அழைத்து வர வேண்டிய சூழல் இருந்தது" என்று கூறியுள்ளார். இதனால் நெகிழ்ந்த நெட்டிசன்கள் `அம்மா எப்பவும் அம்மாதான், சூப்பர் காப், சூப்பர் மாம்’ போன்ற கமென்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Credits : Hindustan Times

`மகளை இழந்த தந்தை;  கட்டியணைத்த குழந்தை!’- நெகிழ்ந்த பீட்சா டெலிவரி பாய் #CCTV
அடுத்த கட்டுரைக்கு