Published:Updated:

`மக்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கை முக்கியம்!’ -கால் முறிந்த நிலையிலும் கடமையைச் செய்யும் ஊழியர்

சுகாதார ஊழியர் விம்லா குமாரி
சுகாதார ஊழியர் விம்லா குமாரி

``ஒப்படைக்கப்பட்ட அனைத்து வேலைகளையும் சிறப்பாகச் செய்பவர், விம்லா. எந்தவொரு துன்பத்தைக் கண்டும் அஞ்சாதவர். நான் அவருக்கு விடுப்பு வழங்கியிருந்தேன். ஆனால், அவர் அதைப் பெறவில்லை” - அதிகாரிகள்.

இந்தியாவில், கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆனால், மக்களின் உயிர்களைக் காப்பாற்ற தங்களது உயிரையும் பொருட்படுத்தாது சுகாதாரத்துறை ஊழியர்கள் பலரும் கொரோனாவுக்கு எதிராகப் போராடிவருகின்றனர். அவர்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடந்தபோதிலும், தனிப்பட்ட அளவில் பிரச்னைகள் இருக்கும்பட்சத்திலும், தங்களது பணியை அவர்கள் முறையாகச் செய்துவருகின்றனர். அவர்களை அதிகாரிகள், பிரபலங்கள் உட்பட பலரும் பாராட்டிவருகின்றனர். அவ்வகையில், பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா பகுதியின் மேஜிஸ்திரேட் குமார் ரவியின் ட்வீட் மூலமாகப் பலரது கவனத்தையும் பெற்றிருப்பவர்தான், அங்கன்வாடி தொழிலாளி விம்லா குமாரி.

சுகாதாரப் பணியாளர் விம்லா குமாரி
சுகாதாரப் பணியாளர் விம்லா குமாரி

கொரோனா தொடர்பான கணக்கெடுப்புப் பணியில் பணிபுரிந்து வரும் விம்லா குமாரி, கடந்த மார்ச் மாதம் இறுதியில், தனது வீட்டுக்கு அருகில் உள்ள குடிசைப்பகுதியில் இருந்த குட்டை ஒன்றில் தவறி விழுந்துவிட்டார். இதில், அவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஏப்ரல் மாதம் பீகார் அரசால் வைரஸ் அறிகுறிகள் தொடர்பான கணக்கெடுப்புப் பணிக்கு அவர் நியமிக்கப்பட்டார். தனது கால் முறிவைக் காரணம் காட்டி, தனது பணியை அவர் நிராகரிக்கவில்லை. நடப்பதற்கு பயன்படும் வகையில் ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு, தனக்கு வழங்கப்பட்ட பகுதியில் கணக்கெடுப்புப் பணியைத் தொடர்ந்து செய்துவந்தார். ஏப்ரல் 16-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரை மேற்கொண்ட பணியில், சுமார் 380 வீடுகளில் கணக்கெடுப்பை நடத்தியுள்ளார். ஒவ்வொரு நாளும் துணை செவிலியர் ஒருவருடன் இணைந்து காலை 8 மணி முதல் மதியம் வரை தனது பணியை மேற்கொள்வார், விம்லா.

`உயிரைப் பணயம் வைக்கும் சுகாதாரப் பணியாளர்கள்’ -குடும்பத்தைக் காக்க ரூ.1 கோடி அறிவித்த டெல்லி அரசு

இதையறிந்த அம்மாவட்ட மேஜிஸ்திரேட் குமார் ரவி, விமலாவின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ``தனிக்கவனத்துக்கு உரியவர் இவர். பாட்னா நகரைச் சேர்ந்த விம்லா குமாரி, தனது கால் முறிந்த நிலையிலும் கணக்கெடுப்பை நடத்திவருவதாக ஐ.சி.டி.எஸ் குழுவினர் தெரிவித்தனர். தனது பணியில் மிகுந்த அர்ப்பணிப்பு உள்ளவர்” என ட்வீட் செய்துள்ளார். இதையடுத்து, ட்விட்டரில் பலரும் தங்களது பாராட்டுகளை அவருக்கு தெரிவித்துவருகின்றனர்.

இதுதொடர்பாக விம்லா குமாரி பேசுகையில், ``நான் விடுப்பு எடுத்து வீட்டிலேயே இருந்தால், என் பகுதியில் உள்ள மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை உணர்ந்தேன். கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள இந்த மோசமான சூழலில் மக்களுக்கு நான் தேவைப்படும் நிலையில், அவர்களை விட்டு விலக வேண்டாம் என முடிவுசெய்தேன். என் பகுதியில் உள்ள மக்கள் என்னை நம்புகிறார்கள். என்னைத் தவிர வேறு எந்த அங்கன்வாடி ஊழியரையும் அவர்களின் குழந்தைகளுக்கு போலியோ உள்ளிட்ட வேறு தடுப்பூசிகளைப் போட அனுமதிக்க மாட்டார்கள். இதுதான் நம்பிக்கை. இப்பகுதியில் கணக்கெடுக்க வேறு எந்த ஊழியராவது நியமிக்கப்பட்டிருந்தால், இப்பகுதி மக்கள் பலரும் சரியான ஒத்துழைப்பை வழங்கி இருக்க மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்” என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

``விம்லாவுக்கு விடுப்பு வழங்க நாங்கள் தயாராக இருந்தாலும் அவர் தனது பணியில் பிடிவாதமாக இருக்கிறார்” என பாட்னா மாவட்ட அதிகாரிகளில் ஒருவரான பாரதி தெரிவித்துள்ளார். மேலும், அவர் சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த பிரிவான குழந்தைகள் மேம்பாட்டுத் துறையிலும் பணியாற்றிவருவதாகத் தெரிவித்துள்ளார். குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அதிகாரி ஒருவர் விம்லா குறித்து பேசும்போது, ``அவர் மிகவும் சுறுசுறுப்பான மற்றும் அர்ப்பணிப்பு மிக்க தொழிலாளி. அவரிடம் ஒப்படைக்கப்பட்ட அனைத்து வேலைகளையும் சிறப்பாகச் செய்வார். எந்தவொரு துன்பத்தைக் கண்டும் அஞ்சாதவர். நான் அவருக்கு விடுப்பு வழங்கியிருந்தேன். ஆனால், அவர் அதைப் பெறவில்லை” என்று கூறியுள்ளார்.

15 வருடங்களுக்கு முன்பு கணவனை இழந்த விம்லா குமாரிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் கல்லூரிகளில் படிப்பைத் தொடர்ந்துவருகின்றனர். மாதாந்தர வருமானம் மூலம் குழந்தைகளையும் படிக்கவைத்து வாழ்க்கையை நடத்திவருகிறார் என அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர். அரசாங்கத்தின் சமூக நலத்துறையின் மூலம் மக்களுக்கு சென்றடையும் உதவிகள் சரியாகச் செல்கிறதா என்பதை உறுதிசெய்வதே அவருடைய முக்கியமான வேலை எனத் தெரிவித்துள்ளனர். பலரது நம்பிக்கையையும் சம்பாதித்துள்ள விம்லா குமாரிக்கு, அம்மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.

Credits : Hindustan Times

` ஒரு மாத பென்ஷன்; சுகாதாரப் பணியாளர்களுக்கு மாஸ்க்..!' - அசரவைக்கும் 95 வயது மூதாட்டியின் சேவை
அடுத்த கட்டுரைக்கு